புதுடில்லி, மார்ச் 12- ‘அமெரிக்கா – இஸ்ரேல் படைகளால் குறிவைத்து, ஈரான் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட விவகாரத்தில், ஒன்றிய அரசின் மவுனம் நாட்டின் வெளியுறவு கொள்கையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது’ என, பார்லி., – காங்., குழு தலைவர் சோனியா குற்றஞ்சாட்டி உள்ளார்.
கவலை அளிக்கிறது
மேற்காசிய நாடான ஈரான் மீது, மற்றொரு மேற்காசிய நாடான இஸ்ரேல் உடன் இணைந்து, அமெரிக்கா சமீபத்தில் தாக்குதல் நடத்தியது. இதில், ஈரான் உச்ச தலைவராக இருந்த கமேனி, 86, கொல்லப்பட்டார். ஈரானும் பதிலடி கொடுப்பதால், மேற்காசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவுகிறது.
இந்த விவகாரம் குறித்து, ஆங்கில நாளிதழில், நாடாளுமன்ற – காங்கிரஸ் குழு தலைவர் சோனியா எழுதிய கட்டுரையில் தெரிவித்திருப்பதாவது:
அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில், ஈரான் உச்ச தலைவராக இருந்த கமேனி கொல்லப்பட்டிருக்கிறார். பேச்சு நடக்கும் போதே ஒரு நாட்டின் தலைவரை படுகொலை செய்வது பன்னாட்டு உறவுகளில் ஒரு மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தும்.
அதிர்ச்சி அளிக்கும் இந்நிகழ்வில், ஒன்றிய அரசின் மவுனம் அதை விட பெரிய கவலையை தருகிறது. ஈரானின் இறையாண்மை மீறப்பட்டதையோ அல்லது இந்த படுகொலையையோ மோடி அரசு இதுவரை கண்டிக்கவில்லை.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும்; மவுனத்துக்கான காரணம் குறித்து ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். தாக்குதலை முதலில் துவங்கிய அமெரிக்கா, இஸ்ரேல் பற்றி எதுவும் குறிப்பிடாத பிரதமர் மோடி, அய்க்கிய அரபு எமிரேட்ஸ் மீது ஈரான் நடத்திய பதில் தாக்குதலை மட்டும் கண்டித்துள்ளார். வெறும் சம்பிரதாயத்துக்காக, ஆழ்ந்த கவலை என அவர் கூறுகிறார்.
கேள்விக்குறி
ஒரு வெளிநாட்டு தலைவர் கொல்லப்பட்டது குறித்து , இறையாண்மை அடிப்படையிலும், பன்னாட்டு சட்டத்தின் அடிப்படையிலும் நம் நாடு தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி இருக்க வேண்டும். ஆனால், அப்படி எதையுமே ஒன்றிய அரசு செய்யவில்லை. இது நம் வெளிநாட்டு கொள்கையின் நம்பகத்தன்மையை கேள்விக் குறியாக்குகிறது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
