ஒருவர் வாழ்வின் அடிப்படையே தன்னம்பிக்கை தான். எந்தவொரு செயலைச் செய்வதாயினும் அதற்கு அடிப்படை தன்னம்பிக்கையாகும். ‘நம்மால் முடியும்’ என்ற உறுதி உந்துவதன் விளைவாகவே செயல்கள் செய்யப்படுகின்றன. ஓடுதல், நீந்துதல், போட்டியில் பங்கு பெறல், மரத்தில் ஏறுதல், பள்ளத்தைத் தாண்டுதல், படித்தல், நடித்தல் என்று எதைச் செய்வதாயினும் ‘நம்மால் முடியும்’ என்ற நம்பிக்கை இருக்க வேண்டியது கட்டாயம்.
சைக்கிள் ஓட்டும் முன்னும், கார் ஓட்டும் முன்னும், போட்டிகளில் கலந்து கொள்ளும் முன்னும், சாதனைகள் புரியும் முன்னும், புதிய முயற்சியில் இறங்கும் முன்னும் தன்னம்பிக்கை கட்டாயம் வேண்டும். தன்னால் முடியும், தனக்கு அத்தகுதியும், திறனும் உண்டு என்று உறுதியாய் நம்ப வேண்டும்.

பறவை வானில் பறக்கிறது, நாம் ஏன் பறக்கக் கூடாது? மீன் நீரில் நீந்துகிறது, நாம் ஏன் நீந்தக்கூடாது? வாத்து நீரில் மிதந்து செல்கிறது, நாம் ஏன் மிதந்து செல்லக் கூடாது? என்று தன்னுள் வினா எழுப்பி, அதற்கான முயற்சியில் இறங்கியதன் விளைவே வானூர்தி, படகு, கப்பல் என பல கண்டுபிடிக்கப்பட்டன.
பறவை மட்டுமே பறக்க முடியும், மீன் மட்டுமே நீந்த முடியும், வாத்து மட்டுமே மிதக்க முடியும் அப்படித்தான் கடவுள் படைத்துள்ளது; கடவுள் படைப்பை நாம் மீறிச் செய்ய முடியுமா? என்று எண்ணியிருந்தால் இவையெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டிருக்குமா?
ஆன்மிக நம்பிக்கைகள் தன்னம்பிக்கையைத் தகர்க்கக் கூடியவை; ஆளுமையை அழிக்கக் கூடியவை. எனவே அதை அறிவால் தகர்த்து, சிந்தித்து, உண்மை கண்டு, ஊக்கத்துடன் முயன்றால் மட்டுமே சாதனைகள் சாத்தியமாகும்! அப்படி ஆன்மிக நம்பிக்கைகளைத் தகர்த்து தன்னம்பிக்கையுடன் முயன்றதன் விளைவே இச்சாதனங்கள்.
ஆன்மிகம் என்ன சொல்கிறது?
“அவனன்றி ஓர் அணுவும் அசையாது!”
“கடவுள் விதித்த விதிப்படியே எல்லாம் நடக்கும்!”
“சென்ற பிறவியில் செய்த புண்ணிய பாவங்களுக்கு ஏற்பவே இந்தப் பிறவி வாழ்வு அமையும்!”
கடவுள் படைக்கும் போதே பார்ப்பனரை உயர் ஜாதியாகவும், அறிவுடையவராகவும், கல்விக்குரியவராகவும் படைத்துவிட்டது. சத்திரியரை போர் புரிகின்ற வல்லமை உடையவராகப் படைத்துவிட்டது. வைசியரை வணிகம் செய்யக் கூடியவர்களாகப் படைத்த கடவுள், சூத்திரர்களை அடிமை வேலை செய்வதற்காகவே படைத்துவிட்டது என்று ஆன்மிகம் கூறுகிறது. அதையே நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தியது. அதை மீறி யாரும் நடக்கக் கூடாது. நடந்தால் தண்டனை வழங்கப்பட்டது.

பொது வீதியில் நடக்கவும், பொது நீர் நிலையைப் பயன்படுத்தவும் தடை செய்யப்பட்டனர். இந்த நிலை 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை நடப்பில் இருந்தது. கடவுள் பெயரால், சாஸ்திரத்தின் பெயரால் சுருங்கச் சொன்னால் ஆன்மிகத்தின் பெயரால் இப்படிச் செய்யப்பட்டது.
90 விழுக்காடு மக்கள் அடிமை வேலைச் செய்யக்கூடியவர்களாக ஆக்கப்பட்டனர். அவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது. உரிமைகள் மறுக்கப்பட்டன. நாயினும், பன்றியினும் கீழாக இழிவாய் நடத்தப்பட்டனர். அந்த 90 விழுக்காடு மக்களின் தன்னம்பிக்கை தகர்க்கப்பட்டு, ஆளுமை அழிக்கப்பட்டது, தன்மானம் பறிக்கப்பட்டது.
கடவுள் விதித்த விதி! முற்பிறவியில் நாம் செய்த பாவம். அதனால் நாம் சூத்திரனாகப் பிறந்துவிட்டோம். எனவே சாஸ்திரப்படி, நாம் நடந்தாக வேண்டும் என்று அவர்கள் தனக்குள் சமாதானம் அடைந்தார்கள். எதிர்த்துப் பேசாமல், உரிமைக் குரல் எழுப்பாமல் அடங்கி, ஒடுங்கி, ஆமையாய், ஊமையாய், கோழையாய் வந்தார்கள்.
அவர்கள் ஆளுமையை, உணர்வை, எழுச்சியை, சிந்தனையை, உரிமைக் குரலை ஆன்மிக நம்பிக்கைகள் அடக்கி ஒடுக்கின.
சுயமரியாதை எழுச்சி
ஆனால், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், சாகு மகராஜ், ஜோதிராவ் பூலே போன்ற புரட்சியாளர்களால் சுயமரியாதை உணர்ச்சியும், பகுத்தறிவு சிந்தனைகளும், உரிமைக் குரலும் ஓங்கி எழுந்தன.

கடவுள் என்றால் அது எல்லோருக்கும் பொதுவானதாகத் தானே இருக்க முடியும்? 10 விழுக்காடு மக்களை உயர்ந்தவர்களாகவும், உரிமையுள்ளவர்களாகவும் 90 விழுக்காடு மக்களைத் தாழ்ந்தவர்களாகவும், உரிமையற்றவர்களாகவும் எப்படிப் படைத்திருக்கும்? இவையெல்லாம் உயர்ஜாதி ஆதிக்கவாதிகளின் சதிச் செயல்கள், சூழ்ச்சிகள், மோசடிகள் என்ற தெளிவு வந்தது.
நாங்கள் யாருக்கும் அடிமையல்ல! உனக்குள்ள எல்லா உரிமையும் எனக்கும் உண்டு! எங்களாலும் படிக்க முடியும், எல்லாத் துறைகளிலும் சாதிக்க முடியும்! எங்களுக்கும் எல்லா உணர்வுகளும் உண்டு, மான மரியாதையும், உயர்நிலையும், பதவியும், அதிகாரங்களும், ஆளும் உரிமையும் வேண்டும்! என்ற உரிமை முழக்கம் சுயமரியாதை உணர்வின் அடிப்படையில் ஒலிக்கப்பட்டது; சுயமரியாதைப் பிரச்சாரம் தெருவெல்லாம் நடந்தது. தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் தலைமையேற்று மக்களுக்கு விழிப்பூட்டினர்; உணர்வூட்டினர்; அறிவு ஊட்டினர்.
மக்களாட்சி மலர்ந்தது!
ஆன்மிகத்தின் அடிப்படையில், சாஸ்திரங்களின் அடிப்படையில், கடவுளைக் காரணம் காட்டி எந்த மக்களையும் அடக்கி ஒடுக்கக்கூடாது. எல்லோருக்கும் எல்லாமும் உண்டு. அவற்றை அடையும் வகையில், சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். ஆட்சி – அதிகாரம் அனைவரும் பெறும் வகையில் மக்களாட்சி வேண்டும். அனைவருக்கும் வாக்குரிமை வேண்டும் என்பதை வலியுறுத்திப் போராட்டங்கள் நடத்தப்பபட்டன.
இந்திய வரலாற்றில், மன்னராட்சி, அந்நியர் ஆட்சி என்ற நிலை முடிவுக்கு வந்து, நம்மை நாமே ஆளும் மக்களாட்சி முறை 1950இல் கொண்டு வரப்பட்டது.
எல்லோரும் சமம்!
நாட்டு மக்கள் அனைவரும் சமம். எல்லோருக்கும் எல்லா உரிமைகளும் உண்டு. எவரும் எவருக்கும் கீழானவரோ, மேலானவரோ அல்ல; எவரும் எவருக்கும் அடிமையும் அல்ல. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று அரசியல் சாசனம் நடப்புக்கு வந்தது.
கடவுள், மதம், விதி, பிறவி, பாவ புண்ணியம் போன்றவை தனி மனித நம்பிக்கைகள். சாஸ்திரங்கள் சட்டமாக முடியாது. சட்டங்கள் மக்களுக்காக மக்களால் கால வளர்ச்சிக்கு, கால மாற்றத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட வேண்டும் என்ற மனித உரிமைக் கோட்பாடுகள் நடப்புக்கு வந்தன.
அதன்மூலம் சாஸ்திர, ஆன்மிக சட்டங்கள் ஓரங்கட்டப்பட்டன. சட்டப்படி செல்லாதவை ஆயின.
முழு தன்னம்பிக்கை
ஆளுமைக்கு அடிப்படை தன்னம்பிக்கை என்பதால், அத்தன்னம்பிக்கை முழுமையாகவும் இருக்க வேண்டும். அதில் மூடநம்பிக்கைகள் சேர்ந்தால் அது தன்னம்பிக்கையைத் தகர்த்து ஆளுமையையும் தகர்த்துவிடும்!
ஒரு மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய முற்படும் போது தன்மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும். ‘தன்னால் முடியும், தனக்கு அதற்குரிய தகுதியும், திறமையும் உள்ளது’ என்று முழுமையாக நம்ப வேண்டும்.
‘மாறாக கடவுள் இருக்கிறார்; கைவிடமாட்டார். அவரை நம்பி இந்த அறுவைச் சிகிச்சை செய்வோம்’ என்று அந்த மருத்துவர் அறுவை சிகிச்சையை செய்தால் அந்த அறுவை சிகிச்சை வெற்றிபெற வாய்ப்பே இல்லை.
அறுவை சிகிச்சை வல்லுநர் என்பவர் ‘தன்னால் முடியும்’ என்று நம்பி ஆளுமையுடன் செயல்பட வேண்டும். அறுவை சிகிச்சையை செய்வது நான் தான். அதற்கு நானே முழுப் பொறுப்பு என்று எண்ண வேண்டும்.அதற்கு மாறாய் கடவுள் மீது பாரத்தைப் போட்டு அறுவை சிகிச்சை செய்வோம், அவர் பார்த்துக் கொள்வார் என்று நம்பி, முடிவு செய்து அறுவை சிகிச்சை செய்தால் அவர் மருத்துவருக்குரிய தகுதியே அற்றவர் என்பதே அர்த்தம்.
மருத்துவம் படித்தவர் கடவுள் அல்ல; அறுவை சிகிச்சைக்குச் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர் கடவுள் அல்ல; இந்த இரண்டையும் பெற்றவர் மருத்துவர். அப்படியிருக்கக் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று முடிவு செய்து அறுவை சிகிச்சையை அவர் மேற்கொள்வது தப்பான செயல் ஆகும். கடவுள் கைகொடுப்பார், பார்த்துக் கொள்வார் என்ற முடிவு எப்படிச் சரியாகும்? எந்த அடிப்படையில் கடவுள் பொறுப்பேற்க முடியும்? அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்தானே முழுப் பொறுப்பு ஏற்கவேண்டும்?
ஒரு எடை தூக்கும் வீரர் 100 கிலோ எடையைத் தூக்குவதற்கு முன், தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையில் மட்டுமே எடையைத் தூக்க முடியும். மாறாக கடவுள் கைகொடுப்பார் என்று அந்த வீரன் நம்பினால் அது மூடநம்பிக்கையல்லவா? அது உண்மைக்கு எதிரான நம்பிக்கையல்லவா?
ஒரு தேர்வு எழுதும் மாணவன் ‘நான் நன்றாகப் படித்துள்ளேன், சிறப்பாக தேர்வு எழுதுவேன்’ என்ற தன்னம்பிக்கையால் தேர்வு எழுதினால் தான் சிறப்பாக தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற முடியும். மாறாக, ‘கடவுளுக்கு வேண்டுதல் போட்டுள்ளேன்; நேர்த்திக் கடன் நிறைவேற்றியுள்ளேன். கடவுள் கை கொடுப்பார் – தேர்வை நன்றாக எழுதுவேன்’ என்று நம்பினால் அது மூடநம்பிக்கையல்லவா?
ஆக, மருத்துவரோ, போட்டியாளரோ தேர்வு எழுதும் மாணவர்களோ – யாராயினும், தங்கள் மீதும் தங்கள் திறமையின் மீதும், தங்கள் பயிற்சியின் மீது நம்பிக்கை வைக்கவேண்டுமே ஒழிய, மூடநம்பிககையின் அடிப்படையில் அச்செயல்களில் ஈடுபடுவது அறியாமையின் பாற்பட்ட மிகத் தவறான செயலாகும். தங்கள் ஆளுமையை இழக்கும் செயலாகும்.
இஸ்ரோ விஞ்ஞானிகளும் ஏழுமலையானும்!
அறிவியல் கற்று, அறிவு நுட்பத்தின், உண்மை காணலின் உச்சத்தில் இருக்கக் கூடிய விஞ்ஞானிகளே மூடநம்பிக்கையில் முன்னணியில் நிற்பது வேதனைக்குரியதாகும்.
ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அல்லது நிலவுக்கு அல்லது வேறு கோள்களுக்கு விண்கலங்களை ஏவுவது அறிவியல் அடிப்படையில் நிகழ்த்தப்படுவதாகும். ‘கடவுள்’ என்ற மூடநம்பிக்கைக்கு எதிரான அறிவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் ஏவப்படுவது.
ராக்கெட் ஏவுவதில் ஒவ்வொரு நொடியும் கணக்கிடப்பட்டு துல்லியமாகத் திட்டமிட்டு செயல்பட வேண்டிய நுட்பமான செயல் திட்டங்கள் உள்ளன. ஒரு சிறு பிழை நேர்ந்தாலும் தோல்வியில் முடியும். அப்படிப்பட்ட சவால் நிறைந்த அறிவியல் நுட்பம் நிறைந்த, மிகக் கவனத்தோடு செயல்பட வேண்டிய ஒரு செயல்திட்டத்தை நிறைவேற்ற ஏழுமலையானுக்குப் படையல் போட்டுவிட்டு அப்பணியைச் செய்வது எவ்வளவு பெரிய தப்பு?
ராக்கெட் ஏவுவதில் ஏழுமலையான் பங்கு என்ன? அவர் என்ன இயற்பியல் படித்தவரா? ராக்கெட் தொழில்நுட்ப கர்த்தாவா? அவர் எந்த வகையில் இப்பணியில் உதவ முடியும்? வெற்றிகரமாக ஏவ எப்படித் துணை நிற்க முடியும்? சிந்திக்க வேண்டாமா?
அயல் நாட்டுப் படையோடு மோதும் நமது ராணுவ வீரர்கள் தங்கள் திறமையிலும், தங்கள் தொழில்நுட்பத்திலும் நம்பிக்கை வைக்காது, கடவுளுக்கு வேண்டுதல் செய்து, வேள்வி நடத்தினால் வெற்றி கிடைக்குமா? கடவுள் நம் இராணுவம் வெல்ல எந்த வகையில் உதவ முடியும்? கடவுள் உதவும் என்றால், எதிரி நாட்டவரும் கடவுளுக்கு வேண்டுதல் செய்தால் போர் கடவுளுக்கும் கடவுளுக்குமாக அல்லவா மாறிவிடும்? கேலிக்குரிய, நகைப்பிற்குரிய, நம்பிக்கைகள் நம் விஞ்ஞானிகளையும், இராணுவ வீரர்களையும், பட்டம் படித்தவர்களையும் ஆட்டிப் படைக்கிறதென்றால் பாமர மக்களின் நிலை என்னாவது?
மனிதன் என்பவன் ஆளுமையின் அடையாளம். ஆளுமைக்கு அடிப்படை தன்னம்பிக்கை. எனவே, 100 விழுக்காடு தன்னம்பிக்கை மட்டுமே ஆளுமைக்குரிய அடையாளம். அதில் கடவுள் நம்பிக்கை கலந்தால் ஆளுமை அடியோடு தகர்ந்து போகும்.
எனவே, ஒவ்வொருவரும் தங்கள் திறமையில், உழைப்பில், அறிவில், ஆற்றலில் நம்பிக்கை கொள்ள வேண்டும். மாறாக கடவுள் என்ற கற்பனையின் மீது நம்பிக்கை கொள்வது, அறிவியலுக்குப் புறம்பான செயலாகும். எனவே, ஆளுமையைத் தகர்க்கும் ஆன்மிக நம்பிக்கைகளை அறவே கைவிட்டு, அறிவின் மீதும், ஆற்றல் மீதும் நம்பிக்கை வைத்து நம் பணிகளைச் செய்ய வேண்டியது கட்டாயமாகும்! அதுவே ஆளுமைக்கு அழகு!
