மும்பை, மார்ச் 5 மாநிலங் களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவை தெரிவித்துள்ளது.
மகாராட்டிர மாநிலத்தில் உள்ள 7 மாநிலங்களவை இடங்களில் ஒரு இடத்தை தக்கவைக்கும் நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் மகா விகாஷ் அகாடி கூட்டணியிலுள்ள சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ரமேஷ் சென்னிதாலா,
நடப்பு மாநிலங்களவை உறுப்பினராக உள்ள சரத் பவாருக்கு காங்கிரஸ் தலைமை தனது ஆதரவை தெரிவித்துள்ளதாகக் கூறினார்.
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு இன்று (மார்ச் 5) மனுத்தாக்கல் நிறைவுபெறவுள்ள நிலையில், சரத் பவாருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
மகாராட்டிர சட்டப்பேரவையில் 288 இடங்களில் 286 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். 2 இடங்கள் காலியாக உள்ளன. எனவே, மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்ய 36 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. 7 மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஏப்ரல் மாதத்தில் காலியாகவுள்ளதால், அதில் ஒரு இடத்தை எதிர்க்கட்சிகள் இணைந்து தேர்வு செய்கின்றன.
எதிர்க்கட்சியில் சிவசேனைக்கு 20 உறுப்பினர்களும், காங்கிரஸுக்கு 16 உறுப்பினர்களும், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) 10 உறுப்பினர்களும் உள்ளனர்.
