சோனியா காந்தி கண்டனம்
புதுடில்லி, மார்ச்.3 ஈரான் உச்ச தலைவர் அலி காமேனி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாகக் கண்டனம் தெரிவிக்காமல் மவுனம் காப்பது இந்தியாவின் நடுநிலைத் தன்மையை பாதிக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பேச்சுவார்த்தைகள் மற்றும் ராஜ தந்திர நகர்வுகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் போதே, ஒரு நாட்டின் உயரிய தலைவரைப் படுகொலை செய்வது பன்னாட்டு சட்டங்களுக்கு முற்றிலும் எதிரானது. “உலகமே ஒரு குடும்பம்” என்ற தத்துவத்தை உலக அரங்கில் உரக்கச் சொல்லி வரும் இந்தியா, இதுபோன்ற இக்கட்டான சூழல்களில் மவுனம் காப்பது அதன் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கும் என்று அஞ்சப்படுகிறது.
1994-ஆம் ஆண்டு காஷ்மீர் விவகாரத்தை பன்னாட்டு மயமாக்கச் சில நாடுகள் முயன்றபோது, அய்நா சபையில் இந்தியாவுக்கு ஆதரவாக ஈரான் ஆற்றிய பங்களிப்பு மறக்க முடியாதது. இந்தியாவின் இறையாண்மையைக் காக்க அன்று ஈரான் உறுதுணையாக நின்றது.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் ஈரானுடன் மிகவும் ஆழமான மற்றும் நெருக்கமான ராஜதந்திர உறவுகளைப் பேணி வந்தார். மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியாவின் மிகச்சிறந்த நட்பு நாடாக ஈரான் விளங்கியது. ஆனால், தற்போதைய பாஜக அரசு அந்தப் பாரம்பரிய ராஜதந்திர உறவுகளைக் கைவிட்டுவிட்டு, தற்போதைய புவிசார் அரசியலில் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த மவுனம், நீண்டகால நட்பு நாடான ஈரானுடனான உறவில் விரிசலை ஏற்படுத்துவதுடன், பன்னாட்டு அரங்கில் இந்தியாவின் நடுநிலைத் தன்மையைப் பாதிக்கும் என்று சோனியா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
