‘தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி’ (EPFO) இணையதளத்தில் ஆங்கில மொழியைப் புறக் கணித்து, ஹிந்தியை முன்னிலைப்படுத்தும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
சமீபகாலமாக ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் ஹிந்தி மொழி திணிக்கப்படுவதை எதிர்த்துக் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது ‘தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி’ (EPFO) இணையதளத்தின் முகப்புப் பக்கம் முழு மையாக ஹிந்திக்கு மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, ஹிந்தி தெரியாத தென்னிந்திய மாநில மக்கள் இணையதளத்தைப் பயன்படுத்தும் போது, மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றும் ‘சுட்டி’ (அடையாளப் பெட்டி) கண்ணுக்குத் தெரியாத வகையில் வெள்ளை நிறத்தில் மறைக்கப்பட்டுள்ளது.
40 விழுக்காடு ஹிந்தி பேசாத மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல், தன்னிச்சையாக ஹிந்தி மொழியைத் திணிப்பது வஞ்சகமான செயல் எனப் பயனாளர்கள் சாடுகின்றனர்.
‘‘ஆங்கில மொழி மாற்றும் வசதியை வேண்டுமென்றே கண்டறிய முடியாதவாறு வடிவமைத்திருப்பது, ஹிந்தி தெரியாத தொழிலாளர் களை இணையதளச் சேவையைப் பயன்படுத்த விடாமல் தடுக்கும் செயலாகும்.
நாட்டின் வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்துவதை விடுத்து, மொழி ரீதியாகப் பிளவுகளை ஏற்படுத்தும் இத்தகைய நடவடிக்கைகள் நாட்டின் எதிர்காலத்திற்கு ஆபத்தானது’’ என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
“தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என்பது ஒரு குறிப்பிட்ட மொழி பேசுபவர்களுக்கு மட்டும் உரியதல்ல. எனவே, ஒன்றிய அரசு தனது ஹிந்தி திணிப்பு வக்கிரத்தைக் கைவிட்டு, இணையதளத்தின் முகப்புப் பக்கத்தை மீண்டும் ஆங்கிலத்திலேயே கொண்டு வர வேண்டும்,” எனப் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த பிஜேபி ஒன்றிய அரசுக்கு ஏனிந்த விபரீதப் புத்தி? நாசகார(ல) குணம் என்பது அதன் குருதியில் ஊறிய ஒன்றே! பிஜேபியின் தாய் வீடு ஆர்.எஸ்.எஸ். தானே!
ஒன்றிய பிஜேபி அரசின் ஒவ்வொரு நடவடிக்கை யையும் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டு தானிருக்க வேண்டுமா என்ன?
தமிழ்நாட்டுக்கு வரும்போது மட்டும் (தேர்தல் நாள்கள் உட்பட) ‘ஹிந்தியில் பேசக் கூடாது; ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும்’ என்பதில் கவனமாக இருக்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி!
காரணம் – தெரிந்ததே! திருச்சியில் ஒரு இரயில்வே அலுவலகத்தில் சமஸ்கிருத – ஹிந்தி எழுத்துகளை அப்படியே தமிழில் பொறிக்கப்பட்டு இருந்தது என்றவுடன் – கவனத்திற்கு வந்த அக்கணமே, பல திசைகளிலிருந்தும் எதிர்ப்புக் குரல் தீயாக மூண்ட நிலையில், அந்த எழுத்துகளை கருப்பு மை கொண்டு அழிக்கும் ‘இள ரத்தங்கள் தமிழ்நாட்டில் கொதி நிலையில் இருக்கின்றன’ என்பதை மறக்க வேண்டாம்!
ஹிந்தியாக இருந்தாலும் – அதன் தாயான சமஸ்கிருதமாக இருந்தாலும் அவற்றைப் ‘பெரியார் மண்’ பார்க்கும் பார்வையே வேறு! அது ஒரு ‘பார்ப்பனியப் பண் பாட்டுப் படையெடுப்பு’ என்பதே அந்தக் கூர்மையான பார்வை!
ஆர்.எஸ்.எஸ். குருநாதர் கோல்வால்கர், ‘இந்தியாவின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு சமஸ்கிருதமே’ என்று கூறிய அந்தக் கால கட்டத்திலேயே ‘தமிழிற்குத் துரோகமும், இந்தியின் ரகசியமும்’ என்ற தலைப்பில் ‘குடிஅரசு’ இதழில் (7.3.1926) எழுதி அடையாளம் காட்டியவர் தந்தை பெரியார் என்பதை மறக்க வேண்டாம்! அந்நாள் – இந்நாள் தான்!
