சென்னை, மார்ச் 12 ‘நான் முதல்வன் திட்டம்’ மூலம் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ள தாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
அகில இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா, சென்னை விக்டோரியா பொது அரங்கத்தில் நேற்று (மார்ச் 11) நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றும்போது கூறியதாவது:
“யுபிஎஸ்சி தேர்விற்காக கடுமையாக உழைத்து, அதில் வெற்றி பெற்றிருக்கக் கூடிய அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் படைத்திருப்பது சாதாரண சாதனை இல்லை. இந்தியாவிலேயே ஏன், உலகிலேயே மிகவும் கடினமான தேர்வு என்று UPSC தேர்வைத்தான் சொல்வார்கள். இதற்கு தயாராகின்றவர்களின் மன வலிமையையும், ஒழுக்கத்தையும் சோதித்துப் பார்க்கக் கூடிய கடுமையான தேர்வு. அப்படிப்பட்ட தேர்வை உங்களில் சிலர் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றிருக்கிறீர்கள். சிலர் பல ஆண்டு கள் முயற்சிக்குப் பிறகு வெற்றி யடைந்திருக்கிறீர்கள்.
ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்னால் என்ன நிலை இருந்தது என்று அனைவருக்கும் நன்றாக தெரியும். தமிழ்நாட்டிலிருந்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றியடையும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து கொண்டே வந்தது. நம்முடைய திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பிறகு, அதனை உடனடியாக சரி செய்ய வேண்டுமென பல்வேறு முயற்சிகளை எடுத்தோம்.
நான் முதல்வன் திட்டம்!
நான் முதல்வன் திட்டத்தின் கீழ், ஊக்கத்தொகை, உயர் பயிற்சி, நேர்முகத் தேர்வுகளை எதிர் கொள்ளக் கூடிய சிறப்பு பயிற்சி என்று பல்வேறு முன்னெடுப்புகளை நம்முடைய அரசு எடுத்தது. அந்த முயற்சிகளுக்கு, அண்மைக்காலமாக நல்ல பலன் கிடைத்து வருகிறது. அதற்காக உழைத்த அதிகாரிகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும் இந்த நேரத்தில் என்னுடைய நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் தான் Silent Hero’s. இந்த ஆண்டு 60 பேர் நம்முடைய மாநிலத்திலிருந்து தேர்வாகியிருக்கிறீர்கள். அதில், 56 பேர் நான் முதல்வன் திட்டத்தால் பயனடைந்தவர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி. என்னைப் பொறுத்தவரை, இந்த எண்ணிக்கை இன்னும் உயர வேண்டும். உங்களை ‘ரோல் மாடலாக’ எடுத்துக் கொண்டு, இன்னும் பல இளைஞர்கள் தமிழ்நாட்டிலிருந்து இந்தியா முழுவதும் பல மாநிலங்களுக்குச் சென்று, பல்வேறு மாவட்டங்களில், ஆட்சியராக, பல்வேறு துறைகளில் செயலாளராக, நாட்டின் வளர்ச்சிக்கும் எளிய மக்களுக்கும் பணியாற்ற வேண்டும்.
ஏன், வெளிநாடுகளுக்கும் இந்தியத் தூதர்களாக சென்று, நாடுகளுக்கு இடை யிலான நல்லுறவை மேம்படுத்த வேண்டும். பொதுவாக, ஆட்சியில் இருக்கக் கூடிய நாங்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலை சந்தித்து மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். ஆனால், யுபிஎஸ்சி தேர்வில் வெற்றியடைந்த அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ்., போன்ற பொறுப்புகளில் அமரும் உங்களுக்கு அப்படிப்பட்ட ஒரு தேவை அமையவில்லை.
30 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ச்சி யாக பணியை செய்யக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. இந்த வாய்ப்பு உங்களை மேலும் பொறுப்புடையவர்களாக உயர்த்த வேண்டும். அடக்கத்தையும், மனிதநேயத்தையும் வளர்க்க வேண்டும். அதிகாரிகள் என்றால் அலட்டலாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. சாதாரண மக்களிடம் கூட அன்பாக, பண்பாக நடந்து கொண்டால் அதுதான் உங்கள் பெயரை காலத்திற்கும் நிலைக்க செய்யும். அப்படி, அன்பும், அடக்கமும், சமூகநீதி பார்வையும் அடிப்படையாக வைத்து இந்தியாவின் ஏற்றத்திற்கு நீங்கள் ஒவ்வொருவரும் உழைப்பீர்கள், தமிழ்நாட்டிற்கு பெருமையை தேடித் தருவீர்கள் என்று நம்புகிறேன்.
குறைந்தபட்சம் 5 நிமிடமாவது…
இனிமேல், உங்களின் வாழ்க்கை மிகவும் பிஸியாக மாறிவிடும். ஓய்வு என்பதே பெரும்பாலும் கிடையாது. அப்படிப்பட்ட கேரியரை தேர்ந்தெடுத்திருக்கும் உங்க ளுக்கு ஒரு அட்வைஸ், அதிகாரிகளாக நீங்கள் நாட்டை கவனிக்க வந்து விட்டா லும், உங்கள் வீட்டையும், குடும்பத்தையும் அதே அக்கறையுடன் கவனித்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு பிஸியாக இருந்தாலும், உங்கள் அப்பா-அம்மாவிற்கு, வாழ்க்கைத் துணைக்கு, குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கும் ஒரு 5 நிமிடம் குறைந்தபட்சம் ஒருமுறையாவது தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு “சாப்பிட்டீர்களா? மருந்து, மாத்திரை எடுத்துக் கொண்டீர்களா?” என்பதை அக்கறையுடன் கேட்க வேண்டும்.
உங்கள் கனவு நிறைவேறிவிட்டது, இனி மக்களின் கனவுகளை நிறைவேற்ற புறப்படுங்கள். ‘ஆல் தி பெஸ்ட்’ உங்களைப் போல இன்னும் பலரை நம்முடைய ‘திராவிட மாடல்’ அரசு உருவாக்குவதற்குத் தொடர்ந்து துணை நிற்கும்.”
– இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
