புதுடில்லி, பிப்.27 நீதித்துறையில் ஊழல் என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நூலில் இருந்த பாடம் குறித்து உச்சநீதிமன்ற கடுமையான கண்டனத்தை தெரி வித்தை அடுத்து நீதிமன்றத்தில் 25.2.2026 அன்று நடந்த விசாரணையின் போது ஒன்றிய அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டது. ஆனால் தலைமை நீதிபதி சூர்யகாந்த மன்னிப்பை ஏற்க மறுத்து துப்பாக்கியால் சுட்டதால் ரத்தம் வழியும் நிலையில் நீதித்துறை உள்ளது என்று பேசியுள்ளார்.
நீதித் துறையில் ஊழல்
8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத் திட்டத்தை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) உருவாக்கியுள்ளது. இதில் ‘நீதித்துறையில் ஊழல்’ என்ற தலைப்பில் பாடம் ஒன்று சேர்க்கப் பட்டுள்ளது.
இந்த பாடம் நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் இருப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில், மூத்த வழக்குரைஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் குறிப்பிட்ட பாடம் குறித்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.
நீதித்துறையில் ஊழல் இருப்பதாக பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள் ஒருதலைபட்சமாக இருப்பதாக அவர்கள் வாதிட்டனர். இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை ‘தானாக முன்வந்து’ விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த விவகாரம் குறித்து கடுமையான அதிருப்தி தெரிவித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, யாரும் நீதித்துறையை அவமதிக்க அனுமதிக்க மாட்டோம். சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று மிகக் கடுமையாகத் தெரிவித்தது.
பள்ளி மாணவர்கள் மத்தியில், நீதித்துறையைப் பற்றித் தவறான பிம்பத்தை உருவாக்குவது திட்ட மிடப்பட்ட நடவடிக்கை என்று நீதிபதிகள் விமர்சித்தனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மட்டுமல்லாது, பல்வேறு உயர் நீதிமன்ற நீதிபதிகளும், வழக்குரைஞர் சங்கங்களும் இந்த பாடத்தால் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கூறினர். இந்த சர்ச்சைக்குரிய பாடத்தை எழுதியவர்கள் யார், எதன் அடிப்படையில் இந்தப் பகுதிகள் சேர்க்கப்பட்டன என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு ஒன்றிய அரசுக்கும், என்சிஇஆர்டி அமைப் புக்கும் தாக்கீது அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கையை தொடர்ந்து ஒன்றிய அரசு நிபந்தனை யற்ற மன்னிப்பு கோரியுள்ளது.
25.2.2026 அன்று நடந்த வழக்கு விசாரணையின் போது உயர்நீதிமன்ற நீதிபதி ஒன்றிய அரசின் வழக்குரை ஞரைப் பார்த்து நீங்கள் செய்துள்ள இந்த காரியத்தால் என் நீதித்துறை துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்தம் வழியும் நிலையில் உள்ளது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளார்
பாடத்தில் என்ன இருந்தது?
8-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் நீதித்துறையில் ஊழல் என்ற தலைப்பில் பாடம் சேர்க்கப்பட்டிருந்தது.நீதித்துறை யின் பல்வேறு நிலைகளில் மக்கள் ஊழலை எதிர்கொள்கிறார்கள் என்றும், இது ஏழை எளியவர்களுக்கு நீதி கிடைப் பதைத் தடுக்கிறது என்றும் அந்தப் பாடத்தில் குறிப்பிடப் பட்டிருந்தது.
உச்ச நீதிமன்றத்தில் சுமார் 81,000 வழக்குகளும், உயர் நீதிமன்றங்களில் 62.4 லட்சம் வழக்குகளும், மாவட்ட நீதிமன்றங்களில் 4.7 கோடி வழக்கு களும் நிலுவையில் உள்ளதாகப் புள்ளி விவரங்களும் இடம் பெற்றிருந்தன. 2017 முதல் 2021 வரை நீதித்துறைக்கு எதிராக 1,600-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
