ஆர்.எஸ்.எஸ். என்ற மதவெறி அமைப்புத் தத்துவத்தில், பெண்களுக்கு
முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்பதுதான் அதனுடைய முதல் கொள்கை!
திராவிட இயக்கத்தில், முக்கியப் பொறுப்புகளில் பெண்கள் இருக்கிறார்கள்;
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில், மகளிருக்கு முக்கியப் பொறுப்பு உண்டா?
சென்னை, மார்ச் 9 ஆர்.எஸ்.எஸ். என்ற மதவெறி அமைப்புத் தத்துவத்தில், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்பதுதான் அதனுடைய முதல் கொள்கை. ஆனால், திராவிட இயக்கத்தில், முக்கியப் பொறுப்புகளில் பெண்கள் இருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில், மகளிருக்கு முக்கியப் பொறுப்பு உண்டா? யாராவது பெண் தலைவர்கள் உண்டா? என கேள்வியெழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘மானமும் அறிவும் மகத்தானது!
மனிதநேயமே திராவிட மாடலானது!’’
கடந்த 6.3.2026 அன்று மாலை சென்னை கிழக்கு மாவட்டம் – துறைமுகம் தொகுதி தி.மு.க. சார்பில், மண்ணடியில் உள்ள தம்பு செட்டி தெருவில், ‘‘மக்கள் முதல்வரின் மனிதநேய விழா – 2026’’ நிகழ்ச்சியில், ‘‘மானமும் அறிவும் மகத்தானது! மனிதநேயமே திராவிட மாடலானது!’’ எனும் கருத்தில் சிறப்பாக நடைபெற்றது. இக்கருத்தரங்கில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
இன்று ஆளுகிறவர் மட்டுமல்ல;
நாளைக்கும் அவர்தான் ஆளப் போகிறவர் என்பதை உறுதி செய்யக்கூடிய ஒரு கூட்டம்!
மிகச் சிறப்பான வகையில், இந்த மண்ணடி தம்புச்சட்டி தெருவில், மிக அற்புதமான ஒரு விழாவாக – ‘மக்கள் முதல்வர்’ என்று அனைவராலும் இன்றைக்குப் பாராட்டப்படக்கூடிய நம்முடைய ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய நாயகர், இந்தியா மட்டுமல்ல உலகமே பாராட்டி, இப்படி ஒரு நேர்மையாளர் – இப்படி ஒரு மனிதநேயர் – அனைத்து மக்களுக்கும், அனைத்தும் தரக்கூடிய உறுதிப் படைத்து ஒருவர் கிடைப்பாரா? என்று ஏங்கிக் கொண்டிருந்த நேரத்தில், அவர் நம்மவர், இந்த மண்ணுக்குரியவர், அவர் நம்முடைய உறவினர், நம்மில் ஒருவர், நம்மோடு அவர், அவரோடு நாம்! என்று சொல்லக்கூடிய அளவிற்கு மிகப்பெரிய அளவுக்கு வாய்ப்பை உருவாக்கி இருக்கக்கூடிய ஒப்பற்ற முதலமைச்சர், இன்று ஆளுகிறவர் மட்டுமல்ல; நாளைக்கும் அவர்தான் ஆளப் போகிறவர் என்பதை உறுதி செய்யக்கூடிய ஒரு கூட்டம் – அந்த உறுதியை வழங்கக்கூடிய ஒரு கூட்டம் – அதற்காக உழைக்க உறுதிபூண்டுள்ளவர்களின் சிறப்பான ஒரு கூட்டம் – சூளுரைக்கக் கூடிய ஒரு கூட்டமாக ஏற்பாடு செய்துள்ள இந்தக் கூட்டத்திற்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய அருமை நண்பர் எஸ்.ராஜசேகர் அவர்களே, அதேபோல இந்த நிகழ்ச்சியிலே, இந்த நிகழ்ச்சி மட்டுமல்ல, எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், தனி முத்திரையோடு, அவர் நடத்தினால், அதில் ஒரு தனிச் சிறப்பு இருக்கும் என்று சொல்லக்கூடிய வகையில், நிகழ்ச்சிகளை எப்படி ஒழுங்குபடுத்தி, யார் யாரை அடையாளம் கொண்டு, யாரை, யாரோடு இணைப்பது என்பதை எல்லாம் புரிந்து, எப்போதும் உழைத்துக் கொண்டிருக்கிற எங்கள் தனித்தன்மை வாய்ந்த ஆற்றல் மிகு, ‘செயல் பாபு’ என்று முதலமைச்சரால் பாராட்டப்பட்டு இருக்கக்கூடிய கிழக்கு மாவட்டச் செயலாளரும், இந்து சமய அறநிலையத் துறையின் ஒப்பற்ற அமைச்சருமான அன்பிற்குரிய சகோதரர் மாண்புமிகு பி.கே.சேகர் பாபு அவர்களே,
இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு மிகச் சிறப்பான ஓர் உரையை இங்கே ஆற்றியது மட்டுமல்ல, பல பேர் பலவற்றை நினைத்தார்கள்; ஆனால், எங்கள் எண்ணம், என்றைக்கும் மாறுபட்ட எண்ணமில்லை; இந்தக் குடும்பத்தோடு நாம் ஒன்றிய குடும்பம் என்பதை, சிறப்பாக எடுத்துக் காட்டுவதற்கு, முழு பலத்தோடு, கொஞ்சம் கூட சபலம் இல்லாமல் இந்தப் பணியைச் செய்தவர்தான், நம்முடைய தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சியின் அற்புதமான ஒரு தலைவர் – அப்படிப்பட்ட அருமைச் சகோதரர் செல்வப்பெருந்தகை அவர்களே!
யாரையும் பிரிக்க மாட்டோம்;
எல்லோரையும் இணைப்போம்!
உண்மையிலேயே அவர் நடத்தை – ஒரு பெருந்தகை எப்படி நடந்து கொள்வாரோ – ஒரு நெருக்கடி ஏற்படுகிற நேரத்தில், அவர் சிறப்பாக, நாங்கள் யாரையும் பிரிக்க மாட்டோம்; எல்லோரையும் இணைப்போம்; இணைப்பவர்களை பிரிக்க மாட்டோம்; இணைக்க வராதவர்களைக் கூட இணைப்போம் என்று சொல்லக்கூடிய ஒரு சிறப்புமிகுந்த ஓர் அற்புதமான மனிதநேயர்.
மதத்தால் வேறுபட்டு இருக்கலாம்;
மனதால் ஒன்றுபட்டவர்கள்!
எல்லாவற்றையும் விட, இஸ்லாமிய சமுதாயம் என்பது மற்ற மாநிலங்களில் வேட்டையாடப்படக்கூடிய ஒரு சமுதாயம். ஆனால், இங்கே அதற்கு இடமில்லாமல், இன்றைக்கு அவர் வேறு; நாங்கள் வேறு அல்ல. உருவத்தால் மாறி இருக்கலாம், மதத்தால் வேறுபட்டு இருக்கலாம். மனதால் ஒன்றுபட்டவர்கள் நாங்கள் என்று என்றைக்குமே என்று காட்டக்கூடிய ஓர் அற்புதமான அரசியல் நெறியாளர், அன்பிற்குரிய அருமைச் சகோதரர் – மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவஹருல்லா அவர்களே,
அதேபோல என்றைக்கு நம்மோடு இருக்கக்கூடிய ஆற்றல் வாய்ந்த உழைப்பாளியாக, கவிஞராக இருக்கக்கூடிய அருமைச் சகோதரர் கவிஞர் தாயகம் கவி அவர்களே!
ஜோசப் சாமுவேல் அவர்களே, நம்முடைய அருமை நண்பர், நல்ல இளைஞர், இவரைக் கண்டாலே தொலைக்காட்சியில் விவாதத்திற்கு வரும் பல பேர், ‘‘அவர் வருகிறாரா?’’ என்று அதிரக்கூடிய அளவிற்கு, அவர் சாதாரண பிரசன்னா அல்ல; தமிழன் பிரசன்னா என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய அளவிற்கு இருக்கக்கூடிய, எங்கள் இளம் சிங்கங்களில், இளம் புலிக்குட்டிகளில் ஒருவராக இருக்கக்கூடிய அருமைச் சகோதரர் தமிழன் பிரசன்னா அவர்களே,
அகம் மலர முகம் மலர வந்திருக்கக்கூடிய அருமைத் தாய்மார்கள்!
தோழர் முரளி அவர்களே, மகாதேவன் அவர்களே, ஆசாத் அவர்களே மற்றும் எப்போதும் போல் வந்திருக்கிற, அகம் மலர முகம் மலர வந்திருக்கக்கூடிய அருமைத் தாய்மார்களே! ஏனென்றால் உங்களை எல்லாம் இவ்வளவு மகிழ்ச்சியோடு வைக்கக் கூடாது என்று பலர் நினைத்தார்கள். ஆனால், எங்கள் ‘திராவிட மாடல்’ ஆட்சியில், அதற்கு இடமில்லை என்று சொல்லி, சூழ்ச்சிகளை எல்லாம் புறக்கணித்துவிட்டார். ஏன் இவ்வளவு மகிழ்ச்சியோடு தாய்மார்கள் இருக்கிறார்கள். இங்கே மட்டுமல்ல, எங்கே போனாலும், தாய்மார்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள். இதுவரையில் அவ்வளவு மகிழ்ச்சி கிடையாது. நாங்கள் நீண்ட காலமாகப் பேசிக்கொண்டிருக்கிறவர்கள் மேடையில். அப்படிப் பேசும்போது, பெற்றோர்களே, தோழர்களே, திராவிட வீரர்களே, பெருங்குடி மக்களே என்று சொல்லிட்டு, கடைசியில் தாய்மார்களே என்று சொல்லுவோம். அங்கே தாய்மார்களே இருக்க மாட்டார்கள். அது ஒரு காலம்; ஆனால், இன்றைக்குப் பார்த்தீர்களேயானால், தாய்மார்கள் தான் முன்னாடி இருக்கிறார்கள்.
அது மட்டுமல்ல, திராவிட இயக்கம் என்ன செய்தது? பெரியார் என்ன செய்தார்? அண்ணா என்ன செய்தார்? கலைஞர் என்ன செய்தார்? இன்றைய முதலமைச்சர் என்ன செய்தார்? இந்த இயக்கம் என்ன செய்தது? என்று கேட்பதற்கு நிறைய புள்ளி விவரங்கள், ஆதாரங்களை எல்லாம் சொன்னார்கள்.
அடிப்படையிலேயே ஒரு சமுதாய மாற்றம்; மனிதநேய அடிப்படையில், ஏனென்றால், இது மனித நேய விழா! இந்த மனிதநேய விழாவில், மனிதநேய அடிப்படையில் சொன்னது என்ன? என்பதற்கு, நான் பெரிய புத்தகத்திலிருந்தோ, ஆதாரம், சான்றெல்லாம் சொல்ல வேண்டாம்.
மறுக்கப்பட்ட நாற்காலியும் கிடைத்திருக்கிறது; மறுக்கப்பட்ட உரிமைகளும் பெண்களுக்குக் கிடைத்திருக்கிறது!
இந்தக் கூட்டத்தைப் பாருங்கள்; மிகப்பெரிய ஒரு கூட்டத்தில் தாய்மார்கள் எல்லாம் நாற்காலில் ‘ஜம்’மென்று உட்கார்ந்திருக்கிறார்கள். இந்தப் பக்கம் பாருங்கள், ஆண்கள் எல்லாம் நின்று கொண்டி ருக்கிறார்கள். 100 ஆண்டுகளுக்கு முன்னால், திராவிட இயக்கம் பிறப்பதற்கு முன் இந்தக் காட்சி யைப் பார்க்க முடியுமா? நாற்காலி இருந்தது, நாற்காலி ஆண்களுக்குத்தான் இருந்தே தவிர, பெண்களுக்கு இல்லை. ஆனால், எவ்வளவு காலம் நாங்கள் நின்று கொண்டிருப்பது? கொஞ்ச நாளைக்கு ஆண்கள் நிற்கட்டும் – அதனால் என்ன நஷ்டமா ஆகப் போகிறது? எங்களுக்கு அந்த வாய்ப்பு வர வேண்டாமா? என்று சொல்லி, Turn Duty போன்று, இப்பொழுது ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்று சொல்லி, இதுவரை மறுக்கப்பட்ட நாற்காலி மட்டுமா உங்களுக்குக் கிடைத்திருக்கிறது? மறுக்கப்பட்ட உரிமைகளும் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது, அதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி!
சொன்னதைச் செய்கிறார்; சொல்லாததையும் செய்கிறார்!
பெண்களுக்குப் படிப்புரிமை கூடாது; யாருக்கு எதைக் கொடுத்தாலும், ஒடுக்கப்பட்ட ஜாதியினருக்கு, கீழ் ஜாதியினருக்கு, சூத்திரருக்கு, பஞ்சமருக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் படிப்புரிமை கொடுக்கக் கூடாது. திருமண உரிமை கிடையாது. சொத்துரிமை கிடையாது. இவை எல்லாம் கிடையாது என்று மறுத்த நேரத்தில், இவையெல்லாம் ஒரு சாராருக்கு மட்டும்தான் என்று சொன்ன நேரத்தில், உதயமானதுதான் திராவிடர் இயக்கம். அந்த இயக்கத்தினுடைய வரலாற்றை நீங்கள் எண்ணி பார்த்தால், ஒரு முதலமைச்சர் எப்படி இவ்வளவு கடுமையாக உழைக்கிறார்? ‘‘உழைப்பு என்பதைத் தவிர எனக்கு வேறு கிடையாது; என் சக்திக்கு மீறி உழைக்கிறேன்’’ என்று சொல்லுகிறார். மற்றவர்கள் எல்லாம் பேசியதோடு நின்றுவிடுவார்கள். ஆனால் இவர் சொன்னதைச் செய்கிறார்; சொல்லாததையும் செய்கிறார்.
எப்பொழுது பெண்களுக்கு இட ஒதுக்கீடு வரும்? சொல்ல முடியாது!
வடக்கிலிருந்து ஒருவர் வருவார், பிரதமர் மோடி வருவார் – இங்கே வந்து, தாய்மார்களைப் பார்த்து, ‘நாரி சக்தி’ என்று சொல்வார் . ஆனால் அதே நேரத்தில், பெண்களுக்கு இட ஒதுக்கீடு உண்டா? என்று அவரிடம் கேட்டால், கிடையாது. சரி, எப்பொழுது பெண்களுக்கு இட ஒதுக்கீடு வரும்? சொல்ல முடியாது. ஆனால், அதற்குரிய சட்டத்தை மட்டும் நிறைவேற்றி வைத்திருப்பார்கள்.
தேர்தல் முடிந்ததும் வருமா? வராது. அதற்குச் சட்டத்தில் இடமில்லை. நடைமுறையில் அறிவிக்கத் தயார் இல்லை. காரணம், அவர்களுக்கு மனம் இல்லை. காரணம், அவரை இயக்குவது ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பு இருக்கிறதே, அந்த மதவெறி அமைப்புத் தத்துவத்தில், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்பதுதான் அதனுடைய முதல் கொள்கை.
பி.ஜே.பி. என்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவாக்கி இருக்கக்கூடிய ஓர் அரசியல் அமைப்பு. ஆர்.எஸ்.எஸ். உத்தரவு போடும்; இவர்கள் செய்வார்கள்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில்,
மகளிருக்கு முக்கியப் பொறுப்பு உண்டா?
அந்த அடிப்படையில் நீங்கள் நினைத்துப் பார்த்தால், இன்றைக்குத் திராவிட இயக்கத்தில், முக்கியப் பொறுப்புகளில் பெண்கள் இருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில், மகளிருக்கு முக்கியப் பொறுப்பு உண்டா? யாராவது பெண் தலைவர்கள் உண்டா? நினைத்துப் பார்க்க முடியாது
பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள் அழகாக எடுத்துச் சொன்னதைப் போல, தலையில் பிறந்தவன், தோளில் பிறந்தவன், அப்புறம் தொடையில பிறந்தவன், அப்புறம் பாதத்தில் பிறந்தவன். அதற்கும் கீழே, அய்ந்தாவது ஜாதி, அதற்கும் கீழே ஆறாவது பிரிவில், படிக்கட்டில் நிற்பது யார் என்றால், எந்த ஜாதிப் பெண்களாக இருந்தாலும், அது உயர் ஜாதியில் பிறந்த பெண்ணாக இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் ‘‘நமோ சூத்திரர்கள்’’ என்று பெயர் வைத்து, அந்தப் பெண்களுக்குப் படிக்க உரிமை இல்லை; அவர்களுக்குச் சொத்துரிமை கிடையாது; அவர்களுக்கு வாழ்வுரிமை கிடையாது. அவர்கள் எல்லாம் நல்ல வேலைக்காரிகளாக இருக்க வேண்டும்; நல்ல அடிமைகளாக இருக்க வேண்டும் என்று சொன்ன ஒரு சமுதாயத்தில், தந்தை பெரியார், திராவிட இயக்கம், சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கினார் பல ஆண்டுகளுக்கு முன்னால்.
அடுப்பங்கரையோடு பெண்கள் இருக்க வேண்டாம்; வெளியே வாருங்கள்’’ என்று சொன்ன இயக்கம் திராவிட இயக்கம்!
அவர் சொன்னார், ‘‘பெண்களே, சகோதரிகளே, தாய்மார்களே, உங்களுடைய அறிவு, ஆற்றல் இவை எல்லாம் பயன்பெற வேண்டாமா?’’ என்று கேட்டு, ‘‘உங்கள் கையில் இருக்கிற கரண்டியைத் தூக்கி எறிந்துவிட்டு, நீங்கள் எங்கள் பின்னால் வாருங்கள். நீங்கள் அடுப்பங்கரையோடு இருக்கிறீர்கள்; அடுப்பங்கரையோடு இருக்க வேண்டாம்; வெளியே வாருங்கள்’’ என்று சொல்லி, உங்கள் கைகளில் பேனாவைக் கொடுத்த இயக்கத்திற்குப் பெயர்தான் திராவிடர் இயக்கம். அதற்கு அடுத்த கட்டமாக, இந்த இயக்கம் வளர்ந்தவுடன், கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, பேனாவைப் பிடித்த பெண்கள் படித்தவுடன், அடுத்தபடியாக அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். – கலெக்டராக, காவல்துறை அதிகாரிகளாக வந்த பெண்கள் கைகளில், துப்பாக்கியைக் கொடுத்தது இந்தத் ‘திராவிட மாடல்’ ஆட்சி. இதைப் பொறுக்க முடியவில்லை நம்முடைய இன எதிரிகளால்!
‘நான் முதல்வன்’ திட்டத்தால்தான்….
இன்றைக்கு நாளிதழ்களில் வந்திருக்கிற செய்தியைப் பார்த்தீர்களேயானால், ஒன்றிய அரசு கீழ் இருக்கக்கூடிய யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மாணவி இரண்டாவது இடம் பெற்றிருக்கிறார். அதற்குக் காரணம், ‘நான் முதல்வன்’ திட்டத்தை நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் ஏற்படுத்தியதினால்தான். அதேபோல இன்னொரு தோழர் ஏழாவது இடத்தைப் பெற்றிருக்கிறார். நமக்கெல்லாம் கல்வி கூடாது என்று சொன்னவர்கள், நாமெல்லாம் மூட்டைத் தூக்க வேண்டும் என்று சொன்னவர்கள், நாமெல்லாம் வண்டி இழுக்க வேண்டும் என்று சொன்னவர்கள். நமக்குப் பள்ளிக்கூடத்தில் படிப்பதற்கு இடம் இல்லை என்று சொன்னவர்கள். அப்படியே மீறி பள்ளிக்கூடத்திற்குச் சென்றால், ‘தள்ளி உட்கார்’ என்று சொன்னவர்கள்; அப்படிப்பட்டவற்றை எல்லாம் மாற்றி, உடைத்து நொறுக்கியிருக்கிறோம். அந்த மாற்றம் ஏற்பட்டவுடன், இன்றைக்கு இந்தியாவில், நாளைக்கு அவர்தான் கலெக்டர்; நாளைக்கு அவர்தான் எஸ்.பி.; நாளைக்கு அவர்தான் டிஜிபி என்று வரக்கூடிய அளவிற்கு இருக்கிறது.
டில்லியிலிருந்து எத்தனை முறை
இங்கே வந்தாலும், அவர்களுக்கு வெற்றி கிடைக்காது!
அகில இந்திய அளவில், ஏழாவது இடத்தில், காஜா மொய்தீன் என்ற ஓர் இஸ்லாமியர், சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்தவர். இதை நினைத்துப் பார்க்க முடியுமா? தமிழ்நாட்டிற்கு மோடி வருகிறார்; ஓடி வருவார், தேர்தல் வரையில்; மோடி வருவார், தேடி வருவார், ஓடி வருவார், நாடி வருவார், எல்லாவித்தைகளையும் காட்டுவார். காரில் அமர்ந்து கொண்டு, கையை ஆட்டுவார். ரோட்ஷோவில் வருவார்; பிறகு, கோயிலுக்குப் போவார். ‘ரோட் ஷோ’ மட்டுமல்ல, ‘காட் ஷோ’வும் நடத்துவார். ஆனால், அவர் எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும், அவருக்கு ஏன் வெற்றி கிடைக்கவில்லை? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஓட்டு வராது அவர்களுக்கு. சாலையில் இருமருங்கிலும் அழைத்து வந்தவர்களை நிற்க வைத்து, அவர்களுடைய கைகளில் பூக்களைக் கொடுத்து வைத்திருப்பார்கள். மோடி வரும்போது, அவர்மீது பூக்கள் வீசப்படும்; நல்லதுதான், நிறையப் பூக்களைக் கொட்டட்டும். அதை நாம் வரவேற்கிறோம். ஏனென்றால், நம்முடைய விவசாயிகளுக்கு, அப்படியாவது வருமானம் வந்தால், அது மிகப்பெரிய அளவுக்கு லாபம். பூக்கடைக்காரர்கள் சம்பாதிக்கட்டும்; அவர்மீது பூக்கள் கொட்டப்படுமே தவிர, உங்களுக்காக ஓட்டுக்கள் வாக்குப் பெட்டியில் விழுவதற்கு வாய்ப்பே கிடையாது. காரணம் எங்கள் ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய தன்னிகராக, சாதனைச் சரித்திரம் படைத்து கொண்டிருக்கிற எங்கள் முதலமைச்சருடைய அற்புதமான ஒப்பற்ற பணிகள்தான்.
(தொடரும்)
