1953 இல் இராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டம் மட்டும் நிலைத்திருந்தால்…?
‘திராவிட மாடல்’ ஆட்சி வந்திருக்குமா? ‘நான் முதல்வன் திட்டம்’ வந்திருக்குமா?
கோவை, மார்ச் 13 ‘‘தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படித்தது சாதாரண படிப்பு அல்ல; அவருக்குக் கற்றுக் கொடுத்தது கலைஞர்! அவருக்குக் கற்றுக் கொடுத்தது அண்ணா! அவருக்குக் கற்றுக் கொடுத்தது பெரியார்!” என்றும், திராவிடர் இயக்கம் எதற்கும் அஞ்சாது என்பதை, “திராவிடர் இயக்கம் நெருப்பு ஆற்றில் மெழுகுப் படகில் பயணம் செய்து கரைந்து போய்விடாமல், வெற்றியைப் பெற்றிருக்கிறது” என்று கலைஞர் குறிப்பிட்டதையும் இக்காலத்திற்கு பொருத்தமாகச் சுட்டிக்காட்டி, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பீளமேட்டில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றினார்.
2026 இல் சட்டமன்ற தேர்தலும் –
வாக்காளர் கடமையும்!
கோயமுத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், ‘‘அன்னை மணியம்மையார் 107 ஆம் பிறந்தநாள் விழா! பெரியார் உலகத்துக்கு நிதியளிப்பு விழா! 2026 இல் சட்டமன்றத் தேர்தலும் – வாக்காளர் கடமையும்’’ என்று மூன்று தலைப்புகளில், முப்பெரும் விழாவாக 10.3.2026 செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணி முதல், இரவு 9.30 மணி வரை கோவை பீளமேடு பகுதியில் உள்ள ரொட்டிக்கடை மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் அனைவரையும் வரவேற்று உரையாற்ற, மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகர் தலைமையேற்று சிறப்பித்தார். மாவட்ட மகளிரணித் தலைவர் இர.முத்து மணி, செயலாளர் ப.கலைச்செல்வி, தி.மு.க. பகுதிக் கழகச் செயலாளர் நடராஜ், பீளமேடு பகுதி கழகத் தலைவர் பு.முருகானந்தம், கழக மாநகரத் தலைவர் தி.க. செந்தில்நாதன், 26 ஆம் வட்டம் மாமன்ற ம.தி.மு.க. உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, திருப்பூர் மாவட்டத் தலைவர் பல்லடம் இளங்கோவன், பெரியார் மருத்துவக் குழுமத் தலைவர் மருத்துவர் இரா.கவுதமன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் பணியை மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் மேற்கொண்டார்.
பொறுப்பாளர்கள்
கோவை நகரச் செயலாளர் புலியகுளம் வீரமணி, கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் துரை.செந்தமிழ் செல்வன், தி.மு.க. மாநில மாணவரணிச் செய லாளர் இரா.இராஜீவ் காந்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை கு.ராமகிருஷ்ணன், திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர்
சே.மெ.மதிவதனி ஆகியோர் உரையாற்றியதைத் தொடர்ந்து, அன்னை மணியம்மையார் படத்தை திறந்து வைத்தும், ”வந்தே மாதரம் வாழ்த்துப் பாடலா? வசைப் பாடலா?”, ”முதல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் – வரலாற்றைத் திரிப்பது யார்?” ஆகிய இரண்டு புத்த கங்களை பேராசிரியர் மு.தவமணி வெளியிட்டும் உரையாற்றினார்.

பெரியார் உலக நிதியளிப்பு!
வெளியிடப்பட்ட புத்தகங்களை மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாவட்ட மகளிரணித் தலைவர் முத்துமணி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அதன் பின்னர் பெரியார் உலகம் நிதியளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. பேராசிரியர் தவமணி ஒரு லட்சம் ரூபாய், கோவை கு.ராமகிருஷ்ணன் ஒரு லட்சம் ரூபாய் காசோலைகளாக கழகத் தலைவரிடம் வழங்கினர். தொடர்ந்து, தோழர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் மேடையேறி தங்களால் முடிந்த நிதியை கழகத் தலைவரிடம் வழங்கி மகிழ்ந்தனர். கோவை மாவட்டம் சார்பில் முதல் தவணையாக மொத்தம் ரூபாய் 10,50,000/- வழங்கியதாக அறிவிப்பு செய்யப்பட்டது. அதே மேடையில் தாராபுரம் மாவட்டம் சார்பில் ரூபாய் 3,01,000/- கோபிசெட்டிப்பாளையம் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன், கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஈரோடு த.சண்முகம் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வையும் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் நெறிப்படுத்தினார்.
130 ரூபாய் மதிப்புடைய அய்ந்து புத்தகங்கள் 30 ரூபாய் தள்ளுபடியில்…
தொடர்ந்து அபினேஷ் – யாழினி ஆகியோரின் பெண் குழந்தைக்கு, ”இயல் இசை” என்று பெயர் சூட்டினார். மாவட்ட மகளிரணிச் செயலாளர் கலைச்செல்வி – சிவக்குமார் ஆகியோரின் மகள்கள் பெரியார் பிஞ்சுகள் இனியா, புகழினி மற்றும் சித்ரவேல் – சகாயமேரி ஆகியோரின் பேத்தி யாதிர் ஆகிய மூவரும் தாங்கள் சேர்த்து வைத்திருந்த உண்டியல் சேமிப்பை கழகத் தலைவரிடம், பெரியார் உலகம் நிதியென வழங்கி, பார்ப்போரை நெகிழச் செய்து விட்டனர். மேடையில் உள்ளோருக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் பயனாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பேராசிரியர் தவமணி வெளியிட்ட, ‘‘வந்தே மாதரம் வாழ்த்துப் பாடலா? வசைப் பாடலா?’’, ‘‘முதல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் – வரலாற்றைத் திரிப்பது யார்?’’ ஆகிய புத்தகங்களுடன், தஞ்சை மகளிரணி – பாசறை மாநில மாநாட்டில் வெளியிடப்பட்ட 50 ஆம் பதிப்பு கண்ட‘‘பெண் ஏன் அடிமையானாள்?’’, ‘‘அறிஞர் அண்ணாவின் கடைசிக் கடிதம்’’, ‘‘பெண்கள் முன்னேற்றத்திற்கு தந்தை பெரியார் செய்தது என்ன?’’ ஆகிய மூன்று புத்தகங்களுடன் சேர்ந்து 130 ரூபாய் மதிப்புடைய அய்ந்து புத்தகங்கள் 30 ரூபாய் தள்ளுபடியில் ரூபாய் 100/- க்கு வழங்கப்பட்டது. கழகத் தோழர்கள் மற்றும் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த தோழர்கள், பொதுமக்கள் ஆகியோர், மிகுந்த ஆவலுடன் வரிசையாகச் சென்று உரிய தொகை கொடுத்து 5 புத்தகங்களையும் பெற்றுக்கொண்டனர். நிறைவாக கழகத் தலைவர் உரையாற்றினார்.
“நானும் தலை குனியமாட்டேன், தமிழ்நாட்டையும் தலை குனிய விடமாட்டேன்!’’
அவர் தமது உரையை, “1968 இல் பீளமேட்டில் இதே இடத்தில் தந்தை பெரியார் வந்து பேசியிருக்கிறார்” என்ற ஒரு முக்கியமான தகவலுடன் தொடங்கினார். அன்னை மணியம்மையாரின் 107 ஆண்டு பிறந்த நாளை நினைவூட்டி, தந்தை பெரியாரை 95 வயது வரை வாழ வைத்தவர் என்று நன்றியுடன் நினைவு கூர்ந்தார். அதைத் தொடர்ந்து எடுத்த எடுப்பிலேயே, “திராவிட மாடல் அரசு மீது இத்தனை அவதூறுகள் ஏன்?’’ என்ற கேள்வி கேட்டார். “ஏனெனில் அதுதான் அனைவருக்கும் அனைத்தும் என்று சொல்கிறது! அதுதான் ஒடுக்கப்பட்ட மக்களை கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் எழுச்சி கொள்ள வைக்கிறது” என்று பதில் சொன்னார். அந்த எழுச்சி எப்படிப்பட்டது என்பதையும், “நானும் தலை குனியமாட்டேன்” என்று தொடங்கி, உங்களையும் தலை குனிய விடமாட்டேன்; தமிழ்நாட்டையும் தலை குனிய விடமாட்டேன்” என்று முதுகெலும்புடன், துணிச்சலுடன் சொல்வதற்கு ஒரு முதலமைச்சர் இருக்கிறார். அவர்தான் முத்துவேல் கரு ணாநிதி ஸ்டாலின்” என்று முடித்ததும் கைதட்டல்களால் அந்தப்பகுதியே அதிர்ந்தது.
“அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் தொண்டறம்!”
மேலும் அவர், “வரலாற்றில் இந்த திராவிடர் இயக்கத்தை அழிப்பதற்காக எத்தனை பேர் வந்து, இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டார்கள் என்பதைச் சொல்வதற்கு, 1977 இல் கலைஞர், அன்னை மணியம்மையாருக்கு எழுதிய கடிதத்தை, “அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் தொண்டறம்” எனும் தலைப்பில், கழகத் தலைவரே தொகுத்திருக்கும் புத்தகத்திலிருந்து, வாசித்துக் காட்டினார். அதாவது, “நெருப்பு ஆற்றில் மெழுகுப் படகில் பயணம் செய்து நாங்கள் கரைந்து போகாமல் வெற்றியும் பெற்றிருக்கிறோம்” என்று கலைஞரின் கையெழுத்திலேயே வெளியிடப்பட்டுள்ளதை மக்களுக்குக் காட்டினார். மக்கள் வியந்து, கைதட்டினர்.
தமிழ்நாடு முதலமைச்சர் கோட்டை சிம்மாசனத்தை பிடிப்பதற்கு முன்பே, மக்களின் இதயச் சிம்மாசனத்தைப் பிடித்துவிட்டார்!”
தொடர்ந்து அவர், ‘‘அப்படிப்பட்ட திராவிடர் இயக்கத்தை இன்றைக்கு சிலர், புலிகளையே நேரில் பார்த்தவர்கள் மத்தியில் புலி வேடம் போட வந்திருக்கின்றனர்” என்று புதிதாக கட்சி தொடங்கி உள்ளவர்களை நாகரிகமாக விமர்சனம் செய்தார். அடுத்து ஒரு முக்கியமான வரலாற்றுத் தகவலை மக்கள் முன் எடுத்து வைத்தார். அதாவது, 1953 இல் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டம் மட்டும் நிலைத்திருந்தால்….?” என்று ஒரு இடைவெளிவிட்டு, ”இந்த திராவிட மாடல் ஆட்சி வந்திருக்குமா? நான் முதல்வன் திட்டம் வந்திருக்குமா? நமது மாணவர்கள் இந்திய அளவில் வெற்றி பெற முடியுமா?” என்று அடுக்கி நிறைவு செய்தார். மக்கள் தொடர்ந்து கைதட்டி கழகத் தலைவரின் கருத்தை ஆமோதித்தனர். அதே வேகத்தில், “ஆகவே இன்றைக்கு நடைபெற இருப்பது வெறும் தேர்தல் அல்ல; நமது வருங்காலத்தை உறுதிப்படுத்துவதற்காக” என்றார். அந்தப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் சிறப்பாக செயல்படுகிறார் என்பதைச் சுட்டிக்காட்ட, “தமிழ்நாட்டின் முதலமைச்சர் படித்தது சாதாரண படிப்பு அல்ல; அவருக்குக் கற்றுக் கொடுத்தது கலைஞர்! அவருக்குக் கற்றுக் கொடுத்தது அண்ணா! அவருக்குக் கற்றுக் கொடுத்தது பெரியார்!” என்று அடுக்கிக்கொண்டே இறங்கு முகத்தில் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் கற்ற கொள்கைக் கல்வியின் ஆழத்தை மக்களுக்கு எளிமையாக புரிய வைத்தார். மேலும் அவர், திராவிட நாகரிகம் என்பது வேதகால நாகரித்தை விட சிறந்தது என்றும், தமிழ்நாடு முதலமைச்சர் கோட்டை சிம்மாசனத்தை பிடிப்பதற்கு முன்பே, மக்களின் இதயச் சிம்மாசனத்தைப் பிடித்துவிட்டார்” என்றும், ‘‘மறுபடியும் திராவிட மாடல் அரசுதான் வரும்” என்றும் கூறி தமது உரையை நிறைவு செய்தார்.
நிறைவாக பீளமேடு பகுதிக் கழகச் செயலாளர் ரமேஷ் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
பங்கேற்றோர்
நிகழ்ச்சியில் பழ.அன்பரசு, திலகவதி, நாகமணி, பாக்கியலட்சுமி, திராவிடமணி, ஆ.மு.ராஜா, வெற்றிச்செல்வன், பாக்கியம், ஆர்.கணேசன், லூகாஸ் பீட்டர், செல்வக்குமார், முத்து கணேசன், கிருஷ்ணமூர்த்தி, முருகானந்தம், திருப்பூர் மாவட்டத் தலைவர் யாழ்.ஆறுச்சாமி, நீலமலை மாவட்டத் தலைவர் மு.நாகேந்திரன், கோபிசெட்டிப்பாளையம் மாவட்டச் செயலாளர் வெ.குணசேகரன், திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வேலு.இளங்கோவன், செயலாளர் மு.நாச்சிமுத்து, மாவட்ட தொழிலாளரணிச் செயலாளர் இரா.வெங்கடாசலம், மாவட்ட ப.க.செயலாளர் அக்ரி.நாக்ராஜ், ச.திலகமணி, மேட்டுப்பாளையம் மாவட்டத் தலைவர் சு.வேலுச்சாமி, செயலாளர் கா.சு.ரெங்கசாமி, தாராபுரம் மாவட்டத் தலைவர் க.கிருஷ்ணன், செயலாளர் ஜெ.தம்பிபிரபாகரன், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் தரும.வீரமணி, திருப்பூர் மாவட்டச் செயலாளர் மு.நாச்சிமுத்து, பொள்ளாச்சி மாவட்டத் தலைவர் சி.மாரிமுத்து, பகுத்தறிவாளர் கழகம் ஆடிட்டர் ஆனந்தராசு, கணபதி பகுதிச் செயலாளர் ஜா.திராவிடமணி மற்றும் அனைத்துக்கட்சித் தோழர்கள், பொதுமக்கள் ஆகியோர் கண்டு, கேட்டு தெளிவுப் பெற்றுச் சென்றனர்.
