பாட்னா, மார்ச் 9– பீகார் அரசியலில் ஒரு முக்கிய நகர்வாக, முதலமைச்சர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார், தனது தந்தையின் கட்சியான அய்க்கிய ஜனதா தளத்தில் (ஜேடியு) அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.
நீண்ட காலமாக அரசியலில் இருந்து விலகி இருந்த நிஷாந்த் குமார், தற்போது அய்க்கிய ஜனதா தளத்தின் அடிப்படை உறுப்பினராகத் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
பாட்னாவில் நடைபெற்ற கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப் பட்டது. அவருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதிஷ் குமார் இதுவரை தனது குடும்பத்தினரை அரசியலுக்குக் கொண்டு வருவதைத் தவிர்த்து வந்த நிலையில், தற்போது நிஷாந்த் குமாரின் வருகை பீகார் அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நிஷாந்த் குமார் ஒரு மென்பொருள் பொறியாளர் ஆவார்.
இதுவரை பொதுமேடைகளில் அதிகம் தோன்றாத அவர், தற்போது கட்சியின் வலுவூட்டலுக்காகவும், வருங்காலத் தலைமையை உருவாக்குவதற்காகவும் அரசியலில் களமிறக்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
