புதூரான்
கொண்டாட்டம் என்றாலே மகிழ்ச்சியும் மன நிறைவுமாக இருக்க வேண்டும். ஆனால், அண்மைக் காலமாக ‘ஹோலி’ என்ற பெயரில் பெண்கள், சிறுமிகள் பொதுவெளியிலேயே மானபங்கப்படுத்தப்படுகிறார்கள்.
பாரம்பரியமும், வண்ணங்களும் நிறைந்த ‘ஹோலி’ கொண்டாட்டம் தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டுவதைக் குறிக்கிறது என்று இந்த விழாவைக் கொண்டாடுபவர்கள் கதைவிடுவார்கள்.
ஆனால் காலம் காலமாக இந்தப் கொண்டாட்டத்தின் பெயரால் அரங்கேறும் நிகழ்வுகள், நாம் நாகரிக சமூகத்தில்தான் வாழ்கிறோமா என்ற அச்சத்தை எழுப்புகின்றன. மகிழ்ச்சி என்ற பெயரில் மனிதநேயமற்ற செயல்களும், வன்முறைகளும் ஒரு கலாச்சாரமாகவே மாறி வருவது சமூகத்தின் வீழ்ச்சியைக் காட்டுகிறது.
2022ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசம் மதுராவில் கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து சகோரியின் ஆடையையே கிழித்து மானபங்கப் படுத்தி ஹோலி கொண்டாடினார்கள். இதனால் அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டார். அந்தக் தற்கொலையை காதல் விவகாரம் என்று குடும்பத்தினரே காவல்துறையிடம் தெரிவித்தது மேலும் கொடூரம் ஆகும்.
அதே போல் கடந்த ஆண்டு இட்டா மாவட்டத்தில் 4 வயது சிறுமிக்கு ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் மதுவை வாயில் ஊற்றிய கொடூரம் பொதுவெளியில் காணொலியில் பரவியது. இது தொடபாக புகார் அளிக்கப்பட்டபோது, ‘பூரா மத்மானோ ஹோலி ஹே’ ‘தப்பா நினைக்கக் கூடாது, இது ஹோலி கொண்டாட்டம்’ என்று காவல்துறையினரே கூறியதை காணொலியில் வெளியிட்டது.
இந்த ஆண்டு அரியானா மாநிலத்தில் ஹோலி கொண்டாட்டத்தின்போது, பசு ஒன்றிற்கு ஒரு கும்பல் வலுக்கட்டாயமாக மது புகட்டும் காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் சுமார் 10 விநாடிகள் ஓடக்கூடிய அந்த காணொலியில், ஒரு கும்பல் பசுவின் வாயை பலவந்தமாகத் திறந்து, வெளிநாட்டு ரக மதுபானத்தை (Liquor) அதன் தொண்டையில் ஊற்றுகின்றனர். அந்த வாயில்லா ஜீவன் தப்பிக்க முயன்றும், விடாமல் அந்த கும்பல் இந்த மிருகத்தனமான செயலில் ஈடுபட்டுள்ளது.
ஹோலி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அநாகரிகச் செயல் அரங்கேறியுள்ளது. எனினும், இந்த சம்பவம் ஹரியானாவின் எந்த மாவட்டத்தில் நடைபெற்றது என்பது குறித்த துல்லியமான தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
இந்து தர்மத்தில் பசுக்கள் ‘புனித’மான தெய்வமாகப் போற்றப்படுகின்றன. அத்தகைய பசுவுக்கு போதைப்பொருள் புகட்டிய செயல் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகப் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். விலங்கு நல ஆர்வலர்கள்: “இது வெறும் அநாகரிகச் செயல் மட்டுமல்ல, ஒரு உயிரினத்திற்கு இழைக்கப்படும் கடுமையான சித்திரவதை” என விலங்கு நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சட்ட நடவடிக்கை: அரியானா மாநிலத்தில் பசுவதைத் தடுப்புச் சட்டங்கள் மற்றும் விலங்கு வதை தடுப்புச் சட்டங்கள் மிகவும் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன. எனவே, காணொலியில் உள்ள நபர்களை உடனடியாக அடையாளம் கண்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இந்த விவகாரம் இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், அரியானா மாநில அரசோ அல்லது அம்மாநில காவல்துறையினரோ இதுவரை இது தொடர்பாக எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமோ அல்லது அறிக்கையோ வெளியிடவில்லை.
- விலங்கு வதை தடுப்புச் சட்டம் (பிசிஏ), 1960
இது விலங்குகளைப் பாதுகாப்பதற்காக இயற்றப்பட்ட முதன்மையான சட்டமாகும்.
விலங்குகளுக்குத் தேவையற்ற வலி அல்லது துன்பத்தை ஏற்படுத்துவதைத் தடுத்தல் இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
- பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), 2023
முன்பு இந்திய தண்டனைச் சட்டம் (அய்பிசி) என்று அழைக்கப்பட்ட இதில், விலங்குகளுக்கு எதிரான குற்றங்களுக்காகப் பிரிவு 325 (முன்பு 428/429) கீழ் தண்டனைகள் வழங்கப்படுகின்றன.
எந்தவொரு விலங்கையும் கொல்லுதல், விசம் வைத்தல், ஊனப்படுத்துதல் அல்லது பயனற்றதாக மாற்றுதல் ஆகியவை குற்றச் செயல்களாகக் கருதப்படுகின்றன.
இத்தகைய குற்றங்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இவை இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்.
- வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972
இந்தச் சட்டம் குறிப்பாகக் காட்டு விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
காட்டு விலங்குகளை வேட்டையாடுதல், சிறைபிடித்தல் அல்லது அவற்றைப் வணிக ரீதியாக வர்த்தகம் செய்தல் ஆகியவற்றை இந்தச் சட்டம் கடுமையாகத் தடை செய்கிறது.
- இந்திய அரசியலமைப்புச் சட்டம்
சட்டங்கள் மட்டுமன்றி, இந்திய அரசியலமைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் சில அடிப்படை கடமைகளை வகுத்துள்ளது.
பிரிவு 51A(g): மற்ற உயிரினங்கள் மீது பரிவு காட்டுவது (Compassion) ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படை கடமையாகும் என்று இது கூறுகிறது.
முக்கியக் குறிப்பு: அரியானாவில் பசுவுக்கு மது புகட்டப்பட்ட சம்பவத்தில், மேலே குறிப்பிட்டுள்ள பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 325 மற்றும் விலங்கு வதை தடுப்புச் சட்டம் 1960 ஆகியவற்றுடன் அந்த மாநிலத்தின் பிரத்யேக பசு பாதுகாப்புச் சட்டங்களின் கீழும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.
அரியானாவில் பாஜக அரசு இந்தியாவிலேயே பசுக்கு என்று அமைச்சரவை உள்ள ஒரே மாநிலம் அரியானாதான், ஆகவே அரியானா மாநிலம் இந்த கோடுர நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா? அல்லது ஹோலி தானே கண்டுகொள்ளாதீர்கள் என்று விட்டுவிடுமா? செய்தவர்கள் பசுப்பாதுகாவலர்கள் ஆயிற்றே!!!
