இது எல்லோருக்குமான நாடு- ஒவ்வொருவருக்கும் ஒரு வழிபாட்டு முறை என்று தனித்தனியாக இருக்கிறது – ஒன்று கூடினால் தான் ஒற்றுமை!
முரண்பாடான பல விஷயங்களை நிராகரித்த தமிழ்மண் – இதையும் நிராகரிக்கும்; இந்தியாவை நிராகரிக்க வைப்போம் என்பதற்கான ஓர் அறிகுறிதான் இந்தக் கூட்டம்!
சென்னை, மார்ச் 7 இது எல்லோருக்குமான நாடு. ஒவ்வொருவருக்கும் ஒரு வழிபாட்டு முறை, ஒரு பழக்க வழக்க முறை என்று தனித்தனியாக இருக்கிறது. ஒன்று கூடினால் தான் ஒற்றுமை. முரண்பாடான பல விஷயங்களை நிராகரித்த தமிழ்மண் – இதையும் நிராகரிக்கும். இந்தியாவை நிராகரிக்க வைப்போம் என்பதற்கான ஓர் அறிகுறிதான் இந்தக் கூட்டம் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் தோழர் நாகை மாலி அவர்கள்.
‘‘மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைப்பதா? மதவெறிப் பாடலான வந்தே மாதரம் தேசியப்பாடலா?’ சிறப்புக் கூட்டம்!
‘‘மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைப்பதா? மதவெறிப் பாடலான வந்தே மாதரம் தேசியப்பாடலா?’’ என்ற தலைப்பில், கடந்த 18.2.2026 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி யின் சட்டப்பேரவை உறுப்பினர் தோழர் நாகை மாலி கண்டன உரையாற்றினார்.
அவரது கண்டன உரை வருமாறு:
மதச்சார்பின்மையைக் குழித் தோண்டிப் புதைப்பதா – மதவெறிப் பாடலான வந்தே மாதரம் தேசியப் பாடலா? என்கிற தலைப்பின் கீழ் திராவிடர் கழகம் எடுத்திருக்கிற இந்தக் கண்டன கூட்டத்திற்கு, வரவேற்புரை ஆற்றி யிருக்கிற திராவிடர் கழகத்தினுடைய துணைத் தலைவர் அருமைச் சகோதரர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, கண்டன உரையாற்றிச் சென்றிருக்கிற இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் வீர பாண்டியன் அவர்களே, பேராசிரியர் ஹாஜா கனி அவர்களே, மரியாதைக்குரிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் அய்யா ‘தகைசால் தமிழர்’ காதர் மொகிதீன் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் மரியாதைக்குரிய அண்ணன் ஆர்.எஸ்.பாரதி அவர்களே, நிறைவாக உரையாற்ற இங்கே வருகை தந்திருக்கிற தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா வீரமணி அவர்களே, எதிரே அமர்ந்திருக்கிற பெரியோர்களே, தாயம்மார்களே! நன்றியுரையாற்றவிருக்கின்ற திராவிடர் கழகத்தினுடைய தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் அவர்களே! உங்கள் அனைவருக்கும் முதலில் என்னுடைய மாலை நேர வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசிரியர் அய்யாவுக்கு
என்னுடைய நன்றி!
இந்த அழைப்பிதழில், எப்பொழுதும் பேச்சாளர் வரிசை இருக்கும்; எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்கிற ஓர் அளவும் இங்கே கொடுத்திருப்பது மிகவும் நல்லது. என்னுடைய வாழ்நாளில், என்னுடைய அரசியல் வாழ்க்கையில், முதன்முதலாக இந்த அருமையான இடத்திற்கு இப்பொழுதான் நான் வந்திருக்கிறேன். அந்த வாய்ப்பைக் கொடுத்த ஆசிரியர் அய்யாவுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய வெற்றிக்காக கீழ்வேளூர் தொகுதிக்கு ஆசிரியர் அய்யா அவர்கள் வருகை தந்து, பல கூட்டங்களை நடத்தி, ஏராளமான வாக்குகளை எனக்குப் பெற்றுத் தந்து, அந்த வெற்றியை எனக்கு அளித்த ஆசிரியர் அய்யா அவர்களுக்கு மீண்டும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாடு நன்றாக இருக்கக் கூடாது அதுதான் ஒன்றிய அரசினுடைய நிலை!
ஒன்றிய அரசு மீண்டும் மதவெறி ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறது, இந்தப் பாடலை எங்கேதான் தேடிப் பிடித்தார்களோ, தெரியவில்லை. பழைய விஷயங்களை எல்லாம் தேடிப் பிடித்துக் குழப்பத்தை விளைவிப்பதுதான், அவர்களுக்கு வேலை. நாடு நல்லா போய்க்கொண்டிருக்கிறது. நல்ல நிலையில் போகக்கூடாது; அவர்களுக்கு அதுதானே பிரச்சினை. நாடு நன்றாகப் போகக்கூடாது; நாடு நன்றாக இருக்கக் கூடாது அதுதான் ஒன்றிய அரசினுடைய நிலை.
இந்த வந்தே மாதரம் பாடல் நிறைய பேருக்குத் தெரியாது. அதெல்லாம் சுதந்திர போராட்டக் காலத்தில் அந்தப் பாட்டை பாடினார்கள். நம்முடைய கொடிகாத்த குமரன் கூட கொடியைப் பிடித்துக்கொண்டு, பிரிட்டிஷ்காரன் அடித்தபோது, ‘வந்தே மாதரம்’ என்று சொல்லித்தான் உயிர்விட்டார். பாரதியார் கூட, ‘வந்தே மாதரம் என்போம்; நமது மாநிலத் தாயை வணங்குதும் என்போம்’ என்றெல்லாம் பாடி இருக்கிறார். அதற்கு மேல் யாரும் பாடவில்லை. அதற்கு மேல அந்தப் பாட லைப் பாட முடியாது. அதுதான் அதில் இருக்கின்ற பிரச்சினை.
பல மொழி, பல இனம், பல கலாச்சாரம் கொண்ட நாடு இந்தியா!
வந்தே மாதரம் பாடல் என்பது ஆறு சரணம். அந்த நாவலைப் படித்தீர்கள் என்றால், தெரியும். அது ஒரு மாதிரியான நாவல் – நம்முடைய அருமைப் பேராசிரியர் சொன்னது போல. அந்த நாவலில் ஆறு சரணங்களை அவர் எழுதியிருக்கிறார். அந்த முதல் இரண்டு சரணம் பிரச்சினை இல்லாதது. அதை எல்லோரும் பாடலாம். ஆனால், மீதம் உள்ள நான்கு சரணங்களை எல்லோரும் பாட முடியாது. ஏனென்றால், இந்த நாடு, பல மொழி, பல இனம், பல கலாச்சாரம், இப்படிப் பலப் பல வித்தியாசங்கள் நிறைந்த நாடுதான் நம்முடைய நாடு. அதுதான் இந்த நாட்டினுடைய அழகே, நாடுகள் எல்லாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சொல்லிப் பேசுவார்கள். உலகம் முழுவதும் உள்ள எல்லலோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பேசுவார்கள். ஆனால், நம்முடைய நாடு வித்தியாசமான நாடு. இங்கே வேற்றுமையாக இருந்தால்தான் ஒற்றுமையாக இருக்க முடியும். பிரச்சி னையே அதுதான். இங்கே வேற்றுமையாக இல்லை என்று சொன்னால், ஒற்றுமையாக இருக்க முடியாது. இந்த நாடு ஒற்றுமையாக இருக்காது. இந்த நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சொன்னால், வேற்றுமை; ‘யூனிட்டி இன் டைவர்சிட்டி’ – நம்முடைய யூனிட்டி எதில் இருக்கிறது என்றால், டைவர்சிட்டியில் தான் இருக்கிறது.
டைவர்சிட்டி இல்லை என்றால், யூனிட்டி இல்லை. அந்த நான்கு சரணமும், எதைப் பற்றிப் பாடுகின்றன என்றால், இந்து மதக் கடவுள்களைப் பற்றிச் சொல்லக்கூடியவைதான் அந்த நான்கு சரணங்களும். காளியைப் பற்றி, லட்சுமியைப் பற்றி, துர்கையைப் பற்றி பாடக்கூடியவைதான் அந்த நான்கு சரணங்களும்.
‘வந்தே மாதரம்’ பாடலில் நம்பிக்கை இல்லாதவர்களும், மற்ற மதத்தைச் சார்ந்தவர்களும் எழுந்து நிற்கவேண்டும்!
ஆகவே, இந்த நான்கு சரணங்கள் உள்பட, மொத்தம் ஆறு சரணங்களையும் எல்லோரும் பாட வேண்டும். அந்தப் பாடல் ஒலிக்கிற பொழுது, அந்தப் பாடலில் நம்பிக்கை இல்லாதவர்களும், அந்த மதத்தைச் சாராதவர்களும் எழுந்து நின்று, அந்தக் கடவுள்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறான்.
ஏன் எல்லாரும் நிற்கவேண்டும்?
இந்துக்கள் வாழுகிற நாடு, இந்த நாடு. இஸ்லாமியர்கள் வாழ்கிற நாடு, இந்த நாடு. சீக்கியர்கள் வாழ்கிற நாடு, இந்த நாடு. கிறிஸ்தவர்கள் வாழ்கிற நாடு, இந்த நாடு. அவரவர்களுக்கு ஒவ்வொரு வழிபாட்டு உரிமை இருக்கிறது; வழிபாட்டு முறை இருக்கிறது. ஆகவே, அந்த வழிபாட்டு முறையை இதில் கொண்டு வந்து திணிக்கிறான். அப்படி எழுந்து நிற்கவில்லை என்றால், இந்து மத நம்பிக்கையைத் தவிர்த்து, மற்ற மதத்தைச் சார்ந்தவர்கள், மற்ற மத நம்பிக்கை உள்ளவர்கள் இந்தப் பாடலுக்கு எழுந்து நிற்கவில்லை என்று சொன்னால், அவர்களுக்குத் தேசபக்தி இல்லை என்கிறான்.
ஒவ்வொருவருக்கும் ஒரு வழிபாட்டு முறை என்று தனித்தனியாக இருக்கிறது!
நீ யார், எங்களுடைய தேசபக்தியைத் தீர்மானிப்ப தற்கு? எங்களுடைய தேசபக்தியைத் தீர்மானிப்பதற்கு, எங்களுடைய தேசபக்தியை வெளிப்படுத்துவதற்கு, எங்களுக்கு என்று சில முறை இருக்கிறது. இந்த நாடு, உன் நாடு அல்ல. உனக்கு மட்டும் சொந்தமான நாடு அல்ல. இது எல்லோருடைய நாடு. எல்லோரும் பாடுபட்டு, எல்லோரும் சிறை சென்று, எல்லோரும் போராடி வெள்ளையனை விரட்டி, சுதந்திரம் பெற்ற நாடு. இது எல்லோருக்குமான நாடு. ஒவ்வொருவருக்கும் ஒரு வழிபாட்டு முறை, ஒரு பழக்க வழக்க முறை என்று தனித்தனியாக இருக்கிறது. ஒன்று கூடினால் தான் ஒற்றுமை.
எதை முன்னால் பாட வேண்டும்; எதைப் பின்னால் பாட வேண்டும் – இப்போது தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் நடைபெறுகின்ற செய்திகள் உங்களுக்குத் தெரியும். ஓர் அருமையான ஆளுநர், ஒருவர் வந்திருக்கிறார். தமிழ்நாடு சட்டமன்றம், நம்முடைய சட்டமன்றம். ஆளுநர் என்பவர் ஒன்றிய அரசால் அனுப்பப்பட்ட ஒரு பிரதிநிதி. ஆளுநர் உரை என்பது, அரசாங்கத்தினுடைய உரை. அரசினுடைய செயல் திட்டத்தினுடைய ஓர் உரைதான் ஆளுநர் உரை. அது ஆளுநர் உரையாக சட்டமன்றத்தில் சொல்லப்பட வேண்டும் என்று ஒரு மரபு இருக்கிறது. அது ஒரு மரபுதான்.
ஆனால், என்ன செய்தார் ஆளுநர் ஆர்.என். ரவி? அரசாங்கத்தினுடைய உரையில், அவருக்குப் பிடிக்காத வார்த்தைகளை எல்லாம் விட்டுவிட்டுப் படித்தார். அவர் என்ன விரும்புகிறாரோ, அந்த வார்த்தைகளையெல்லாம் சொல்கிறார். நாங்கள் எல்லாம் ஆளுநர் உரையின் நகலை வைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். பலது அதில் இல்லை; அதை அவர் சொல்கிறார். பலது இருக்கிறது, அதை அவர் சொல்ல மாட்டேங்கிறார். என்னடா, இப்படி படிக்கிறாரே? ஆளுநர் உரை என்பது, அந்த ஆளுநர் உரையில், ஆர்.என்.ரவி மோசமான ஆள் என்று எழுதியிருந்தாலும், அதை அவர் படிக்க வேண்டும். அவர் வாயால் படிக்க வேண்டும், அவ்வளவுதான். அதை அப்படியே படிக்க வேண்டும். ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி அவர் விருப்பத்திற்குப் படித்தார்.
சட்டப்பேரவையில் நாங்கள் எல்லாம் பதற்றத்தில் இருந்தோம்!
நம்முடைய முதலமைச்சர் அதைப் பார்த்துக் கொண்டே, அவர் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். ஆளுநர் படிக்கிறார், முதலமைச்சர் ஏதோ எழுதுகிறாரே என்று நாங்கள் எல்லாம் பதற்றத்தில் இருந்தோம்.
ஆளுநர் ஆர்.என்.ரவி, உரையைத் தப்புத் தப்பாகப் படித்துவிட்டு, உட்கார்ந்தார்.
நம்முடைய முதலமைச்சர் எழுந்து, அவர் ஒன்றே படித்தார். முதலமைச்சர் தமிழில் படித்தார். ஆளுநர் ஆர்.என். ரவிக்குத் தமிழ் தெரியவில்லை. அவருடைய பி.ஏ.வைக் அழைத்துக் கேட்கிறார். ‘‘நான் படித்தேன், இப்போது முதலமைச்சரும் படிக்கிறாரே, அவர் என்ன படிக்கிறார்?’’ என்று.
அவருடைய பி.ஏ. சொன்னார், ‘‘இதுவரைக்கும் நீங்கள் படித்தையெல்லாம் ஏத்துக்க முடியாது; தப்புன்னு படிச்சார்.இதுவரைக்கும் நீங்கள் என்ன படித்தீர்களோ, அது செல்லாது என்று முதலமைச்சர் சொன்னார்’’ என்றார். அவ்வளவுதான், எறும்பு கடித்த மனிதன் மாதிரி, ஓடின ஆள்தான். அந்த ஆள் நல்லா ஓடுகிறான்; ஏனென்றால், அய்.பி.எஸ். அல்லவா! ஓடி, ஓடி, அவைக்கு வருவதும். ஓடுவதும்; நீ ஏன் தமிழ்த்தாய் வாழ்த்தை முன்னாடி பாடுகிறாய்; அதை ஏன் பின்னாடி பாடுகிறாய் என்று – இப்படி ஒரு கூத்து தமிழ்நாட்டில் நடந்து கொண்டு இருக்கிறது.
பாசிசத்தினுடைய
ஒரு வடிவம்தான் இது!
அது மாதிரிதான் இதுவும். ஜனகணமன, அதைப் பாட வேண்டும்; இதைப் பாட வேண்டும். எழுந்து நிற்கவேண்டும்; அவையெல்லாம் அப்பட்டமான ஒரு பாசிசக் கொள்கை. பாசிசத்தினுடைய ஒரு வடிவம்தான் இது. நான் ஏற்றுக்கொள்ளாத, நான் விரும்பாத, எனக்கு உகந்தது அல்லாத, என்னுடைய மதத்திற்கு விரோதமான ஒரு கருத்தை நீ சொல். அதற்கு மரியாதை செலுத்து என்று சொல்வது, ஒரு பாசிசக் கொள்கை.
ஆகவே ஒன்றிய அரசு, எதை நோக்கிச் செல்கிறது என்றால், பாசிசத்தை நோக்கிச் செல்கிறது. பாசிசம் என்று சொன்னால், ஹிட்லர் போன்றுதான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இது பாசிசத்தினுடைய இந்திய வடிவம். பாசிசத்திற்கு ஒவ்வொரு நாட்டுக்கு ஏற்ற மாதிரி ஒரு வடிவம் இருக்கிறது. இது இந்திய வடிவம்.
ராஜேந்திர பிரசாத் –
வல்லபாய் பட்டேல்!
ஆகவே, இதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. தேசிய கீதம் வேறு; இது ஒரு தேசியப் பாடல். இது தேசிய கீதத்தில் இது ஒரு பாடல். ஒரு காலத்தில் பாடியது. அந்தப் பாடலையெல்லாம் எடுத்தாத்தாகிவிட்டது.
1939 இல் – ஆசிரியர் அய்யாவுக்குத் தெரியாத விஷயம் இல்லை. காங்கிரஸ் கமிட்டியின் காரிய கமிட்டி கூடி, அந்தப் பாடலுடைய பொருளைப் பார்த்து, இந்த நான்கு சரணங்களும் நம்முடைய நாட்டின் ஒற்றுமைக்கு விரோதமான சரணங்கள்; ஆகவே, அவற்றை எடுத்துவிடுகிறோம். வேண்டுமென்றால், இரண்டு சரணங்களையும் பாடலாம் என்று அன்றைக்கே முடிவு செய்யப்பட்டது. ராஜேந்திர பிரசாத் தான், காங்கிரஸ் கட்சியினுடைய காரிய கமிட்டியில் இந்த நான்கு சரணங்களையும் எடுக்கக்கூடிய தீர்மானத்தைக் கொண்டு வருகிறார், வல்லபாய் பட்டேல் அந்தத் தீர்மானத்தை வழிமொழிகிறார். அந்தக் கூட்டத்தில காந்தியாரும் இருக்கிறார்.
மக்களின் ஒற்றுமையை உடைக்கக்கூடிய பாடலை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது!
ஆகவே, வேண்டாம் என்று சொன்ன ஒரு பாடலை, மீண்டும் இதன் மூலமாக செய்யலாம் என்று நினைக்கிறார்கள். எதற்காக இது தெரியுமா? மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கின்றது. அந்தப் பாடலில் காளி என்று வருகிறது. அந்தப் பாடலை அங்கே படிக்க வேண்டும்; ஓட்டு வாங்க வேண்டும். எல்லாம், ஓட்டை வைத்து, வாக்கை வைத்து செய்கிற பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். கும்பலுடைய விருப்பத்திற்கு – மக்களின் ஒற்றுமையை உடைக்கக்கூடிய இந்தப் பாடலை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
முரண்பாடான பல விஷயங்களை நிராகரித்தவர்கள் நாம், பல விஷயங்களை நிராகரித்த தமிழ்மண் – இதையும் நிராகரிக்கும். இந்தியாவை நிராகரிக்க வைப்போம் என்பதற்கான ஓர் அறிகுறிதான் இந்தக் கூட்டம் என்று சொல்லி, இந்தக் கூட்டத்தில் பங்கேற்ப தற்கான வாய்ப்பினை தந்த ஆசிரியர் அய்யா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து விடைபெறுகிறேன்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் தோழர் நாகை மாலி கண்டன உரையாற்றினார்.
