உலக மகளிர் நாளில் ‘பெரியார் மருந்தியல் கல்லூரி’ மாணவிகள் மத்தியில் கழகத் தலைவர் உரை!

6 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மருந்தாளுநர்கள் நீங்கள்! உங்கள் பணிகளை சிறப்பாகச் செய்யுங்கள்!
அறிவுக்கு எல்லை கட்டக்கூடாது என்றார் பெரியார்! உங்கள் அறிவை விரிவு செய்யுங்கள்!!

திருச்சி, மார்ச் 10 ‘‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’’ எனும் குறளில்  ‘அறிவை’ வைத்து பாருங்கள்! என்றும், ‘‘அறிவு வளர்ந்து கொண்டே இருக்கும். அதனால் தான், அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு! விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!’’ என்று பாடிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசனை சுட்டிக்காட்டி, மாணவர்களிடம் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் முப்பெரும் விழா!

திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி சார்பில், ‘தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் 107 ஆம் பிறந்தநாள் விழா!’ ‘உலக மகளிர் நாள் விழா!’ ‘புத்தகங்கள் வெளியீட்டு விழா!’ என முப்பெரும் விழாக்களை, நேற்று (9.3.2026) கலைஞர் கருணாநிதி நகரில் அமைந்துள்ள பெரியார் மருந்தியல் கல்லூரி – கல்லூரி அரங்கத்தில், காலை 9.30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் – முனைவர் இரா.செந்தாமரை, அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். கல்லூரியின் நிறுவனத் தலைவர் – முனைவர் கி.வீரமணி அவர்கள் தலைமை தாங்கி, மூன்று புத்தகங்களை அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.

‘‘ஆசிரியர் கி.வீரமணி அவர்களின்
வாழ்வியல் சிந்தனைகளில் மருந்தியல்!’’

எழுத்தாளர் வி.சி.வில்வம் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார். பாரதிதாசன் பல்கலைக்கழகம் மகளிரியல் துறைப் பேராசிரியர் – முனைவர் என்.முருகேஸ்வரி, ‘‘ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகளில் மருந்தியல்’’ எனும் புத்தகம் குறித்த ஆய்வுரையை வழங்கினார். நிறைவாக பெரியார் மருந்தியல் கல்லூரி துணை முதல்வர் முனைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறி, நிகழ்ச்சியை நிறைவு செய்தார். பேராசிரியர் சமீம் இணைப்புரை வழங்கி நிகழ்ச்சியைப் நெறிப்படுத்தினார்.

மூன்று புத்தகங்கள் அறிமுகம்!

முன்னதாக மருந்தியல் கல்லூரி நிறுவனர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, கல்லூரியின் முதல்வர் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். நிறுவனத் தலைவர் கல்லூரியின் முதல்வர், துணை முதல்வர் மற்றும் சிறப்பு விருந்தினர் ஆகியோருக்கு பயனடை அணிவித்து மரியாதை செய்தார். அறிமுகம் செய்யப்பட்ட ‘‘ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகளில் மருந்தியல்’’, ‘‘பெரியார் மருத்துவக் குழுமம் – சென்னை’’, ‘‘மருத்துவ பயன் தரும் மூலிகைகள் – பாகம் 3’’ ஆகிய மூன்று புத்தகங்களின் விலை ரூபாய் 700/- என்றும், நிகழ்ச்சியை முன்னிட்டு சிறப்புத் தள்ளுபடியுடன் ரூபாய் 500/- க்கு வழங்கப்படும் என்றும் கல்லூரி முதல்வரால் அறிவிப்பு செய்யப்பட்டு, மாணவர்கள் ஒவ்வொருவராக வந்து உரிய தொகையைக் கொடுத்து நிறுவனத் தலைவரிடம் மூன்று நூல்களையும் பெற்றுக் கொண்டனர். செந்தமிழ் இனியன், தமிழ்ச் சுடர் மற்றும் கல்லூரியின் பேராசிரியர் பெருமக்கள் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். நிறைவாக கல்லூரியின் நிறுவனத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

‘‘வாழ்வியல் சிந்தனைகள்’’ – ஆக்கமும்! தாக்கமும்

போராட்டம், பிரச்சாரம் என்று கடிகாரத்தில் சின்ன முள், பெரிய முள் போல, ஓயாமல் இயங்கிக் கொண்டிருக்கும் திராவிடர் கழகத் தலைவர் – ஆசிரியர் என்ற அடைமொழிக்கு உரியவர் – முனைவர் கி.வீரமணி அவர்கள், ‘‘சங்கராச்சாரி யார்?’’, ‘‘கீதையின் மறுபக்கம்’’ உள்ளிட்ட தீவிர மான; கொள்கையை நிலைநாட்டக் கூடிய; கழகத்தின் நிலைப்பாட்டை உறுதி செய்யக்கூடிய பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியவர் என்ற பெருமைக்குரியவர். 10 வயது முதல் தொடங்கி 83 ஆண்டுகள் உலகெங்கிலும் பயணம் செய்து, இன்றும் சொற்பொழிவாற்றி வருகின்றவர் என்ற பெருமை படைத்தவர். இந்த ஓயாத கொள்கைப் பணிகளுக்கிடையேயும், கோடையில் குளிர் தரும் தருவை போல, ஒரு இளைப்பாறுதலுக்காக, தான் படித்த பல்வேறு நூல்களில் இருந்து முக்கியமான கருத்துகளைத் தொகுத்து, தன் சிந்தனைகளோடு ‘‘வாழ்வியல் சிந்தனைகள்’’ என்ற தலைப்பில் ‘விடுதலை’யில் எழுதத் தொடங்கினார்.
தற்போது வரை 19 தொகுதிகள் நூலாக வெளி வந்துவிட்டது. அந்த வாழ்வியல் சிந்தனைத் தொகுப்புகளில் இருந்து, ‘மருந்தியல்’ தொடர்பான கட்டுரைகளை திருச்சியில் இருக்கும் ‘‘பெரியார் மருந்தியல் கல்லூரி’’ சார்பாக தொகுத்திருக்கிறார்கள். அதிலும் கழகத் தலைவரின் 93 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு, 93 கட்டுரைகளைத் தொகுத்துத் தந்திருக்கிறார்கள்.
இந்தப் புத்தகத்தை தான் உலக மகளிர் நாளை முன்னிட்டு, நேற்று (9.3.2026) திருச்சி ‘பெரியார் மருந்தியல் கல்லூரி’யில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘‘வாழ்வியல் சிந்தனைகள்’’ எழுதியவரே, ‘‘வாழ்வியல் சிந்தனைகளில் மருந்தியல்’’ எனும் புத்தகத்தை வெளியிட்டார். அதை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மகளிரியல் துறை பேராசிரியர் முனைவர் என்.முருகேஸ்வரி ஆழமாக ஆய்வு செய்தும் உரையாற்றினார். ஒரு இளைப்பாறுதலுக்காக தொடங்கப்பட்ட, ‘‘வாழ்வியல் சிந்தனைகள்’’ என்ற இந்த எழுத்துப் பயணம், சமூகத்தில் மிகப்பெரிய ஆக்கத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தி யிருக்கிறது என்பதைத்தான் இந்த நிகழ்வு மெய்ப்பிக்கிறது. அதன் பயணம் தொடர்கிறது.

தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

ஆசிரியர் தனது உரையில், ‘‘போராட்டம் பிரச்சாரம் என்று இருக்கும் இயக்கப் பணிகளி னூடே இளைப்பாறுவதற்காக, வாழ்வியல் சிந்தனைகள் எழுதத் தொடங்கினேன்’’ என்றும், ‘‘அது எனக்காக எழுதியது. ஆனால், வாசகர்கள் கொடுத்த வியக்கத்தக்க ஆதரவால் தான் இதைத் தொடர்ந்து எழுதினேன்’’ என்றும் கூறிவிட்டு, ‘‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’’ என்ற குறளில்,  ‘அறிவை’ வைத்து பாருங்கள்’’ என்று, ’’வாழ்வியல் சிந்தனைகள்’’ எழுதுவதன் பின்னணியில் தனக்கு இருக்கும் ஈடுபாட்டை, அதன் மூலம் கிடைக்கும் அறி வுப் பரிமாற்ற இன்பத்தை மனம் திறந்து விவரித்தார். தொடர்ந்து, ‘‘அது ‘ஈத்துவக்கும் இன்பம்’ என்று அந்த இன்பத்திற்கு ஒரு கவித்துவம் கொடுத்தார். அத்துடன், ‘‘அப்படிச் செய்தால்… அறிவு விரிவடைந்து கொண்டே இருக்கும். அதனால் தான், ‘அறிவுக்கு எல்லை கட்டக்கூடாது’ என்று பெரியார் சொன்னார் என்றார். பெரியாரின் கருத்தை தான் புரட்சிக் கவிஞர், ‘அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு! விசாலப் பார்வையால் விழுங்கு உலகை!’’ என்று கவிதையில் வடித்து வைத்திருக்கிறார்’’ என்று அந்தக் கவித்துவ இன்பத்திற்கு, மகுடத்திற்கு  மணி சேர்த்தார்.

‘‘என்னாலும் இப்படி எழுத முடியும் என்பதை உணர்ந்து கொண்டேன்!’’

‘வாழ்வியல் சிந்தனைகள்’ எழுதியதற்குப் பின்னணியாக இருக்கும் அலாதியான இன்பத்தை சுட்டிக்காட்டி விட்டு, இதுவரையிலும் பகிர்ந்து கொள்ளப்படாத ஒரு தகவலையும் சொன்னார். அதாவது, ‘‘என்னாலும் இப்படி எழுத முடியும் என்பதை உணர்ந்து கொண்டேன்’’ என்றார். மேலும் அவர், 1982 இல் மகளிருக்காக, ‘‘பெரியார் மருந்தியல் கல்லூரி’’ தொடங்கிய போது, மாணவிகள் மூன்று பேர் மட்டுமே சேர்ந்ததாகவும், பேராசிரியர்கள் மட்டும் 10 பேர் இருந்ததையும் சுட்டிக்காட்டி, இதைத் தொடர்ந்து நடத்த வேண்டுமா? என்ற அய்யம் எழுப்பியபோது, ‘‘நடத்தித்தான் ஆக வேண்டும்’’ என்று சொல்லித் தான் தொடங்கினோம். இப்போது பேராசிரியர்கள் 50 பேராகவும், அதில் ஆண் பேராசிரியர்கள் 9, பெண் பேராசிரியர்கள் 41 ஆகவும், மாணவிகள் 320, மாணவர்கள் 185 என்று சிறப்பாக வளர்ந்திருக்கிறது’’ என்றும் பெருமிதத்துடன் கூறினார்.

பெரியாரியம் பெண்ணுரிமைக் களத்தில் பெரும் வெற்றி பெற்று இருக்கிறது!

தொடர்ந்து, ‘‘மருந்தாளுநர்கள் நீங்கள்; உங்கள் பணிகளை சிறப்பாகச் செய்யுங்கள். என்றும், ‘‘மகளிர் நாள் என்றால் வெறுமனே பேசுவது மட்டுமின்றி, மகளிர் உயர்வுக்கும், வளர்ச்சிக்குமான பணிகளை செயலிலும் காட்ட வேண்டும் என்பதைத்தான் நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம். இங்கே பெண்கள் தான் பெரும்பான்மை இதுதான் மகளிர் நாளில் நாம் சுட்டிக் காட்ட வேண்டிய ஒன்று’’ என்று பலத்த கைதட்டல்களுக்கு இடையே தெரிவித்தார். மேலும் அவர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், தான் பயின்ற போது தங்களுடன் ஒரு மாணவி மட்டும் படித்ததையும் சுட்டிக்காட்டி, இன்றைய மாற்றத்தையும் நினை வூட்டி, பெரியார்; பெரியாரியம் பெண்ணு ரிமைக் களத்தில் பெரும் வெற்றி பெற்று இருக்கிறது’’ என்பதை நிலைநாட்டி, தொடர் கைதட்டல்களுக்கிடையே தமது உரையை நிறைவு செய்தார்.

நிறைவாக, பெரியார் மருந்தியல் கல்லூரி யின் துணை முதல்வர் முனைவர் கோ.கிருஷ்ண மூர்த்தி நன்றி கூறி, நிகழ்ச்சியை நிறைவு செய்தார். சுமார் 400 மாணவிகள் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர். நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னரும், புத்தகங்களை வாங்க மாணவிகள் ஆர்வத்துடன் மேடை ஏறி, கல்லூரியின் நிறு வனத் தலைவரிடம் புத்தகங்களைப் பெற்று மகிழ்ந்தனர்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *