‘‘தமிழ்நாட்டில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளைத் தொடங்க அனுமதிக்க முடியாது’’ என்று தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைக்கு எதிராக இப்பள்ளிகள் அமைந்துள்ளதே இதற்கு முக்கியக் காரணம் என அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் விளக்கியுள்ளது.
தமிழ்நாடு அரசு நீண்டகாலமாகப் பின்பற்றி வரும் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கைக்கு ‘நவோதயா’ பள்ளிகளின் பாடத்திட்டம் முரணாக உள்ளது. மாநிலத்தின் கல்விக் கொள்கையையும், மொழி உணர்வையும் பாதுகாப்பதில் அரசு உறுதியாக இருப்பதை இந்தப் பிரமாணப் பத்திரம் தெளிவுபடுத்துகிறது.
‘நவோதயா’ பள்ளிகள் இல்லாமலேயே தமிழ்நாட்டின் கல்வித் தரம் இந்திய அளவில் முதன்மையான இடத்தில் இருப்பதாக அரசு குறிப்பிட்டுள்ளது.
மாநில அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும், தரமான கல்வியும் தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசின் சீரிய நடவடிக்கைகளால், அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் மேம்பட்டுள்ளது. இதற்குச் சான்றாக, 2024-2025 கல்வியாண்டில் மட்டும் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பயின்ற 1,340 மாணவர்கள் அகில இந்திய அளவில் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் (IIT, NIT, AIIMS போன்றவற்றில்) சேர்க்கை பெற்றுள்ளனர் என்பதை அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
கிராமப்புற மாணவர்களுக்குச் சிறந்த கல்வியை வழங்க மாநில அரசே போதுமான திட்டங்களைச் செயல்படுத்தி வருவதால், ஒன்றிய அரசின் ‘நவோதயா’ பள்ளிகளுக்கான அவசியம் தமிழ்நாட்டில் எழவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் வகையில் உலகத்தரம் வாய்ந்த கல்வியை மாநிலப் பாடத்திட்டத்தின் மூலமே வழங்க அரசு உறுதிபூண்டுள்ளதாக அந்தப் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
‘நவோதயா’ பள்ளிகளைத் திறப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் (டிசம்பர் 15, 2025 அன்று) விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறும்போது –
‘‘ஜவகர் நவோதயா பள்ளிகள் விவகாரத்தை ஒரு மொழிப் பிரச்சினையாக மாற்ற வேண்டாம். இந்தியா ஒரு கூட்டாட்சி சமூகம் என்றும், தமிழ்நாடு இந்தக் குடியரசின் ஒரு பகுதி என்றும், இதில் ஒரு மாநிலம் “எனது மாநிலம்” என்ற குறுகிய அணுகுமுறையைக் கொண்டிருக்கக் கூடாது. ‘நவோதயா’ பள்ளிகளை மாநிலத்தின் மீது திணிக்கப்படும் ஒன்றாகப் பார்க்காமல், அது மாணவர்களுக்கான ஒரு சிறந்த வாய்ப்பாகக் கருதப்பட வேண்டும். தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை குறித்து ஒன்றிய அரசு செயலாளர்களிடம் விரிவாக எடுத்துரைத்து, இந்தப் பள்ளிகளைத் தொடங்குவது குறித்து ஒன்றிய அரசுடன் ஆலோசனைகளை நடத்துங்கள்’’ என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், “நீங்கள் ஒரு படி முன்னே வந்தால், ஒன்றிய அரசும் ஒரு படி முன்னே வரும்” என்று குறிப்பிட்ட நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தில் இரு தரப்பும் இணக்கமான சூழலை உருவாக்க வேண்டும்’’ என்றும் கூறி விளக்கம் கேட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1986ஆம் ஆண்டு ‘நவோதயா’ கல்வியைக் கொண்டு வந்த போதே – அன்றைய முதலமைச்சர் மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் அவர்கள் அதனைக் கடுமையாக எதிர்த்தார்.
இந்நிலையில், ‘நவோதயா’ கல்வித் திட்டத்தை எதிர்த்து திருச்சியில் திராவிடர் கழகம் மாநாடு ஒன்றை நடத்தியது (10.6.1986)
அம்மாநாட்டில் உரையாற்றிய அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள், ‘‘மாநில அரசே சிறப்பாகக் கல்விக் கூடங்களை நடத்தும் நிலையில், தனியே மாநிலத்திற்குள் ஒன்றிய அரசு கல்விக்கூடங்களை நடத்த வேண்டிய அவசியம் என்ன? ஏனிந்த குழப்பம்? ஒன்றிய அரசு நேரடியாக மாநிலத்திற்குள் பள்ளிகளை நடத்துவதற்குப் பதிலாக, மாநிலங்களுக்கு கூடுதல் நிதியை அளித்து, மாநில அரசு நடத்தும் பள்ளிகளை மேன்மைப்படுத்தலாமே!’’ என்ற கருத்தை முன் வைத்தார்.
அம்மாநாட்டில் உரையாற்றிய கல்வி நெறிக் காவலர் திரு. நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள், ‘‘நவோதயா கல்வி என்பது குடிசைக்குப் பக்கத்தில் பெரிய பங்களா கட்டுவது போன்றது’’ என்று மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டினார்.
அம்மாநாட்டின் தீர்மானத்தின்படி நவோதயா கல்வித் திட்டம் நகலை எரிக்கும் போராட்டத்தை திராவிடர் கழகம் நடத்தியது (21.6.1986) 120 தோழர்களுடன் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கைதாகி 14 நாள் சிறைக்குப்பின் விடுதலையானார்.
தொடக்க முதலே ‘நவோதயா’ கல்வித் திட்டத்தை தமிழ்நாடு எதிர்த்து வந்திருக்கும் நிலையில், இப்பொழுது 40 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ‘நவோதயா’ கல்வியைத் திணிக்கும் ஒன்றிய பிஜேபி அரசின் நோக்கம்தான் என்ன?
‘தேசிய கல்விக் கொள்கை’ என்ற பெயரால் ஹிந்தியைத் திணிக்க ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பிஜேபி அரசு திட்டமிட்டிருந்தது – அதனைத் தமிழ்நாடு முறியடித்த நிலையில், இப்பொழுது மீண்டும் ‘நவோதயா’ என்ற பெயரில் ஹிந்தி – சமஸ்கிருதத்தைத் திணிக்கலாம் என்ற திட்டத்தில் காயை நகர்த்தப் பார்க்கிறார்கள்.
இவ்வாறிருக்கும்போது, இதில் நீதிமன்றம் மூக்கை நுழைக்கத் தேவையில்லை. இது மாநில அரசின் கொள்கையைச் சார்ந்தது.
தமிழ்நாடு முதலமைச்சர் சொன்னது போல எந்த ஒரு முகமூடியை பிஜேபி போட்டு வந்தாலும், தந்தை பெரியார் மண், திராவிடயியல் கொள்கை வேர்ப் பிடித்த மண் நிராகரித்து விடும் – நிர்மூலமாக்கி விடும் – எச்சரிக்கை!
