கருநாடக மாநிலம் பெங்களூருவில்… (2)
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டை
வெற்றிகரமாக நடத்தி இருக்கும் தோழர்களுக்குப் பாராட்டு!
“The evil face of RSS“ புத்தகம் எழுதிய அனுமே கவுடாவுக்குப் பாராட்டு!
பெங்களூரு, மார்ச் 5- “நம்மிடையே ஒரு ‘பகவான்’ இருக்கிறார். இந்த பகவானை பார்க்க முடியும்; பேச முடியும்; அந்த பகவானை “கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்” என்றும், “தமிழ்நாட்டுக்கு அடுத்து கருநாடகத்திற்கு குறி வைப்பதற்குக் காரணம் இங்கே சுயமரியாதை உணர்ச்சி மேலோங்கி வருகிறது” என்றும், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சுட்டிக்காட்டி மாநாட்டின் நிறைவு விழாவில் உரையாற்றினார்.
நயத்துடன் பகுத்தறிவுப் பாடல்கள்
பாடிய கோவி நன்னன்
கருநாடக மாநில திராவிடர் கழகம் சார்பில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு ஒரு நாள் மாநாடு 28.02.2026 அன்று காலை 10:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை டி.மில்லர் சாலை வசந்த் நகர் பெங்களூரு வில், தேவராஜ் அர்ஸ் அரங்கில், மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதில் மூன்றாம் அமர்வு மற்றும் நிறைவு விழாவில் கழகத் தலைவர் கி வீரமணி அவர்கள் கலந்து கொண்டு நிறைவுரையாற்றினார்கள். ஒரு நாள் மாநாடு தொடக்க விழா, முதல் அமர்வு, உணவு இடைவேளை, இரண்டாம் அமர்வு இறுதியாக நிறைவு விழா எனும்படியான நிகழ்ச்சி நிரல் அமைக்கப்பட்டிருந்தது. உணவு இடைவேளையில் முத்துமணி நன்னன் அவர்களின் 90 வயதைக் கடந்த தந்தையும், தமிழ்நாட்டின் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான பாவலர் கோவி நன்னன், “எனக்கொரு சாமி உனக்கொரு சாமி – அந்தப்பக்கம் ஒரு சாமி – இந்தப்பக்கம் ஒரு சாமி – அந்த சாமி இந்த சாமி எந்த சாமி – கேட்டதை தந்த சாமி” என்றும், “ஈரோட்டுத் தந்தை ஒரு பகுத்தறிவு சிங்கம் – உலகம் பாராட்டும் புகழ்படைத்த பத்தரை மாற்றுத் தங்கம்” என்றும் பகுத்தறிவுப் பாடல்களை நயத்துடன் பாடி அனைவரையும் எழுச்சி பெற வைத்தார்.
வெண்புறா வழங்கித்
தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு
அந்த வகையில் இரண்டாம் அமர்வு முடிந்து, குறித்த நேரமான மாலை 5 மணியளவில் மூன்றாம் அமர்வான நிறைவு விழா தொடங்கியது. தமிழர் தலைவர் ஆசிரியர் வழக்கம் போல, குறித்த நேரத்திற்கு முன்னதாகவே கருஞ்சட்டைத் தோழர்கள் சூழ வருகை தந்தார். கருநாடக மாநிலத்தில் உள்ள சித்தார்த்தன் கலைக்குழுவின் சார்பில் ஜேம்ஸ் பள்ளி மாணவர்கள் எழுச்சி மிகுந்த பறை இசை, அதிர அதிர – அரங்கினுள் அவ்வோசை எதிரொலிக்க எதிரொலிக்க, உற்சாகத்துடன் கழகத் தலைவரை அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்தனர். அரங்கினுள் நுழைவதற்கு முன்னதாக, மத நல்லிணக்கம்; சமாதானம் ஆகியவைகளை அடையாளப்படுத்தும் வகையில் ஒரு ’வெண் புறா’ கழகத் தலைவரிடம் வழங்கப்பட்டு, உற்சாகத்துடன் வானில் பறக்க விடப்பட்டது. அப்பறவை விடுதலை பெற்றுப் பறந்தது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில், கருநாடக அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையத்தின் மேனாள் தலைவர் காந்தராஜ், கழகத் தலைவருக்கு மரியாதை செய்து, புத்தகம் வழங்கி மகிழ்ந்தார். நிறைவு விழாவில் பங்கேற்கும் ஆளுமைகள், கருநாடக மாநில கழகத் துணைத் தலைவர் குணவேந்தன் அவர்களால் மேடைக்கு அழைக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியை முறையாக கன்னட வளர்ச்சி ஆணையத்தின் மேனாள் தலைவர் எஸ்.ஜி.சித்தராமையா நிறைவு விழாவை தலைமையேற்று தொடங்கி வைத்து, எடுத்த எடுப்பிலேயே, ’திராவிட பந்துகளே” என மொத்தமாக விளித்து உரையாற்றினார். தொடர்ந்து, பகுத்தறிவுச் சிந்தனையாளர் கே.எஸ்.பகவான், முற்போக்கு சிந்தனையாளர் – திரைப்பட நடிகர் சேத்தன் அகிம்சா, கருநாடக மாநிலத்தின் தி.மு.க.பொறுப்புக்குழு தலைவர் பெரியசாமி, கன்னடத்தில் பேசிய தமிழ்நாடு சிதம்பரம் மாவட்ட கழகத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் மற்றும் தி.மு.க. பொறுப்புக்குழு உறுப்பினர் என்.ராமசாமி, கருநாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் நலவாரிய மேனாள் தலைவர் காந்தராஜ், The evil face of RSS’ புத்தகம் எழுதிய அனுமே கவுடா, கழக துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் முன்னிலை ஏற்று, சுயமரியாதை இயக்கத்தின் ஆக்கம், தாக்கம், எதிர்காலத் தேவை ஆகியவற்றை சுட்டிக்காட்டி உரையாற்றினர்.
கழகத் தலைவரிடம் “சுயமரியாதைச் சுடர்!”
நிகழ்ச்சியின் இடையில், அனந்தபுரம் குணசேகரன் தலைமையில் ’சுயமரியாதைச் சுடர்’ கொண்டு வரப்பட்டது. உடன் அனந்தபுரம் பகுதிச் செயலாளர் புஷ்பராஜ் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த தோழர்களுடன் குருதியை சூடேற்றும் கொள்கை முழக்கங்களுடன், ’சுயமரியாதைச் சுடர்’ ஏந்தி வந்து, திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேடையில் இருந்த பெரியார் பிஞ்சு உள்ளிட்ட அனைவரும் இந்தச் சுடரை அடுத்த தலைமுறைக்கு அனைவரும் சேர்ந்து கடத்துவோம் என்று பொருள்பட அனைவரும் ஏந்திப்பிடித்தனர். அடுத்து, பெரியார் பெருந்தொண்டர்கள் கஜபதி, கோவி நன்னன், அன்னம்மாள் ஆகியோருக்கு கழகத் தலைவர் மரியாதை செய்து நினைவுப் பரிசு வழங்கினார். அன்னம்மாள் மேடையேறி வருவதில் சிரமம் இருப்பதை அறிந்து கழகத் தலைவர் தாமே கீழிறங்கி வந்து மரியாதை செய்து நினைவுப்பரிசை வழங்கியது குறிப்பிடத்தக்கது. கருநாடக மாநில திராவிடர் கழகம் சார்பில் கழகத் தலைவருக்கும், கழகத் தலைவர் மேடையில் இருக்கும் ஆளுமைகளுக்கும், மாநாடு சிறக்க பாடுபட்ட தோழர்கள் அனைவருக்கும் சளைக்காமல் மரியாதை செய்து நினைவுப் பரிசு வழங்கினார். மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரவிச்சந்திரன், தோழர்கள் பெரியார் பாலா, அந்தோணி ஆகியோர் கழகத் தலைவருக்கு மரியாதை செய்தனர். இந்நிகழ்வை குணவேந்தன், முல்லைக்கோ ஆகியோர் ஒருங்கிணைத்தனர். ஒட்டுமொத்த நிறைவு விழாவை சமூகநீதிக்கான ஊடகவியலாளர் அமைப்பின் தலைவர் முத்துமணி நன்னன் நெறிப்படுத்தி ஒருங்கிணைத்தார். நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
வியப்பில் ஆழ்ந்த தேவராஜ் அர்ஸ்
ஆசிரியர் தமது உரையின் தொடக்கத்தில், “மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியிருக்கும் அனைத்து தோழர்களுக்கும் பாராட்டுகள்! பாராட்டுகள்! பாராட்டுகள்!” என்று மூன்று முறை சொல்லி மகிழ்ந்து அனைவரையும் மகிழ்வித்தார். தொடர்ந்து, ”நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெருமை சேர்த்த கன்னடப் பேரறிஞர்கள், ஆளுமைகள் ஆகியோருக்கு நன்றிகள்” என்றார். மேலும் அவர், கருநாடகாவில் திராவிடர் இயக்கத்தின் வேர்களை நினைவு கூர்ந்து பேசினார். அதாவது, ”நான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவராக பயின்று கொண்டிருக்கும் போது, கருநாடகத்தில் இருக்கும் சிறீராமபுரத்தில் இருக்கும் தீவிரமான பெரியார் பற்றாளர் புண்ணியக்கோடி என்பவர் பொங்கல் போன்ற விழாக்களை நடத்துவார்கள். பெரியாரை ஆண்டுக்கு ஒரு முறை இரண்டு முறை அழைத்து நிகழ்ச்சி நடத்துவார்.
1944 இல் சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழகமாக மாற்றப்பட்ட போது, முதன் முதலில் தமிழ்நாட்டில் நிர்வாகக் குழுவை பெரியார் தொடங்கிய போது, கருநாடகாவில் நிர்வாகியாக இடம் பெற்றிருந்தவர் நாராயணசாமி ஆவார். அதன் பிறகு அவரது மகன் சம்பத், வேமண்ணா என்ற வி.சி.வேலாயுதம், மணி, சி.டி.அரசு, ஜனகம்மா, கிருஷ்ணன், அர்ச்சுனன், விசாலாட்சி சிவலிங்கம், பெரியப்பா, அண்ணாமலை” என்று வரிசையாக கருநாடக திராவிடர் கழகத் தோழர்களை நினைவு கூர்ந்து பேசினார். அதைத் தொடர்ந்து, தேவராஜ் அர்ஸ் அவர்களையும் நினைவு கூர்ந்து பேசி ஒரு முக்கியமான தகவலைச் சொன்னார். அதாவது, “கருநாடகத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் சுயமரியாதைத் திருமணம் நடைபெறுகிறது. அதற்கு வந்திருந்த தேவராஜ் அர்ஸ் அவர்கள், வியப்படைந்து, “திருமணத்தை பெரியார் அவர்கள் இவ்வளவு எளிமையாக உருவாக்கியிருக்கிறார்.
எப்படி தமிழ்நாட்டில் அண்ணா இதை சட்டமாக்கினாரோ அதைப் போல நான் மீண்டும் வெற்றி பெற்றால் சுயமரியாதைத் திருமணத்தை சட்டமாக்குவேன்” என்று சொன்னார் என்பதைச் சொல்லிவிட்டு, “கருநாடகத்திலே தந்தை பெரியாரின் கருத்துகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு உண்டு” என்றார். அருகில் அமர்ந்திருந்த கன்னட வளர்ச்சி ஆணையத்தின் மேனாள் தலைவர் எஸ்.ஜி.சித்தராமையா ’ஆமாம்’ என்பதைப் போல தலையாட்டினார்.
கொலைச் சதியை அம்பலமாக்கிய ‘கரண்ட்’ ஏடு
தொடர்ந்து பேசிய அவர், “கருநாடகத்தில் மைசூர் தலைமை நீதியரசராக இருந்த மேடப்பா என்பவர், நேர்மையாக இருந்தார் என்பதற்காக, அவரது உயிருக்கு ஆபத்தை உண்டாக்குவதற்காக சமையல்காரர் மூலமாக உணவில் விஷம் வைத்தார்கள். விசயம் தெரிந்து வழக்கு போடப்பட்டது. ராஜ்நூர் என்ற அய்யங்கார் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், தலைமை நீதியரசரை கொல்வதற்காக சதி செய்யப்பட்டது என்று போடப்பட்ட அந்த வழக்கு ஒன்றுமே இல்லாமல் ஆக்கப்பட்டது” என்ற அரிய செய்தி ஒன்றைச் சொல்லிவிட்டு, “கரண்ட்” பத்திரிகையிலே இதுகுறித்து வந்த செய்திகளை விவரித்தார். தொடர்ந்து, ”குற்றவாளி ராஜ்நூர் அய்யங்காரைக் காப்பாற்றுவதற்காக, அன்றைக்கு உள்துறை அமைச்சராக இருந்த ராஜகோபாலாச்சாரி அய்யங்காரே முன் வந்தார் என்ற தகவலும் அந்த கரண்ட் பத்திரிகையின் செய்தியில் இடம் பெற்றிருந்தது” என்ற அதிர்ச்சிகரமான தகவலையும் வெளியிட்டுவிட்டு, ”இந்தியாவிலேயே அதைக் கண்டித்து எழுதியது விடுதலை ஏடு தான்; தந்தை பெரியார் தான்” என்பதையும் பலத்த கைதட்டல்களுக்கிடையே கூறினார்.
‘The evil face of RSS’ எழுதிய
அனுமே கவுடாவுக்குப் பாராட்டு!
ஆளுமைகளுக்கு மரியாதை செய்யும் நிகழ்வில் கழகத் தலைவர் ஆசிரியர், The evil face of RSS புத்தகம் எழுதிய, அனுமே கவுடா அவர்களுக்கும் மரியாதை செய்திருந்தார். அப்போது, இருந்த இடத்திற்கே ஒலி பெருக்கியைக் கேட்டு வாங்கி, அனுமே கவுடா தனக்கு இங்கு வந்த உடனேயே இந்தப் புத்தகத்தை வழங்கினார் என்றும், கிடைத்த நேரத்தில் சிறிது படித்தேன் என்றும் கூறிவிட்டு, ”சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட காலகட்டத்திலேயே உருவானது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. அது ஜனநாயக போர்வையில் வலம் வரும் பாசிச அமைப்பு ஆகும்.
இந்த சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில், இந்தப் புத்தகம் வந்திருப்பது மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறோம். சென்னையில் இது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
இளைய சமுதாயம் ஆர்.எஸ்.எஸ்.பற்றி உண்மைகளை தெரிந்து கொள்வதற்கு இது பயன்படும்” என்று சொல்லி, ”அனைவர் சார்பாக அவரைப் பாராட்டுகிறேன்” என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே அவருக்கு மரியாதை செய்தார்.
சுயமரியாதை இயக்கம் உலகிற்கே உரியது
பின்னர் அது, ‘ஜாதிக்குறிகள்’ (Caste Marks) என்ற பெயரில் பெரியாரால் புத்தகமாக போடப்பட்டதையும் சுட்டிக்காட்டினார். அடுத்து, “தமிழ்நாட்டைத் தொடர்ந்து கருநாடகாவைக் குறி வைக்கக் காரணம், இங்கே சுயமரியாதை உணர்ச்சி மேலோங்கி வருவதுதான்” என்று ஆய்வாளர்களுக்குப் பயன்படும் ஒரு அரிய கருத்தை அரங்கத்தின் முன் எடுத்து வைத்தார். மேலும் பேசிய அவர், 106 வயது கண்ட கருநாடகப் பெரியார் பெருந்தொண்டர் வீ.மு.வேலுவை அவரது இல்லம் சென்று பார்த்து வந்ததைப் பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து, ”சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டில் வேண்டுமானால் பிறந்திருக்கலாம். ஆனால், அது உலகத்திற்கே உரியது” என்றார். அதற்கு தந்தை பெரியார் கூற்றுப்படி, ’எஞ்சின் ஒரு இடத்தில் தயாரிக்கப்பட்டு, பெட்டிகள் இணைக்கப்பட்டு வெவ்வேறு நாடுகளிலும் செல்லும்’ என்பதைச் சொல்லி, ”சுயமரியாதை இயக்கம் தொடங்குவதற்கு முன்பு நமது சமுதாயம் எப்படி இருந்தது? இப்போது எப்படி இருக்கிறது? என்பதை விவரித்து விட்டு, சுயமரியாதை இயக்கத்திற்கு நேர் எதிரான கொள்கையுடைய ஆர்.எஸ்.எஸ்.கொள்கையை சுருக்கமாகச் சொல்ல, ”எல்லார்க்கும் எல்லாம் என்பது திராவிடம்; எல்லாம் எங்களுக்கே என்பது ஆரியம்” என்பதைக் கூறி, தமது உரையை நிறைவு செய்தார்.
பங்கேற்றோர்
கருநாடக மாநில திராவிடர் கழகத் தலைவர் ஜானகிராமன், கல்வியாளர் மதுசூதனன், தங்கவயல் கரிகாலன், தோழர் பெரியசாமி, சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி, மதுசூதன பாபு, மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன், சேலம் வீரமணி ராஜூ, ஓசூர் வன வேந்தன், துரை சக்திவேல், செல்வம், காளியப்பன், சுரேஷ், கழகச் சொற்பொழிவாளர் பிராட்லா என்னாரெசு, போளூர் பன்னீர்செல்வம், குடியாத்தம் சடகோபன், ஆவடி கழக மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் பா.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், பொதுக்குழு உறுப்பினர் – நகர செயலாளர் மோகன்ராஜ், தோழர் குணசேகரன், சோழிங்கநல்லூர் கழகக் காப்பாளர் ஆர்.டி. வீரபத்திரன், சோழிங்கநல்லூர் மாவட்ட கழகத் தலைவர் பாண்டு, அயன்புரம் துரைராஜ், அரும்பாக்கம் தாமோதரன், கொரட்டூர் வழக்குரைஞர் பன்னீர்செல்வம், பெரியார் பெருந்தொண்டர்கள் கொடுங்கையூர் கோ.தங்கமணி, தனலட்சுமி, உடுமலை வடிவேல், அ.புகழேந்தி, அருள்மணி, தமிழ்ச்செல்வன், சாந்தகுமார், மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரவிச்சந்திரன், தோழர் பெரியார் பாலா, அந்தோணி, கருநாடக மாநில திராவிடர் கழகத் தோழர்கள் ஜெயகிருட்டிணன், கோ.தாமோதரன், போர் முரசு கதிரவன், வி.எஸ்.மணி, இரா.முல்லைக்கோ, ஆனந்தராஜ், கரிகாலன் மற்றும் கருநாடகா தங்கவயல் தோழர்கள் ஆதித்தன், அறிவழகன், செவத்தம்மா, கிருபாநிதி, நாத்திகம் சிறீதர், பிரபுராம், திருமுருகன், கருணாகரன், இளங்கோவன், நிர்மலா அறிவழகன், பொற்செழியன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டு, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு ஒரு நாள் மாநாட்டைச் சிறப்பித்தனர்.
