சென்னை, மார்ச்.13 தமிழ்நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
மேற்காசியப் போர்ச்சூழல் காரணமாக, தற்போது ஏற்பட்டிருக் கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள, 2 நாட்களுக்கு முன்பு உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டதோடு, சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு, பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருள் விநியோகம் குறித்து பிரதமருக்கும். தொடர்புடைய ஒன்றிய அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் அர.சக்கர பாணி தலைமையில் எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றுள்ளது. போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ, பதற்றம் கொள்ளவோ வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
பரூக் அப்துல்லாவை கொல்ல முயற்சி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சிறீநகர்,மார்ச் 13 ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மேனாள் முதலமைச்சரும், நேஷனல் கான்ஃபரன்ஸ் கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, ஒருவர் அவர்மீது துப்பாக்கச்சூடு நடத்தினார்.
பரூக் அப்துல்லா மீதான இந்த தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில்,
‘பரூக் அப்துல்லா மீதான படுகொலை முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுபோன்ற வன்முறைச் செயல்கள் ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்பதை அறிந்து நிம்மதி அடைகிறேன். அவருக்கும் உமர் அப்துல்லாவிற்கும் எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் பதவி ஏற்றார்
சென்னை, மார்ச்.13 தமிழ்நாட்டு பொறுப்பு ஆளுநராக ஆர்.வி.அர்லேகருக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழ்நாடு ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, மேற்கு வங்க மாநில ஆளுநராகவும், கேரள மாநில ஆளுநராக இருந்து வரும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராகவும் செயல்படுவார் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவித்திருந்தார்.
அதன்படி, தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. ஆர்.வி.அர்லேகருக்கு, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
