அன்னை மணியம்மையார் இயக்கத்தைக் காத்த இரும்புக்கோட்டை!

12 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தந்தை பெரியார் மறைந்தபோது, “இயக்கம் என்னவாகும்?” என்ற கேள்வி எழுந்த சூழலில், அந்தப் பேரியக்கத்தைத் தன் தோளில் சுமந்து வழிநடத்தியவர் அன்னை மணியம்மையார். 1973 முதல் 1978 வரை அவர் தலைவராக இருந்த குறுகிய காலத்தில் அவர் நிகழ்த்திய சாதனைகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.

பெரியாரின் மறைவுக்குப் பிறகு திராவிடர் கழகத்தின் சொத்துக்களையும், கல்வி நிறுவனங்களையும், கொள்கைப் பரப்பு நிறுவனங்களையும் மிகச் சரியாக நிர்வகித்தார். எவ்விதப் பிளவுக்கும் இடமளிக்காமல், தொண்டர்களை ஒருங்கிணைத்து இயக்கத்தைக் கட்டிக்காத்தார்.

மணியம்மையார் பிறந்தது 1920ஆம் ஆண்டு மார்ச் மாதம் பத்தாம் தேதி. வேலூரில் இன்ஜினியர் சுப்பராய முதலி தெருவில் சொந்த வீட்டில் கனகசபை வசித்தபோது அன்னை மணியம்மையார் பிறந்தார்.

கட்டுரை, ஞாயிறு மலர்

மணியம்மையாரின் தந்தை கனகசபை குடியிருந்த அதே தெருவில் குடியிருந்தவர் கு.மு.அண்ணல்தங்கோ. இவர் சிறந்த கவிஞர். கனக சபையின் உற்ற நண்பராகத் திகழ்ந்தவர். காந்திமதி என்னும் பெயரை கே.அரசியல் மணி என்று மாற்றியவரும் இவரே. 1943இல் ‘குடிஅரசு’  இதழில் வேலூர் அ.மணி என்னும் பெயரில் கட்டுரை பிரசுரமானது. பிறகு  ஊர்ப் பெயரை நீக்கிவிட்டு, அரசியல் மணி என்பதைச்  சுருக்கி  கே.ஏ.மணி என்று குறிக்கப்பட்டார். தந்தை பெரியார் – மணியம்மையார் என்ற திருமண ஏற்பாட்டிற்குப் பிறகு ஈ.வெ.ரா. மணியம்மையார் என்று அழைக்கப்படுகிறார்.

மணியம்மையார், வேலூரில்  தம்முடைய வீட்டுக்கு அருகே இருந்த அரசமரத்தெரு  தொடக்கப் பள்ளியில் சேர்ந்து பயின்றார். அதனைத் தொடர்ந்து கொசப்பேட்டை பகுதியில் ரெட்டியப்ப முதலி தெருவில் இருந்த அரசு பெண்கள் இடைநிலைப் பள்ளியில் கல்வி கற்றார். நான்காம் பாரம் படிக்கும் போது தந்தை பெரியாரின் கூட்டத்தில் கலந்து கொண்டார் என்பதற்காக பள்ளி நிருவாகம் மணியம்மையாரைப் பள்ளியை விட்டு நீக்கி இருக்கிறது.

எஸ்.எஸ்.எல்.சி. படிப்பை முடித்த மணியம்மையார் உடல் நலக்குறைவால் இறுதித் தேர்வை எழுதவில்லை. மீண்டும் தேர்வு எழுதவிருக்கையில் தந்தை கனகசபைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அப்போதும் தேர்வு எழுத முடியாமல் போயிற்று.

தந்தை  கனகசபை மறைவுக்குப் பிறகு அய்யாவின் தொண்டராக, அய்யாவைப் பேணிக் காக்கும் உதவியாளராக வந்து சேர்ந்த மணியம்மையாரைப் படிக்க வைக்க விரும்பினார் பெரியார். செ.தெ.நாயகம் நடத்தி வந்த குலசேகரப்பட்டினம் தமிழ்க் கல்லூரியில் தமிழ் வித்வான் படிப்பு படிக்க வைத்தார். உடல்நலக் குறைவு காரணமாக மணியம்மையாரால் மீண்டும் இறுதித் தேர்வு எழுத  முடியவில்லை. படிப்பை முடித்து விட வேண்டும் என்று ஆர்வம் கொண்ட மணியம்மையார் அடுத்த முறை மதுரையில் உள்ள தேர்வு மய்யத்தில் தேர்வு எழுதுவதற்கு  விண்ணப்பித்தார். பாடங்களைத் தயார் செய்து கொண்டு தேர்வுக்குப் புறப்பட்டார். மதுரைக்குத் தனியாக வந்து இறங்கினார். மதுரையில் மணியம்மையாரைப் பார்த்த அவருடைய உறவினர்கள், இவர் வீட்டில் சொல்லாமல் ஓடி வந்து விட்டார் போலும் என்று கருதி மணியம்மையாரை மதுரை காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டார்கள். காவலர்கள் விசாரித்தார்கள். தேர்வு எழுத வந்த உண்மையை உணர்ந்தார்கள். அதன் பின் தேர்வு எழுதச் செல்ல அனுமதித்தார்கள். மணியம்மையார் புறப்பட்டுத் தேர்வு மய்யத்திற்குச் செல்வதற்குள் தேர்வு எழுத அனுமதிக்கும் நேரம் முடிந்து விடுகிறது. தாமத வருகையால் தேர்வுக் கூடத்திற்குள் அனுமதிக்க மறுத்து விடுகிறார்கள் – விதிகளைக் கடைப்பிடிக்கும் ஆசிரியர்கள்.

அன்னையாருக்குப் படிப்பிலே பட்டம் கிடைக்கவில்லை; ஆனால் மொழிஆற்றல் வளர்ந்தது; கட்டுரைகள் படைப்பதிலே சிறந்து விளங்கினார். பாரதியாரின் பாடல்களை அழகாகப் பாடும் ஆற்றல் பெற்றிருந்தார். ஆங்கிலம் சொல்லிக் கொடுப்பதிலே திறன் பெற்றுத்  திகழ்ந்தார். இலக்கிய ஆராய்ச்சியில் நுண்ணறிவும் வாய்க்கப் பெற்றார்; சொற்பொழிவைக் குறிப்பெடுக்கும் திறமையும் வந்து சேர்ந்தது; பட்டதாரி ஆக முடியவில்லை தவிர, கொள்கை உணர்வால் படைக்குத் தலைமை தாங்கும் பக்குவம் கிடைத்திருந்தது.

அதன் பிறகு தந்தை பெரியாரின் செயலாளராக அவரோடு 30 ஆண்டுகள் பயணம் செய்தார். தந்தை பெரியாரை நீண்ட காலம் வாழவைத்தார். தந்தை பெரியார் தனது சொத்துகளை மக்களுடைமையாக்க அவரையே வாரிசாக்க திருமணம் என்ற பெயரில் ஓர் ஏற்பாடு செய்தார்.

தந்தை பெரியார் மறைந்த பிறகு அன்னை மணியம்மையார் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.  கழகத் தோழர்களைச் சந்திக்கின்றார்.

இயக்கத்தை வளர்ப்பது எப்படி? தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பரப்புவது எப்படி?  கழகத் தோழர்களின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும்? கழகப் பேச்சாளர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்பதைப் பற்றி எல்லாம் தம்முடைய உரையிலே குறிப்பிட்டிருக்கிறார்கள்.

1975 மார்ச் 14, 15 & 16 தேதிகளில் நாகர்கோயில், தூத்துக்குடி, ராஜபாளையம், மதுரை முதலிய இடங்களில் உரையாற்றினார்கள். அந்தக் கூட்டங்களில் பேசும் போது தந்தை பெரியார் தம்மை அடித்ததைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

அம்மா பேசுவதைக் கேளுங்கள்:

இயக்கப் பிரச்சாரகர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். இயக்கப் பிரச்சாரகர்கள் என்பவர்கள் ஊருக்கெல்லாம் சென்று உபதேசம் செய்பவர்கள். அத்தகையவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். மற்றவர்கள் பார்த்துக் குறிப்பிட்டுக் குறை சொல்லும்படியாகவோ, சந்தேகத்திற்கு இடம் கொடுக்கும் படியாகவோ நடந்து கொள்ளக் கூடாது.

நம் இயக்கத் தோழர்கள் எல்லோரும் வசதி படைத்தவர்களல்லர். எவ்வளவோ சிரமங்களுக்கிடையே இயக்கப் பணிகளைச் செய்து வருகிறார்கள். ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து முடிப்பது என்றால், அது அவர்களுக்கு எளிதான காரியமல்ல.

எவ்வளவோ சிரமங்களுக்கும், தொல்லைகளுக்கும் இடையேதான் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்கிறார்கள். அத்தகையவர்களுக்குச் சுமையாகப் பேச்சாளர்கள் நடந்து கொள்ளக் கூடாது. பேச்சாளர்கள் என்றால் தலைவர்கள்; மற்றவர்கள் எல்லாம் தொண்டர்கள் என்ற நினைப்புக் கூடாது. ஏதோ அவர்களால் முடிந்த அளவு ஏற்பாடுகள் செய்கிறார்கள்.

நம் இயக்கத்தவர்களிடத்தில் இருப்பது போன்ற குடும்பப் பாசம் வேறு எங்கும் பார்க்க முடியாது. அத்தகைய தோழர்கள் தங்கள் சக்திக்கு ஏற்றவாறு அளிக்கும் உணவு, தங்க ஏற்பாடு செய்யும் இடம் இவற்றை அனுசரித்து எளிமையாக நடந்துகொள்ள வேண்டும். தந்தை பெரியார் அவர்கள் எவ்வளவோ வசதியும், வாய்ப்பும் கொண்டவர்கள். அத்தகைய அய்யா அவர்கள் பொதுவாழ்வில் நடந்து காட்டிய எளிமையையும், சிக்கனத்தையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும். தந்தை பெரியார் அவர்கள் ஆரம்பத்தில் கூடுமானவரை நம் இயக்கத் தோழர்கள் வீட்டிலேயே தங்கி விடுவார்கள். அவர்கள் வீட்டில் சமைக்கப்படும் உணவு எதுவானாலும் அதையே திருப்தியாக உண்பார்கள்.

ஒரு முறை காஞ்சிபுரத்தில் ஒன்றிய அரசைச் சேர்ந்த ஒரு சுற்றுலா மாளிகையில் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதற்கு நாள் ஒன்றுக்கு 25 ரூபாய் வாடகை. அதைக் கேள்விப்பட்ட அய்யா அவர்களுக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. ஏற்பாடு செய்திருந்த கழகத் தோழரைக் கூப்பிட்டு மிகவும் கடிந்துகொண்டார்கள். “எடு சாமான்களை; புறப்படு, எவர் வீட்டுத் திண்ணையாவது இல்லையா” என்றார்.

அய்யா அவர்கள் உடல் தளர்ந்து சில நோய்கட்கு ஆளாகியபோது தான் அவர் தனிமையான இடங்களில் தங்கும்படியான நிலைமை ஏற்பட்டது. அதற்குப் பிறகுதான் பயணியர் விடுதியில் தங்க ஆரம்பித்தார்கள்.

நான்கூட அப்படித்தான் விரும்பினேன். அதற்குத் தோழர்கள், நம் கழகத்தினர் ஏராளமாகப் பார்க்க வருவார்கள்; தனிப்பட்டவர்கள் வீட்டில் தங்கினால் வசதியாக இருக்காது. அதை முன்னிட்டேதான் இத்தகைய பயணியர் விடுதிகளை ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கிறது என்று சமாதானம் சொன்னார்கள் – அதற்குக் கட்டுப்படும்படியாக நேரிட்டது.

ஒருமுறை தந்தை பெரியார் அவர்களோடு அவினாசியில் நடைபெற்ற ஒரு மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். அந்த மாநாட்டிற்கு எப்படிச் சென்றோம் என்றால் இரட்டை மாட்டு வண்டியில் சென்றோம். எங்களுக்குத் தங்க ஏற்பாடு செய்திருந்த இடமோ மாட்டுக் கொட்டகை. அதற்குப் பக்கத்திலேயே கக்கூஸ். தரையில் சாணி. அதற்குமேல் வைக்கோல் போட்டு எங்களை உட்கார வைத்தார்கள். சாப்பாடும் அதே இடத்தில்தான். எனக்கு நாற்றம் மூக்கைத் துளைத்தது. இந்தச் சூழ்நிலையில் சாப்பிட ஆரம்பித்தோம். என்னால் முடியவில்லை; குமட்டிக் கொண்டு வந்தது. முகம் சுளித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். இதை தந்தை பெரியார் அவர்கள் கவனித்து விட்டார்கள். உணவு பரிமாறிய அந்த ஊர்த் தோழர்கள் எங்களை விட்டு அகன்றதுதான் தாமதம், அய்யா அவர்கள் என் முதுகில் ஒரு அறை அறைந்து அதட்டினார்கள்.

முதல் அடி!

“ஒழுங்காகச் சாப்பிடு; நம்மை அழைத்தவர்கள் என்ன நினைப்பார்கள்” என்றார். அதுதான் அய்யா அவர்களிடம் நான் வாங்கிய முதல் அடியும், கடைசி அடியுமாகும். அன்றைக்கு நான் வாங்கிய அடி பொதுவாழ்க்கையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக் கொடுத்த முதலடியாகவே கருதி இன்றுவரை அப்படியே வாழ்ந்து வருகிறேன்.

நெருக்கடி நிலை காலத்தில் சர்தார் சுவரண்சிங் தலைமையில், அரசியல் சட்டத் திருத்தங்களுக்காகக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழுவுக்கு அன்னை மணியம்மையார்  அவர்கள், ஜாதி ஒழிப்புக்கு வகை செய்ய அரசியல் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்தார்கள் – ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

20.2.1977 அன்று சென்னையில் கூட்டப்பட்ட திராவிடர் கழகத்தின் நிருவாகக் குழுக் கூட்டத்தில் இதனைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் தீண்டாமை ஒழிப்பைப் பற்றி மக்களிடையே நல்ல அளவு பிரச்சாரம் செய்தால்தான் வெற்றியடைய முடியும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதைப்பற்றி அன்னை மணியம்மையார் அவர்கள் ‘விடுதலை’ 24.4.1976இல் பின்வரும் கருத்தினை வெளியிட்டார்கள்:

“இப்பொழுது அவரவர்களும் அவரவர்களின் நெஞ்சிலே கையை வைத்துச் சொல்லட்டும். கடந்த அரை நூற்றாண்டு காலமாக எங்கள் இயக்கம் இந்த அறிவுப் பிரச்சாரப் பணியைத்தானே செய்து வருகிறது? தந்தை பெரியார் அவர்கள் தமது 95 வயது வரையிலும் தாம் கண்மூடும் கடைசி நாளுக்கு மூன்று நாள்கள் முன்புவரை கூட மக்களின் மன மாற்றப் பணியாகிய பகுத்தறிவுப் பிரச்சாரப் பணியைத் தானே செய்து கொண்டிருந்தார்கள்?

இவ்வளவு அரிய, உயர்ந்த சமுதாயப் பணியை ஆற்றி வரும் ஒரு சமுதாய இயக்கத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது. அந்த இயக்கத்திற்கு அனுசரணையாக இருந்து தாராளமாக அந்த இயக்கத்தின் பிரச்சாரம் நடைபெற வாய்ப்பு வசதிகளைத் தடையின்றித் தரவேண்டியதுதானே ஒரு முற்போக்கு ஆட்சியின் கடமையாக இருக்க முடியும்?

எங்கள் இயக்கத்தின் பகுத்தறிவுப் பிரச்சாரம் எவ்வளவுக் கெவ்வளவு தங்குதடையின்றி நடைபெறுகிறதோ, அவ்வளவுக் கவ்வளவுதான் முற்போக்கான காரியங்களை எந்த அரசும் செய்ய முடியும்.

பெரும் கஷ்ட நஷ்டங்களுக்கிடையே சமுதாய அடிப்படைப் பணியைச் செய்துவிட்டு, அதற்காகப் பதவியிலோ, ஆட்சி லாபங்களிலோ பங்கு கேட்பவர்களும் நாங்கள் அல்லர். இன்னும் சொல்லப் போனால், நன்றியைக் கூட எதிர்பார்த்து, பொதுத் தொண்டு செய்பவர்களல்லர் நாங்கள், இப்படி ஓர் இயக்கத்தை உலக அரங்கில் கண்டதுண்டா? கேள்விப்பட்டதும் உண்டா?

நாங்கள் விரும்புவது எல்லாம் – எதிர்பார்க்கும் உதவி எல்லாம் எங்கள் இயக்கப் பிரச்சாரம் தங்கு தடையின்றி நடைபெற விசாலமான பாதை திறக்கப்பட வேண்டும் என்பதுதான். அந்த உதவியும்கூட எங்களுக்காகவோ எங்கள் இயக்க நலனுக்காகவோ அல்ல; எங்கள் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற நடைபெறத்தான் நாட்டுக்கும், ஒரு முற்போக்கு ஆட்சிக்கும் நல்ல அளவில் அனுகூலம் ஏற்படும் என்பதால் தான்.

எங்கள் கழகப் பிரச்சாரம் ஒரு மணி நேரம் தடைப் படுமானாலும் கூட அதனால் நாட்டுக்குத்தான் பெரும் நஷ்டம். நஷ்டக்கணக்கை நாட்டின் ஏட்டிலே ஏற்றிக் கொண்டே போகாதீர்கள். நாடு எங்களிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கிறது. நாங்களும் நாட்டுக்கு ஏராளமான பணி செய்யத் துடித்துக் கொண்டிருக்கிறோம்.

பகுத்தறிவுப் பிரச்சாரம் கரைபுரண்டு ஓடி, நாட்டு மக்களின் அறிவை வளப்படுத்த வகை செய்யுங்கள்; உடனே வழிவகை செய்யுங்கள். இது முக்கியம் – மிக முக்கியம் – மிக மிக முக்கியம்” என்று அறிக்கை விடுத்தார் அன்னையார்.

அவசர நிலையின்போது அன்னை மணியம்மையார் கைது செய்யப்படவில்லை. சிறையில் தோழர்கள் கொடுமைக்கு ஆளானதை அறிந்து வருந்தினார்கள். அவர்களின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். ஒன்றிய உள்துறை அமைச்சர் பிரம்மானந்த ரெட்டி சென்னை வந்தபோது அவரைச் சந்தித்து, சிறையில் வாடும் திராவிடர் கழகத் தோழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தும் நோக்கத்தோடு ஆளுநர் மாளிகை சென்றார்கள். அப்போது நான் ‘மிசா’ கைதியாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். அன்னை மணியம்மையார் – பிரம்மானந்த ரெட்டி சந்திப்புக்கு ராஜாராம் ஏற்பாடு செய்திருந்தார்.

“ராஜாராம், அம்மாவை அமைச்சருக்கு அறிமுகப் படுத்தினார். அம்மா ஆங்கிலத்தில் உரையை ஆரம்பித்த உடனே அமைச்சர், ‘நான் பச்சையப்பன் கல்லூரியில் அண்ணாவுடன் படித்தவன். எனக்கு நன்றாகத் தமிழ் பேச வரும்’ என்றார். கழகத் தொண்டர்கள் சிறையில் படும் இன்னல்களைக்  குறிப்பிட்டு அவர்கள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு அம்மா வேண்டிக் கொண்டார்.

அப்போது பிரம்மானந்த ரெட்டி, ‘திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்கமாட்டோம் என்று எழுதிக் கொடுங்கள். உங்கள் இயக்கத் தோழர்களை விடுதலை செய்வதற்கு ஆவன செய்கிறேன்’ என்று சொன்ன மறுநிமிடமே, ‘நான் உள்பட எங்கள் தொண்டர்கள் அவ்வளவு பேரும் இறந்தாலும் தந்தை பெரியாரின் கொள்கையை விடமாட்டேன்’  என்று சொல்லி நாற்காலியிலிருந்து எழுந்து விட்டார்கள். பிரம்மானந்த ரெட்டி அம்மாவை சமாதானப்படுத்தி என்னால் ‘இயன்றதைச் செய்கிறேன்’ என்று கூறி வாசல் வரை வந்து அனுப்பி வைத்தார்.

மணியம்மையார் அவர்களின் வீரத்திற்குச் சான்றாக அமைந்தது 1974-இல் நடத்தப்பட்ட ‘இராவண லீலை’. வட இந்தியாவில் இராவணன் உருவ பொம்மையை எரிக்கும் ‘இராம லீலா’ நடப்பதைப் போல, சென்னையில் இராமன் உருவ பொம்மையை எரிக்கும் போராட்டத்தை அறிவித்தார். அப்போதைய ஒன்றிய அரசின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, சென்னை கடற்கரையில் இதனை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். இது தமிழர்களின் தன்மானத்தைப் பாதுகாக்கும் ஒரு பண்பாட்டுப் போராட்டமாகக் கருதப்பட்டது.

டிசம்பர் 17ஆம் தேதி “நமது அருமைக் கழகத் தோழர்களுக்கு’’ என்ற தலைப்பிலே போராட்ட நாள் நெருக்கத்தை ஒட்டிக் கழகத்தலைவர் அம்மா அவர்கள் விட்ட அறிக்கை மிகவும் முதன்மை வாய்ந்த ஒன்றாகும். “எந்தக் காரணத்தை முன்னிட்டும் போராட்டம் பின்வாங்கப்பட மாட்டாது – திட்டமிட்டபடி நடந்தே தீரும் – தோழர்கள் அய்யா தந்த அந்தக் கட்டுப்பாட்டு உணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்’’ என்ற பாங்கிலே அந்த அறிக்கை அமைந்திருந்தது. தோள்புயல் தூக்கி ஆர்ப்பரித்திருந்த காட்டாற்று உணர்ச்சிகளைத் தடம் புரளாது தக்க வழியிலே செலுத்துவதிலே அம்மா அவர்கள் கொண்டிருந்த கவலையின் பாங்கு அந்த அறிக்கையிலே தெளிந்து காணப்பட்டது.

இராமன், லட்சுமணன் சீதைக் கும்பல்கள் சிதையில் எரியும் நாட்கள் மிகவும் நெருங்கிவிட்டன. நாட்கள் நெருங்க, நெருங்க திகில் பிடித்துக் குலுக்க ஆரம்பித்துவிட்டது! கடைசி கட்ட முஸ்தீபுகளிலே குதிக்க ஆரம்பித்துவிட்டனர்.

வாய்திறக்காது அதுவரை கிடந்த காஞ்சி சங்கராச்சாரியார் ‘இராவணலீலா’வை எப்படியாவது தடுத்தாகவேண்டும்; இதனால் மதம் – போகும் – சித்தாந்தம் சாகும், என்றெல்லாம் புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

கவன ஈர்ப்புகள்- மகஜர்கள், தூக்குகோஷ்டிகள்!

இங்கும் தமிழகப் பேரவையில் சட்ட ‘இராவண லீலா’வைத்தடை செய்யச் சொல்லி ஒத்திவைப்புத் தீர்மானங்கள் கிடுகிடுத்தன. வடக்கிலோ பிரேம் சந்த்குப்தா என்பவரின் தலைமையின் கீழ் “இராவணலீலா’’ எதிர்ப்புக் குழு அமைக்கப்பட்டு இந்திராவிடம் தூது சென்றது!

“எப்படியும் “இராவணலீலா’’வைத் தடைசெய்யுங்கள்’’ அந்தக் குரல்களிலே ஏக்கம் விஞ்சி நின்றது. அகில இந்திய சமணர் தலைவரும் கூட ‘தமிழக அரசே’ இராவண லீலாவைத்தடை செய்’ என்று அவசர அவசரமாக அறிக்கை விட்டார்.

அகில இந்திய ‘ராம்நாத் சம்பிரதாயா’ என்ற அமைப்பின் தலைவர் மகத்ளவைஷ்ணவதாஸ் என்பவர் அந்த அமைப்பின் சார்பிலே குடியரசுத் தலைவரைச் சந்தித்து “இராவணலீலா’’வைத் தடை செய்ய அவருடைய அதிகாரத்தைப் பயன்படுத்தும்படிக் கெஞ்சினார்.

தமிழ்நாடு அரசு ‘இராவணலீலா’வைத் தடை செய்யா விட்டால்   அப்போது ஆட்சியிலிருந்த கலைஞர் அரசையே ‘டிஸ்மிஸ்’ செய்யவேண்டுமாம் – அந்தக் கட்டம்வரை போய் விட்டார்கள்.

“பெரியார் விட்டுச் சென்ற பணி, மணியம்மையார் கையில் பத்திரமாக இருக்கிறது” என்பதைத் தனது அய்ந்தாண்டு காலத் தலைமைப் பொறுப்பில் அவர் நிரூபித்தார். ஒரு பெண்ணால் மாபெரும் இயக்கத்தை வழிநடத்த முடியும் என்பதற்கு அவர் ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *