ஆம், டில்லிக்கும் தமிழ்நாட்டுக்கும்தான் போர்!

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருச்சி சிறுகனூரில் கடந்த 9.3.2026 அன்று மாலை நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில் உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை ஒரு கொள்கை சங்கநாதம் – பிரகடனம் என்றே சொல்ல வேண்டும்.

நடக்க இருப்பது சட்டமன்ற தேர்தல் தான் என்றாலும் உண்மையிலேயே இந்தத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் டில்லிக்கும் இடையே நடக்கும் தேர்தல்தான்; தமிழ்நாடு அணியா? டில்லி அணியா? என்று பார்க்கும் தேர்தல்தான் என்பது ஏதோ வார்த்தை அழகல்ல!

தமிழ்நாட்டுக்கும் டில்லிக்கும் இடையில் நடக்கும் சித்தாந்தப் போராட்டத்தைதான் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக என்ற முகமூடியைப் போட்டுக் கொண்டு வந்தால் எங்களுடைய தமிழ்நாட்டு மக்களுக்கு அடையாளம் தெரியாமல் போய்விடுமா? என்பது முதலமைச்சர் அடுத்து எழுப்பிய கேள்வியாகும்.

தமிழ்நாட்டை எப்படியாவது நம்மிடமிருந்து விழுங்கி விடலாம் என்று நினைக்கிறது காவிக் கூட்டம்! எங்கள் கருப்பு – சிவப்புப் பட்டாளம் இருக்கும் வரை அது நடக்கவே நடக்காது என்று இன்னும் பச்சையாகவே பாமரர்களும் புரிந்துகொள்ளும் வகையில் போட்டு உடைத்துக் காட்டியுள்ளார் முதலமைச்சர்.

நேரடியாக பா.ஜ.க. சொல்லிக் கொண்டு தமிழ்நாட்டில் பாதம் பதிக்க முடியாது. பா.ஜ.க. என்பது பார்ப்பனியத்தை உள்வாங்கிய இந்துத்துவா சித்தாந்தத்தை உயிராகக் கொண்டது.

தமிழ்நாடு சுயமரியாதை இயக்க மண் – தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டைக் கண்ட மண்!

பா.ஜ.க. என்ற ஆர்.எஸ்.எஸ். தோன்றி நூறுஆண்டு காலம் ஆனாலும் தமிழ்நாட்டில் சொல்லிக் கொள்ளும் வகையில் அடையாளம் தெரியாத ஒன்றாகும்.

காரணம், சுயமரியாதை இயக்கம் – திராவிட இயக்கம் என்பது பா.ஜ.க.வின் வருணாசிரமத்தை எதிர்க்கக் கூடியது! பிறவியில் ஏற்றத் தாழ்வு என்பதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளாத அளவுக்கு எதிர்ப் பிரச்சாரத்தையும், களங்களையும் கண்ட தந்தை பெரியாரின் திராவிட மண் இது.

ஒவ்வொரு கால கட்டத்திலும் மொழியின் பெயராலும், கல்வியின் பெயராலும் தங்களுடைய பார்ப்பனியக் கலாச்சாரத்தை – பண்பாட்டுப் படையெடுப்பைத் தொடங்கிய அந்த முளையிலேயே திராவிட இயக்கத்தால் வெட்டி எறியப்பட்டது என்பது வரலாறு.

‘மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும்’ என்ற நிபந்தனை வைக்கப்பட்ட நிலையில், அதனை வேராடு பிடுங்கி எறிந்த மண் இது.

1937ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் ஆட்சி  அதிகாரப் பீடத்தில் சக்ரவர்த்தி சி. ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) ஹிந்தியைத் திணித்தபோதே – அதனை எதிர்த்துப் போர்க் கொடி தூக்கிய மண் இது.

லயோலா கல்லூரியில் அப்பொழுது பேசிய முதலமைச்சர் ஆச்சாரியார், ‘‘சமஸ்கிருதத்தைப் படிப்படியாகக் கொண்டு வரவே ஹிந்தியைப் பாடத் திட்டத்தில் வைத்துள்ளேன்!’’ என்று அவரை அறியாமலேயே வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டதை நினைவு கூர்கிறோம். அப்பொழுதே ‘திராவிடமண்’ தீரமுடன் அந்தத் திட்டத்தைத் துரத்தியடித்து விட்டதே!

இன்றைக்கும், தேசியக் கல்வி என்றும், ‘நவோதயா’ கல்வி என்றும் நயவஞ்சகமாகத் திணிக்கும் திட்டத்தை அரங்கேற்ற ஒன்றிய பா.ஜ.க. அரசு துடித்துக் கொண்டு இருக்கும் நிலையில், அதற்கு எதிர் நிலை எடுத்திருக்கும் ஆட்சிதான் இன்றைய ‘திராவிட மாடல்’ தி.மு.க. அரசு!

1952ஆம்ஆண்டில் கொல்லைப்புற வழியாக சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக வந்த அதே ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்த போது – தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடே பொங்கி எழுந்தது – அந்த வெள்ளத்தில் அடித்து மூழ்கடிக்கப்பட்டது அந்த ஆச்சாரியாரின் ஆட்சி!

அதே கல்வித் திட்டத்தை வேறு பெயரில் ‘விஸ்வ கர்ம யோஜனா’ என்ற பெயரில் இன்றைய பா.ஜ.க. ஆட்சி கொண்டு வந்துள்ள நிலையில், அதன் குடுமியைப் பிடித்துக் உலுக்கி ‘வந்த வழியே மரியாதையாக ஓடி விடு!’ என்று எச்சரிக்கை அடித்த – அடிக்கின்ற மண் – இந்தத் திராவிட இயக்க மண்!

அந்த உணர்ச்சியோடுதான் திராவிட இயக்க அடிச்சுவட்டில் நடந்துவந்த நமது முதலமைச்சர் திருச்சி மாநகரத்திலே முழங்கினார் – முரசு கொட்டினார்!

இன்னொன்றையும் மிக நுணுக்கமாகக் கூறி இருக்கிறார் நமது முதலமைச்சர். ‘‘அ.தி.மு.க. என்ற முகமூடியை பா.ஜ.க. போட்டு வந்தாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு அடையாளம் தெரியாமல் போகுமா?’’ என்ற அர்த்தமிக்க வினாவையும் எழுப்பியுள்ளார்!

ஆம், ஒன்றிய பிஜேபி அரசின் அனைத்துத் திட்டங்களையும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கக் கூடியது தானே
அ.தி.மு.க.

மதுரையில் அ.தி.மு.க. முன்னணித் தலைவர்களை எதிரில் வைத்துக் கொண்டே தந்தை பெரியாரையும், அறிஞர் அண்ணாவையும் அவமதித்துப் பேசவில்லையா!

அண்மையில் மதுரையில் பிரதமர் மோடி வருகிறார் என்பதற்காக மாநாட்டு முகப்பில் வைக்கப்பட்ட தந்தை பெரியார் உருவப் படத்தை அகற்றியபோது – அந்த மாநாட்டின் பங்காளியாகிய அ.தி.மு.க. இதுவரை ஒரே ஒரு வார்த்தையால் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியதுண்டா?

தமிழ்நாட்டைப் பலவகைகளிலும் ஒன்றிய பிஜேபி அரசு வஞ்சித்து வருகிறதே – குறைந்தபட்சம் அதனைச் சுட்டிக் காட்டும் திராணியாவது அ.தி.மு.க.வுக்கு உண்டா?

இதைத்தான் முதலமைச்சர் திருச்சி மாநாட்டில் தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளார்;  ‘அ.தி.மு.க. முகமூடி அணிந்து பிஜேபி தமிழ்நாட்டை விழுங்கப் பார்க்கிறது’ என்று சரியான நேரத்தில் மாநாட்டைக் கூட்டி, சரியான வகையில் எதிரிகள் யார் – துரோகிகள் யார் – என்று அடையாளம் காட்டிய முதலமைச்சரின் உரையை வரவேற்கிறோம். அந்த உரையின் ஒலியை தமிழ்நாட்டின் பட்டிதொட்டிகளில் எல்லாம் கொண்டு செல்ல வேண்டும் என்பதே நமது விழைவு!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *