கொல்கத்தா, மார்ச் 8 மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்குப் பிறகு, வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 63.66 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, மாநில முதலமைச்சர் மம்தா கொல்கத்தாவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
வாக்காளர் திருத்தப்பணி
கடந்த மாதம் 28-ஆம் தேதி வெளியான அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய இந்த திருத்தப் பணியால் மாநிலத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 7.66 கோடியில் இருந்து 7.04 கோடியாக குறைந்துள்ளது. இது மொத்த வாக்காளர்களில் சுமார் 8.3 சதவீதம் ஆகும்.
மேலும், சுமார் 60 லட்சம் வாக்காளர்களின் தகுதி குறித்து வரும் வாரங்களில் சட்ட ரீதியான ஆய்வுகள் நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து தன்னிச்சையாக பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள மம்தா ஒன்றிய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கொல்கத்தாவின் எஸ்பிளனேட் (Esplanade) பகுதியில் 6.3.2026 அன்று தர்ணாவில் குதித்தார்.
“மக்களாட்சியின் அடிப்படை உரிமையான வாக்குரிமையில் ஒன்றிய அரசு தலையிடுகிறது” என போராட்டத்தின் போது அவர் கண்டனம் தெரிவித்தார்.
இரண்டாவது முறை: முதலமைச்சரான பிறகு மம்தா வீதியில் இறங்கி நடத்தும் இரண்டாவது போராட்டம் இதுவாகும்.
