சென்னை, மார்ச் 7 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது மக்களிடம் கேட்கப்பட உள்ள 33 கேள்விகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அரசின் நலத்திட்ட உதவிகள், பொது மக்களுக்கு முறையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை, நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடக்கும். அந்த வகையில், நாடு முழுவதும் மக்கள் தொகைக்கணக்கெடுப்பு பணி 2027இல் இருக்கட்டங்களாக நடக்கும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
2027ஆம் ஆண்டு பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடக்க உள்ளது. இதற்காக வரும் ஏப்.1 முதல் செப்.30 வரை வீடுகள் கணக்கெடுப்பு பணி நடக்க உள்ளது. இதனிடையே, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான டிஜிட்டல் தளங்கள், சின்னங்கள் ஆகியவற்றை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்துள்ளார். டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதற்காக 4 டிஜிட்டல் தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடர்பாக தமிழ்நாடு அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.அதில், அரசின் கூடுதல் செயலர் ரீடா ஹரீஸ் தாக்கூர் பிறப்பித்த உத்தரவில், மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான Self Enumeration பணிகள் வரும் ஜூலை 17 முதல் 31 வரை 15 நாட்கள் நடக்க உள்ளது.வீடுகள் பட்டியலிடும் நடவடிக்கைகள் ஆக.,1 முதல் ஆக.,30 வரை நடைபெற உள்ளது.
இந்த முதற்கட்ட கணக்கெடுப்பு பணிகளின் போது மக்களிடம் கேட்க வேண்டிய 33 கேள்விகள் குறித்த விபரமும் அந்த உத்தரவில் விளக்கப்பட்டு உள்ளது.
கேட்கப்பட வேண்டிய 33 கேள்விகள் விவரம்
- கட்டட எண்
- மக்கள் தொகை கணக்கு வீட்டு எண்
- கட்டடத்தின் தரையின் பிரதான தளம்
- சுவரின் பிரதான கட்டுமான பொருள்.
- வீட்டுக் கூரையின் கட்டுமான பொருள்
- வீட்டின் பயன்பாடு
- வீட்டின் தற்போதைய நிலைமை
- வீட்டு எண்
- வசிக்கும் நபர்களின் மொத்த எண்ணிக்கை
- குடும்ப தலைவரின் பெயர்
- அவரின் பாலினம்
- குடும்ப தலைவர் பட்டியல் ஜாதி/ பட்டியல் பழங்குடி/ பிற இனத்தை சேர்ந்தவரா
- வீட்டின் உரிமையாளர்.
- அறைகளின் எண்ணிக்கை
- வீட்டில் வசிக்கும் திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை.
- குடிநீருக்கான பிரதான ஆதாரம்
- குடிநீர் ஆதாரம் அமைந்துள்ள இடம்
- விளக்குக்கான பிரதான ஆதாரம்.
- கழிப்பிட வசதி
- கழிப்பிட வசதியின் வகை
- கழிவுநீர் வெளியேற்றும் இணைப்பு
- குளிக்கும் வசதி
- சமையலறை வசதி மற்றும் எல்பிஜி /பிஎன்ஜி இணைப்பு
- சமையலுக்கு பயன்படுத்தப்படும் பிரதான எரி பொருள்.
- வானொலி/ டிரான்சிஸ்டர் உள்ளதா?
- டிவி உள்ளதா?
- இணையதள வசதி உள்ளதா?
- மடிக்கணினி/ கம்ப்யூட்டர் உள்ளதா?
- தொலைபேசி/ கைப்பேசி/ ஸ்மார்ட்போன் உள்ளதா?
- மிதிவண்டி /ஸ்கூட்டர் /மோட்டார் சைக்கிள் /மொபட் உள்ளதா?
- கார்/ ஜீப்/ வேன் உள்ளதா?
- குடும்பத்தினர் எடுத்து கொள்ளும் முக்கிய உணவு என்ன?
- கைப்பேசி எண்( மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு மட்டும்).
