சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கழகத் தலைவர் வழிகாட்டும் உரை!

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தகுதி, திறமை என்பது எவ்வளவு பெரிய மோசடி என்பதற்கு
தோழர் ஆலடி அருணா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!

சென்னை, மார்ச் 10- “அநீதியான முறையில் அவரது வாழ்க்கை பறிக்கப்பட்டது” என்றும், “இதைத்தான் தந்தை பெரியார் இயற்கையின் கோணல் புத்தி என்று சொல்வார்” என்றும், “முழுமையடையாத பயணம் என்பது அவரது வாழ்க்கையை மட்டும் குறிக்கவில்லை. அவருடைய இலட்சிய பயணமும் அப்படித்தான்” என்றும் சுட்டிக்காட்டி கழகத் தலைவர் உரையாற்றினார்.

ஆலடி எழில்வாணன் எழுதிய, “சிந்தனைக் கனி திரு. ஆலடி அருணா – ஒரு முழுமையடையாத பயணம்” நூல் வெளியீட்டு விழா 7.3.2026, சனிக்கிழமை அன்று, சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில், மாலை 5 மணி முதல் 8:30 மணி வரை சிறப்பாக நடை பெற்றது. இந்நிகழ்வில் எமரால்டு பதிப்பகம் உரிமையாளர் முனைவர் கோ.ஒளிவண்ணன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். விழாவில் தலைமை ஏற்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நூலை வெளியிட்டு உரையாற்றினார். வேலூர் வி.அய்.டி. தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வேந்தர் கல்விக்கோ முனைவர் கோ.விசுவநாதன், நூலைப் பெற்றுக்கொண்டு உரையாற்றினார். தி.மு.க. வெளிநாடு வாழ் இந்தியர் நல அணித் தலைவர் மருத்துவர் கலாநிதி வீராசாமி எம்.பி. சிறப்புரையாற்றினார். எழுத்தாளர் – ஊடகவியலாளர்சூர்யா சேவியர் வாழ்த்துரை வழங்கினார். நூலாசிரியர் ஆலடி எழில் வாணன் ஏற்புரை வழங்கினார். அயன்ஸ்டீன் தொழில்நுட்பக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் லட்சுமி மணிபாலா இணைப்புரை வழங்கி நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.

நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை உரையை வழங்கினார். ரூபாய் 350/- மதிப்புடைய, “சிந்தனைக்கனி திரு.ஆலடி அருணா – ஒரு முழுமை அடையாத பயணம்” நூல், 300/- ரூபாய்க்கு நிகழ்ச்சிக்கான சிறப்பு தள்ளுபடியுடன் பெற்றுக் கொள்ளலாம் என்று புத்தகத்தை வெளியிட்ட எமரால்டு பதிப்பகத்தின் உரிமையாளர் கோ.ஒளிவண்ணன் அறிவித்ததன் பேரில், தோழர்கள் ஆவலுடன் வரிசையாக மேடைக்கு வந்து, திராவிடர் கழகத் தலைவர் கைகளால், உரிய விலை கொடுத்து பெற்றுக் கொண்டனர். இப்பணிகளை அய்ன்ஸ்டீன் கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள், ஒருங்கிணைப்பு செய்து சிறப்பித்தனர். தமிழர் தலைவர் ஆசிரியருக்கு விழாக் குழுவினர் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. ஆசிரியர், வேலூர் வி.அய்.டி. தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வேந்தருக்கு மரியாதை செய்தார். அதேபோல ஆலடி.எழில் வாணனுக்கு பயனடை அணிவித்து மரியாதை செய்தார். நூல் வடிவமைப்பு செய்த தோழர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கழகத் தலைவர் சிறப்பித்தார். தொடர்ந்து உரையாற்றினார்.

வேர்களும் சிறப்பாக இருக்கின்றன

அவர் தனது உரையை, “ஆலடி அருணா அவர்கள், மறைந்தார் என்று ஒப்புக்கொள்ள முடியவில்லை. நம் நெஞ்சங்களில் நிறைந்தார் என்று சொல்லலாம்” என்று தொடங்கினார். நூலை எழுதி வெளியில் கொண்டு வந்த, ஆலடி அருணா அவர்களின் மகன் ஆலடி.எழில் வாணன் அவர்களைப் பாராட்டி சொல்லும் போது, “வேர்களும் சிறப்பாக இருக்கின்றன.  அதேசமயம் விழுதுகளும் பழுதில்லாமல் இருக்கின்றன” என்று குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் ஆலடி அருணா அவர்களைப் பற்றி குறிப்பிடும் வகையில், “நல்ல எழுத்தாளர், நல்ல பேச்சாளராக இருக்க முடியாது; நல்ல பேச்சாளர் நல்ல கருத்தாளராக இருக்க முடியாது. ஆனால், இந்த மூன்றும் இணைந்தவர் தான் ஆலடி அருணா” என்றார். மேலும் அவர் எப்படிப்பட்ட சமூக சூழலில், அவர் எப்படிப்பட்ட நிலையை எட்டினார் என்பதைச் சொல்வதற்காக, “தகுதி, திறமை என்பது எவ்வளவு பெரிய மோசடி என்பதற்கு ஆலடி அருணா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு” என்று குறிப்பிட்டுப் பாராட்டினார். இதற்கான பின்னணியைப் பற்றியும் சுட்டிக் காட்டினார். அதாவது, “ஆலடி அருணா அவர்கள் பூசாரி குடும்பத்தில் பிறந்து, சட்ட அமைச்சராக வந்து, நாடாளுமன்றத்திலும் முத்திரை பதித்து சிறப்பு பெற்றவர்” என்றும், “பொது வாழ்க்கையில் நேர்மையை கடைப்பிடித்தவர்” என்றும், அவரது சிறப்பை இன்னும் ஆழமாக விவரித்து, “திராவிடர் இயக்கம் என்ன செய்தது? என்று கேட்பவர்களுக்கு, இதைத்தான் செய்தது” என்பதைப் பதிலாக சுட்டி காட்டினார்.

இயற்கையின் கோணல்புத்தி

தொடர்ந்து உணர்வுபூர்வமாக இந்த நூலை தொகுத்துள்ள ஆலடி எழில்வாணன் பாராட்டுக்குரியவர் என்று நூலாசிரியரை வாழ்த்தினார். தான், சட்டக் கல்லூரியில் பயின்ற போது, ஆலடி அருணா அவர்களைச் சந்தித்தது மற்றும் சட்டக் கல்லூரியில் நடந்த சுவையான சம்பவங்கள் சிலவற்றை நினைவுபடுத்தி நிறைவாக, “2004 இல் ஆலடி அருணா அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி, “அநீதியாக அவரது வாழ்க்கை நம்மிடமிருந்து பறிக்கப்பட்டது” என்றும், “இதைத்தான் தந்தை பெரியார் இயற்கையின் கோணல் புத்தி என்று குறிப்பிடுவார்” என்றும், “அவர் வாழ்க்கை மட்டும் முழுமை அடையாத பயணம் அல்ல; அவருடைய லட்சிய பயணமும் முடிவடையவில்லை” என்றும் சுட்டிக்காட்டி, “அவரது வாரிசுகள் இதை தொடர வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்து, தமது உரையை நிறைவு செய்தார். அய்ன்ஸ்டீன் கல்லூரியின் மேனாள் மாணவர், ஸ்டீபன் ராஜ் நன்றி கூறி, நிகழ்ச்சியை முறைப்படி நிறைவு செய்தார்.

நிகழ்ச்சியில், திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தோழர் இளைய அருணா, தி.மு.க. வழக்குரைஞர் சரவணன், திராவிட கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், தோழர் ச.இன்பக்கனி, கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, திராவிடன் நல நிதியின் இயக்குனர் சீதாராமன், விடுதலை அச்சக மேலாளர் சரவணன், திராவிடப் புரட்சி, பெரியார் பெருந்தொண்டர்கள் தங்கமணி –  தனலட்சுமி, பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், தோழர்கள் த.கு.திவாகரன், இளவழகன், ஆவடி மாவட்டத்தின் செயலாளர் க.இளவரசன், அரும்பாக்கம் தாமோதரன் மற்றும் அய்ன்ஸ்டீன் கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள், கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

அனைவருக்கும் நிகழ்ச்சி ஏற்பாட் டாளர்கள் சார்பில் இரவு உணவு வழங்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *