மனசாட்சியை மறந்துவிட்டுப் பதவியைக் காப்பாற்றிட – அரசியல் அறத்தை மறந்துவிடக் கூடாது என்பதே நமது வேண்டுகோள்!

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றம்;
கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு கூடுதல் பொறுப்பு!
மண்ணின் மனோபாவம் (Soil Psychology) பார்த்து நடந்துகொள்வது அவருக்கும், தமிழ்நாட்டிற்கும் நல்லது!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றம்; கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு கூடுதல் பொறுப்பு! மண்ணின் மனோபாவம் (Soil Psychology) பார்த்து நடந்துகொள்வது அவருக்கும், தமிழ்நாட்டிற்கும் நல்லது! மனசாட்சியை மறந்துவிட்டுப் பதவியைக் காப்பாற்றிட – அரசியல் அறத்தை மறந்துவிடக் கூடாது என்பதே நமது வேண்டுகோள் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டிற்கு வந்த நாள் முதல், இந்த நாள் வரை ‘‘அடாவடி அரசியல்’’ செய்து, தமிழ்நாட்டு மக்களிடம் அவமானப்பட்ட ஒருவர்தான், மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டுள்ள ஆளுநர்
ஆர்.என்.ரவி ஆவார்!

ஒரு ‘போட்டி அரசினையே’
அனுதினமும் நடத்திக் கொண்டு வந்தவர்!

இவரது பச்சைப் பார்ப்பனத்தனத்தாலும், ஒன்றிய ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆட்சியின் பக்க பலத்தாலும், ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு எதிராக அன்றாடம் அவதூறைப் பரப்பி, அரசியலமைப்புச் சட்டம் ஆணையிட்டுள்ள கடமைகளைக்கூட சரி வர நிறைவேற்றாது, அதற்கு எதிராகவே நடந்துகொண்ட ஆளுநர் ரவி  ஆணவத்தின் உச்சாணிக்குச் சென்று, தமிழ்நாடு அரசுக்கு எதிராக ஒரு ‘போட்டி அரசினையே’ அனுதினமும் நடத்திக் கொண்டு வந்தவர்.

சட்டமன்ற மரபுகளைக்கூட பின்பற்றாத ஒரு ‘தக்கை’ அரசியல் செய்தவர். அவர் சம்பாதித்த அவப்பெயரை இதுவரை இருந்த எந்த ஆளுநரும் பெற்றதே இல்லை!

ஆனால், அவரது இந்தத் திராவிட உணர்வுகளுக்கு எதிரான செயல்முறை, நாளும் தி.மு.க. ஆட்சிக்கு நல்ல உரமாகி, வலுசேர்ப்பதாக இருந்ததால், ‘‘அவர் மேலும் எவ்வளவு ‘ஒத்துழையாமை’ செயல்களில் ஈடுபட்டாலும், அது எங்களுக்கு வரவே! மக்கள் ஆதரவைக் கூடுதலாக எங்களுக்கு வழங்க உதவிடும் வாய்ப்புகள்’’ என்றே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பேசி வந்தார்.

தமிழ்நாட்டில் தேர்தல் வருவதால், அவர் மாற்றப்படுவதற்கு அதுவே ‘ஒரு காரணமாக’ இருக்கக்கூடும் என்ற கருத்து உள்ளது; அல்லது மேற்கு வங்கத்தில் எப்பாடு பட்டாவது பா.ஜ.க. ஆட்சியை அமைக்க, இவர்தான் பல வகைகளில் உதவிகரமாக இருப்பார் என்று கருதியும்கூட அவரது மாற்றல் ஏற்பட்டிருக்கலாம்!

மோடி, அமித்ஷா போன்றவர்களுக்கு –
ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுக்கு ஏதோ ஓர் உள்ளார்ந்த திட்டமும் அதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.

ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரும்
ஆர்.எஸ்.எஸ்.காரர்தான்!

அவருக்குப் பதிலாக புதிதாக ஓர் ஆளுநரை நியமிக்காமல், கேரள மாநிலத்தின் ஆளுநராக உள்ள (அவரும் ஆர்.எஸ்.எஸ்.காரர்தான்) ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் கூடுதல் பொறுப்பாக தமிழ்நாட்டையும் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது!

எது, எப்படியானாலும், தமிழ்நாட்டைப் பிடித்து வந்த ‘அரசியல் பீடை’ அகன்றது – அது வேறு எங்கே வேண்டுமானாலும் செல்லட்டும்; அங்கே அவருக்கு நல்ல ‘வரவேற்பு’ நிச்சயம் கிடைக்கக் கூடும்.

சற்று பொறுத்துப் பார்க்கலாம்!

கூடுதல் பொறுப்பேற்கும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், கேரளம் அரசுடன் அரசியலமைப்புச் சட்டம் – மரபுப்பற்றிக் கவலைப்படாமல், சட்ட மன்ற நடப்புகளில் எதிராக நடந்துகொண்டவர் என்பதன்மூலம், இவர் தமிழ்நாட்டில், அதுவும் தேர்தல் காலத்தில் எப்படி நடந்துகொள்ளப் போகிறார் என்பது – சந்தேகத்திற்குரிய ஒன்றானது என்றாலும்கூட, சற்று பொறுத்துப் பார்க்கலாம்!

முன்பு ஆளுநர் ரவி நடந்துகொண்டதுபோல் நடந்து, ‘‘அவரே பரவாயில்லை – இவரது செயற்பாடு களைப் பார்க்கையில்’’ என்று தமிழ்நாட்டு மக்கள் கூற வாய்ப்புத் தராமல், தமது அரசியலமைப்புச் சட்டக் கடமைகளைப் பொறுப்புணர்வோடு, நியாயத் தராசு ஒரு பக்கம் ‘சாயாமல்’ இருக்கும்படியும் நடந்துகொள்ளவேண்டும்.

கிராமத்தில் ஒரு பழமொழி கூறுவார்கள், ‘எலுமிச்சைப் பழத்திற்குப் பதில், புளியம்பழம் வந்தால், அதன் புளிப்பு உருட்டைக்கு நீளம் – புளிப்பில் அதற்கு அப்பன்’ என்று கூறும் நிலை ஏற்பட்டு விடக்கூடாது!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு – முதலமைச்சர் – சட்டமன்ற மரபுகள் எல்லாவற்றை யும்விட முக்கியம், மண்ணின் மனோபாவம் (Soil Psychology) பார்த்து நடந்துகொள்வது அவருக்கும், தமிழ்நாட்டிற்கும் நல்லது!

எல்லாவற்றிற்கும் ‘டில்லியின் பொம்மலாட்டம் தான்’ காரணம் என்றாலும், மனசாட்சியை மறந்து விட்டுப் பதவியைக் காப்பாற்றிட – அரசியல் அறத்தை மறந்துவிடக் கூடாது என்பதே நமது வேண்டுகோள்!

 கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

 

சென்னை

7.3.2026

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *