திருச்சி, மார்ச் 5– “குழந்தை களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்போம்” மற்றும் “ஒரு உண்மையான குடியரசு தன் குழந்தைகளைப் பாதுகாக்கும்” என்ற உயரிய நோக்கோடும், உலக அமைதியை வலியுறுத்தியும் கடந்த 01.02.2026 அன்று, தர்மபுரியில் மாபெரும் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.
ருத்ரா ரிதம் நடனாலயா (Rudra Rhythm Nadanalaya) அமைப்பு, குரு கே.என். கீர்த்தனப்பிரியா அவர்களின் வழிகாட்டுதலில், “பால்ய ரக்சா” என்ற பெயரில் உலகிலேயே மிகப்பெரிய “மனிதப் புறா வடிவத்தை” (Human Dove Formation) பரதநாட்டியக் கலைஞர்களைக் கொண்டு உருவாக்கி சாதனை படைத்தது.
செவன்த் சென்ஸ் வேர்ல்டு ரெக்கார்ட் (Seventh Sense World Records) அங்கீகரித்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, தர்மபுரி சிறீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வு ஒரு சமூக விழிப்புணர்வுப் புரட்சியாக அமைந்தது.
பள்ளிக்குப் பெருமை சேர்த்த சாதனையாளர்கள்
இந்த உலக சாதனை நிகழ்வில் திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த நடன ஆசிரியரும் அவரது மாணவியும் பங்கேற்றுப் பெருமை சேர்த்துள்ளனர்:
ஜெ.பிரான்ஸிட்டா: பள்ளியின் நடன ஆசிரியையான இவர், தனது கலைத்திறனாலும் மாணவர்களைச் சிறந்த முறையில் வழிநடத்தியதற்காகவும் இந்த உலக சாதனை விருதையும் சான்றிதழையும் முதன்மையாகப் பெற்றுள்ளார்.
எஸ்.எஸ்.சிறீ கிருத்திகா: இப்பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு பயிலும் இம்மாணவி, ஆசிரியரின் வழிகாட்டுதலில் இந்த உலக சாதனை முயற்சியில் வெற்றிகரமாகப் பங்கேற்று சாதனைச் சான்றிதழைப் பெற்றுள்ளார்.
குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை உலக அளவில் கொண்டு சென்ற இந்தச் சாதனையில் பங்கேற்ற ஆசிரியர் ஜெ.பிரான்ஸிட்டா மற்றும் மாணவி சிறீ கிருத்திகா ஆகியோரைப் பள்ளி நிர்வாகம், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.
