திருவாங்கூர் சமஸ்தானம் (22) ‘‘மனிதத் துயரங்களும், மாறாத வடுக்களும்!’’ மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி

6 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஈழவ மக்களுக்கு மேலாக கொடுமைகளுக்கு ஆளானவர்கள் புலையர்கள். தீண்டாமை, காணாமை, கல்லாமை என்று கொடுமை மட்டுமின்றி வாழ்வியல் அவர்களுக்குக் கொத்தடிமைகளை விட கேவலமாக இருந்தது. ‘தீண்டல், தொடீல்’ என்று ஒதுக்கி வைக்கப்பட்ட அம்மக்கள் தப்பித் தவறி அந்தக் கட்டுப்பாட்டை மீறினால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். சாணார்களுக்கு (நாடார்களுக்கு) ஒரு வைகுண்டசாமி அவர்கள் வந்ததுபோல், ஈழவர்களுக்கு ஒரு நாராயண குரு அவர்கள் வந்ததுபோல், அவர்கள் வருகையால் அந்த மக்கள் உயர்வடைந்ததுபோல், புலையர் மக்களை ஜாதியக் கொடுமைகளிலிருந்து மீட்டெடுக்கத் தோன்றியவர்தான் மாவீரன் மகாத்மா அய்யன் காளி!

நெய்யாற்றுக்கரை தாலுக்காவில், கோட்டுக்கல் வட்டாரத்தில் வெங்கனூர் என்ற சிறு கிராமத்தில் அய்யன்காளி பிறந்தார். வெங்கனூரில் உள்ள பெருங்காற்று விளை என்ற குன்று பகுதியில் அய்யன், மாலை என்ற புலைய இன இணையர்களுக்கு 1863ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 28ஆம் தேதி ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்த சுறுசுறுப்பான அந்தக் குழந்தைக்குக் “காளி” என்று பெற்றோர் பெயரிட்டனர். காளி வளர்ந்து பெரியவனானபோது தந்தை பெயரும் சேர்ந்து “அய்யன்காளி” என்ற பெயரும் நிலையாக இருந்துவிட்டது. வெங்கானூரில் “புத்தளத்து குடும்பம்” என்ற புகழ் பெற்ற நாயர் குடும்பம் வசித்து வந்தது. அந்தக் குடும்பத்தின் தலைவர் “புத்தளத்து பரமேஸ்வரன் பிள்ளை.”  அவரிடம் அடிமையாக, பண்ணை வேலையாளாக அய்யன் வேலை செய்து வந்தார். அய்யன் புலையர்களின் ஊர்த் தலைவராகவும் இருந்தார்.

அய்யன் தன் ஜன்மியான பரமேஸ்வரன் பிள்ளையிடம் மரியாதையும், அன்பும், மதிப்பும் கொண்டிருந்தார். பரமேஸ்வரன் பிள்ளையின் நிலங்களை சிறப்பாக சீர் செய்து வளம் கொழிக்கும் பூமியாக மாற்றினார் அய்யன். ஏராளமான புலையர்கள் அந்த நிலங்களை அய்யன் வழி காட்டலின்படி செம்மையாக்கினர். பரமேஸ்வரன் பிள்ளை மனிதநேயம் கொண்ட ஒரு பெருந்தனக்காரர். அய்யன் உழைப்பையும், நேர்மையையும் பார்த்து மகிழ்ந்த அவர் கிட்டத்தட்ட எட்டேகால் ஏக்கர் நிலத்தை, அவருக்குப் பதிவு செய்து கொடுத்து விட்டார். இது அய்யன் அவர்களை ஒரு நிலக்கிழார் என்ற நிலைக்கு உயர்த்தியது. அந்த இடம் ஒரு குன்றுப் பகுதி. ஆனால், அய்யன் அவர்கள் கடும் உழைப்பால் வளம் நிறைந்த பகுதியாக மாறியது.

கட்டுரை, ஞாயிறு மலர்

நம்பூதிரிப் பார்ப்பனர்களுக்கும், நாயர்களுக்கும் பரமேஸ்வரன் பிள்ளையின் இந்த நடவடிக்கை கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. ஒரு புலையனை (தீண்டத் தகாதவனை) நிலக்கிழாராக ஆக்குவதை அவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. தங்களின் மிரட்டல்களை பரமேஸ்வரன் மீதுத் தொடுத்தனர். ஜாதியக் கட்டுப்பாடுகளை அவர் மீது பாய்ச்சினர். தனிப்பட்ட செல்வாக்கும், பொருளாதார சுயசார்பும், மனவலிமையும் கொண்ட பரமேஸ்வரன் பிள்ளை ஜாதிய அழுத்தங்களுக்கு அஞ்சவில்லை. அய்யனுக்கு செய்து கொடுத்த வசதி, வாய்ப்புகளை மாற்றிக் கொள்ளவில்லை.

அய்யன், மாலை இணையர்களுக்குப் பத்துக் குழந்தைகள் பிறந்தன. அவர்களில் இருவர் சிறு வயதிலேயே மரணமடைந்து விட்டனர். மீதி 8 பேரில், 5 ஆண்கள், 3 பெண்கள். மூத்தவர்தான் காளி. செல்வமும், வாய்ப்பும் இருந்ததால் காளி ஒரு கம்பீரமான ஆண் மகனாக வளர்ந்தார். விளையாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டினார். அவர் ஜாதிப் பிள்ளைகள் கல்வி கற்க தடை இருந்த காலம் அது. புத்தகங்களோடு பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளை (மேல் ஜாதி) ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டே காளி நின்று கொண்டிருப்பான். தானும் பள்ளிக் கூடம் போக வேண்டும் என்ற ஆசையை பெற்றோர்களிடம் தெரிவித்தான்.

பள்ளிக் கூடத்தில் சேர்க்க முடியாத ஜாதியக் கட்டுப்பாட்டைப் பெற்றோர் கூறியபோது, அதுவே ஆழமான வடுவாக அந்தப் பிஞ்சு மனத்தில் பதிந்து விட்டது. நாளாக, ஆக பல வகைகளில் காளி ஜாதியக் கொடுமைகளை நேரடியாகப் பார்க்கவும், அனுபவிக்கவும் நேர்ந்தது. புலையர்கள் அனைவருமே அடிமைகளாகவே வாழ வேண்டியிருந்த கட்டாயம் காளியின் மனதை உறுத்தியது. அவர்கள் மற்ற உயர் ஜாதியினர் நடக்கும் தெருக்களில் நடக்கக் கூடாது. மேலாடை அணியக் கூடாது. செருப்பு அணியக் கூடாது. தலப்பாகை கட்டக் கூடாது. வெள்ளை நிற ஆடை அணியக் கூடாது. மாட்டு வண்டியில் போகக் கூடாது. உயர் ஜாதியினரின் பெயர் வைக்கக் கூடாது. உயர் ஜாதியினர் மொழிகளில் பேசக் கூடாது. செல்லப் பெயர்களை வைத்துக் கொள்ளக் கூடாது. தங்க நகைகளை அணியக் கூடாது. புலையர்கள் அடிமைகளாகவே பிறந்து, எந்த உரிமையுமின்றி அடிமையாகவே வளர்ந்து, அடிமைகளாகவே மடியும் கொடுமை அவரை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியது.

கட்டுரை, ஞாயிறு மலர்

காளி இளைஞனாக இருந்த பருவத்தில் மேல்ஜாதி நாயர் பையன்களுடன் கால் பந்து விளையாடியபோது, அவர் உதைத்தப் பந்து அருகில் இருந்த நாயர் வீட்டுக் கூரை மேல் விழுந்ததற்கு கடுமையான தண்டனைக்கு ஆளானார். நாயர் பையன்களுடன் விளையாடக் கூடாது என்று உத்தரவிடப்பட்டார். இதுபோன்ற சமூகக் கொடுமைகள் பற்றிய ஆழ்ந்த சிந்தனையை ஏற்படுத்தியது. (சான்று: ta.w.wikipedia.org)

படிப்பறிவில்லாத அய்யன்காளி, புலைய மக்கள் மனதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே தன் முதல் குறிக்கோள் என காளி நினைத்தார். படிப்பறிவில்லாத மக்களிடம் கலை நிகழ்ச்சிகள் மூலம் புரட்சிக் கருத்துகளை விதைக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். “கக்கலரிஷி நாடகம்”, “அரிச்சந்திரா”, “வள்ளி, முருகன் நாடகம்” என்ற பல நாடகங்களை மக்களிடம் நடத்தினார். அந்த நாடகங்களின் ஊடே புரட்சிகரக் கருத்துகளை விதைக்கும் பணியை மேற்கொண்டார். சமுதாய விடுதலைக்கான வீரம் சொரிந்த அவர் கருத்துகள் அடிமை மக்களின் விழிப்புணர்வுக்கும், எழுச்சிக்கும் வித்திட்டது. ஆங்கிலத்திலும், வடமொழியிலும் புலமை பெற்ற வணிகர் தைக்காடு அய்யாசாமி என்பவர் தொடர்பு காளிக்கு ஏற்பட்டது. அவரிடம் காளி தர்க்க சாஸ்திரங்களையும், ஆங்கிலமும் கற்றார்.

1883இல் அத்வைதியான சதானந்த சாமிகள் என்பவரிடம் மாணவராகச் சேர்ந்து கல்வி அறிவை வளர்த்துக் கொண்டார். சட்டம்பி சாமிகள், நாராயண குரு போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் இவரிடம் பயின்றவர்களே. சதானந்த சாமிகள் தலைமையில் கல்வி கற்கும் உரிமை, தெருக்களில் நடக்கும் உரிமை, மேலாடை அணியும் உரிமை ஆகியவைகள் கேட்டுப் போராடினார்.

அவரது கருத்துகள், உரிமைப் போராட்டங்கள் இளைஞர்களிடையே ஓர் எழுச்சியை உண்டாக்கியது. அவர்களை ஒருங்கிணைத்து, “அய்யன் காளிப் படை” என்ற ஒரு இளைஞர் படையை நிறுவினார். வன்முறையால்தான் அடிமைப்பட்டுக் கிடக்கும் மக்களுக்கு விடுதலை கிடைக்கும் என்று நம்பினார் காளி. அவர் பின்னால் அணி திரண்ட இளைஞர்களுக்கு சிலம்பம், மல்யுத்தம், களரி போன்ற தற்காப்புக் கலைகளில் பயிற்சி அளித்தார்.

புலையர்கள் வெள்ளை ஆடை உடுத்தக் கூடாது, தலைப்பாகை கட்டக் கூடாது. மாட்டு வண்டியில் செல்லக் கூடாது, நகை அணியக் கூடாது போன்றவற்றை ஒழித்து அவர்களுக்கும் அந்த உரிமைகளைப் பெற்றுத் தர, “மாட்டு வண்டிப் போராட்டம்” என்ற போராட்டத்தை அறிவித்தார். 1893இல் நாகர்கோவிலிலிருந்து கலை வேலைப்பாடுகள் நிரம்பிய ஒரு வில் வண்டியை அய்யன்காளி விலைக்கு வாங்கினார். அந்தக் காலத்தில் பெரும் பணக்காரர்களான நம்பூதிரிப் பார்ப்பனர்களும், செல்வந்தர்களான நாயர்களுமே வில் விண்டி வைத்துக் கொள்ள முடியும்.

ஒரு நாள் வில்வண்டியில் பூட்டுவதற்கு இரண்டு கம்பீரமான வெள்ளைக் காளைகளை வாங்கினார். காளைகளுக்கு இனிமையான ஒலி எழுப்பும் சலங்கைகளை அணிவித்தார். ஒரு கிலோ மீட்டருக்கு முன் அந்த வண்டி வரும்பொழுதே சலங்கை ஒலி கேட்கும். காளைகளைப் பூட்டும் முனையில் ஓவிய வேலைப்பாடுகளைக் கொண்ட தங்க நிறத்தினாலானத் தகடு, நுகத்தடியின் மய்யத்தில் மூன்று சலங்கைகள் கட்டப்பட்டு இருந்தது. வண்டிச் சக்கரங்களில் இருக்கும் அச்சாணிகளில் செருக்கப்பட்டிருந்த பித்தளைக் கம்பிகளில் மூன்று சலங்கைகள் கோர்க்கப்பட்டிருந்தன.

சக்கரங்களில் அழகிய வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வில் வண்டியின் மேற்கூரை ஆரஞ்சு, பொன் நிறமாக எழிலோடு காட்சி அளித்தது. காளைகளின் கழுத்தை அலங்கரித்த மணிகளும் மாறுபட்டு, தனித் தன்மையோடு காட்சியளித்தன. தனித்தன்மை வாய்ந்த அந்த மணிகளின் இரு பக்கங்களிலும் மூன்று சலங்கைகள் கட்டப்பட்டிருந்தன. காளை மாட்டு வண்டி ஓடும் பொழுது சலங்கை ஒலிகள் ஓர் இனிமையான – புதுமையான இசையை எழுப்பியது.

இரவு நேரங்களில் ஒளி கொடுக்க பிரான்சு நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட விளக்குகள் பக்கவாட்டில் பொருத்தப்பட்டிருந்தன. பார்ப்பனர்களும், பணக்காரர்களும் பயன்படுத்தும் வில் வண்டிகளை விட பல வகையிலும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்திருந்த காளியின் வில் வண்டி மேல் ஜாதிக்காரர்களின் வயிற்றெரிச்சலையும், கீழ்ஜாதிக்காரர்களின் அடிமையைப் போக்கும் அடையாளமாக விளங்கியது. அந்த வண்டியில்தான் அய்யன் காளி “மாட்டு வண்டிப் போராட்டம்” நடத்தப் போவதாக அறிவித்தார்.

(சான்று: “மகாத்மா அய்யன் காளி”, கேரளத்தின் முதல் தாழ்த்தப்பட்ட போராளி – நிர்மால்யா.)

(தொடருவேன்….)

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *