சுயமரியாதை, பகுத்தறிவு, சமூகநீதி அறிவியல் மனப்பான்மை வளர்த்தல் ஆகிய பல முக்கிய கொள்கைகளோடு ஆய்வு செய்து, எழுதும் ஒரு சில தமிழ்நாட்டு எழுத்தாளர்களில் தோழர் ‘வாலாசா வல்லவன்’ அவர்களும் ஒருவராவர்.
அவரது இரண்டாம் (விரிவுபடுத்தப்பட்ட) பதிப்பாக 2026இல் வெளிவந்துள்ள
‘‘கோயில் நுழைவுப் போராட்டங்களில் திராவிடர் இயக்கத்தின் பங்களிப்பு’’
என்ற 264 பக்கங்கள் கொண்ட ஒரு சிறப்பான நூல் என்னிடத்தில் நேரில், கையொப்பமிட்டு அன்புடன் (14.1.2026 அன்று) தந்தார்.
உடனடியாக ஒரு முறை அதனைப் பருந்துப் பார்வையுடன் புரட்டி விரைவுப்படிப்பாகப் (Browsing) படித்தேன்.
மெதுவாக அதனைப் படிக்க, சில வாரங்கள் தள்ளிதான் எனக்கு கால அவகாச வாய்ப்புக் கிடைத்தது!
அவசரமாகப் படிக்க வேண்டிய காரணம் – மற்ற புத்தகப் படிப்பும் – அன்றாட பணிச் சுமைகளுமே!
‘க்யூ’ வரிசை நூல்களில் இதுவும் ஒன்று.
பலரும் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ள வேண்டிய திராவிட இயக்கத்தின் பல வரலாற்று நிகழ்வுகளில் –
கோயில் நுழைவு உரிமை போராட்டத்தை முதலில் துவக்கியவர்கள் காங்கிரஸ்காரர்கள் அல்லர். தீண்டாமைக்கு எதிராக முதலில் போராடியவர்கள் வைத்தியநாதய்யர், ராஜகோபாலச்சாரியார் குழுவினர் அல்லர்; அது சரித்திர திரிபுவாதம்.
அதற்கு முன்பே, ஈரோடு, மதுரை, திருவண்ணாமலை கோயில்களில் அதனை நடத்திக் காட்டி – கொள்கை அடிப்படையில் சிறைத் தண்டனையும் பெற்று,போராடிவெளியே வந்தவர்கள் சுயமரியாதை இயக்கத்தவர்களே – தந்தை பெரியாரின் தொண்டர்களே!
அதையெல்லாம் இந்த நூலில் நன்கு பதிவு செய்துள்ளார் நூலாசிரியர் வாலாசா வல்லவன்.
பழைய ‘குடிஅரசு’, ‘பகுத்தறிவு’, ‘புரட்சி’, ‘விடுதலை’ போன்றவை தந்தை பெரியாரின் திராவிடர் இயக்கக் கொள்கைக்கான அறிவுப் போர்க் கருவிகளாகும். எப்போதும் அவற்றை வாசித்து, சுவாசித்து, பிறகு ‘அறிவுக்கொடை’ அளிப்பது நமக்கு முன்னோடிகளில் முழு மூதறிஞர் – அதைத் தொடர்ந்து செய்து வருகிறார் அவர்.
‘கடவுள் இல்லை’; ‘கோயில் தேவையில்லை’ என்று பிரச்சாரம் செய்யும் இந்த ‘சு’னா ‘ம’னாக்காரர்களுக்கு பின் ஏன், கடவுளை அர்ச்சிக்கும் உரிமை, கோயில் நுழைவுப் போராட்டம் என்றெல்லாம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்று கேட்கக் கூடியவர்களுக்கு 1932லேயே – அதாவது 94 ஆண்டுகளுக்கு முன்பாகவே தெளிவான பதிலை அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் தனது 10.10.1932ஆம் ஆண்டு ‘குடிஅரசு’ இதழில் எழுதத் தவறவில்லையே!
‘‘இனி, இவ்வாலயப் பிரவேச விஷயத்தில், நமக்கு இவ்வளவு அக்கறை இருப்பதற்குக் காரணம் என்னவென்பது நம்தோழர்களுக்கெல்லாம் தெரிந்த விஷயமாகும். “எல்லோரும் கோயில்களில் சென்று வணங்க வேண்டும். அங்குத் தெய்வ மிருக்கிறது; அல்லது கடவுளிருக்கிறது” என்னும் நோக்கத்துடன் நாம் கோயில் பிரவேசத்தை ஆதரிக்கவில்லை. கோயில்களும் தேசத்தின் பொதுச் சொத்து என்ற முறையில் வணங்குவதற்கோ, அல்லது வேடிக்கை பார்ப்பதற்கோ, அல்லது சும்மாவோ, அவை களுக்குள் நுழையக்கூடிய உரிமை தேசமக்கள் அனை வருக்கும் இருக்க வேண்டும் என்னும் எண்ணத்துடனேயே நாம் கோயில் பிரவேசத்தை முழுமனதுடன் ஆதரிக்கின்றோம். இதற்காகச் சட்டஞ் செய்யப்படும் முயற்சியையும் வரவேற்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.’’ (‘குடிஅரசு’ – 30-10-1932)
பல சுவையான செய்திகளும், அக்கால கட்டங்களில் நடைபெற்றதும் – இக்காலத்தில் அவை மறைப்புக்கும், திரிபுக்கும் ஆளாகியுள்ள பலவற்றை முறைப்படி அறிந்து, புரிந்துகொள்ள பெரிதும் இந்நூல் ஆவணமாகப் பயன்படும் என்பது உறுதி!
படித் ‘தேன்’ என்று கூறினீர்களேயானால் அது சரியே!
