அய்தராபாத், மார்ச் 1– வயதான பெற்றோரை கவனித்துக் கொள்ளாத அரசு ஊழியர்களின் மாத ஊதியத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை பிடித்தம் செய்து அந்த தொகையை அவர்களின் பெற்றோர் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்த தெலங்கானா அரசு திட்டமிட்டுள்ளது.
வரவிருக்கும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக முதலமைச்சர் ரேவந்த் தெரிவித்துள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்ட குரூப்-1 மற்றும் குரூப்-2 அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழாவில் 27.2.2026 அன்று அவர் இதை அறிவித்தார்.
விழாவில் பேசிய அவர், “பெற்றோரின் தியாகத்தால் தான் இந்த உயரிய இடத்துக்கு வந்துள்ளீர்கள். எனவே, பெற்றோரை சரியாகக் கவனிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், மாநில அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்க ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கும் அரசுக்குச் சொந்தமான எம்சிஆர் எச்ஆர்டி நிறுவனத்திற்கும் இடையே விரைவில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் அவர் இந்த நிகழ்வில் கூறினார்.
இதுதான் எஸ்.அய்.ஆரோ?
வாக்காளர் பட்டியலில் ஒரே நபரின் பெயர் எட்டு முறை பதிவு
சென்னை, மார்ச் 1– இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான நிலையில், மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியில் ஒரே நபரின் பெயர் எட்டு முறை இடம்பெற்றிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கடந்த 23ஆம் தேதி எஸ்.அய்.ஆர்., பணி நிறைவு செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், மதுரவாயல் தொகுதி 150ஆவது வார்டு, காரம்பாக்கம், பாகம் எண்: 80இல் ஒரே நபரின் பெயர் எட்டு முறை தனித்தனி வாக்காளர் அடையாள அட்டை எண்களுடன், பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சிறப்பு திருத்தப் பணி முடிந்த பின் வெளியிடப்பட்ட இறுதி பட்டியலிலேயே, இத்தகைய குளறுபடி ஏற்பட்டிருப்பது அரசியல் கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வர் கோளாறா?
இது குறித்து மதுரவாயல் வட்டாட்சியர் கூறுகையில், ‘வாக்காளர் தகவல்களை பதிவு செய்யும்போது ஏற்பட்ட, ‘சர்வர்’ கோளாறு காரணமாக, ஒரே நபரின் பெயர் பலமுறை பதிவாகியிருக்க வாய்ப்பு உள்ளது.
சம்பந்தப்பட்ட பாகத்தின் ஓட்டுச்சாவடி நிலை அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட முறை இடம் பெற்றுள்ள ஒரே நபரின் பெயர் நீக்கப்படும்’ என்றார்.
