மும்பை, பிப்.26- அகில இந்திய யூனியன் வங்கி ஓபிசி ஊழியர்கள் நலச் சங்கத்தின் 6ஆவது அகில இந்திய மாநாடு, 28.2.2026 அன்று காலை 10.30 மணிக்கு, மும்பை சர்ச்கேட் ரயில் நிலையம் அருகிலுள்ள அய்.எம்.சி. (IMC) கட்டடத்தின் வால்சந்த் ஹிராசந்த் மண்டபத்தில் நடைபெறுகிறது.
மாநாட்டை , யூனியன் வங்கியின் மேலாண்மை இயக்குநர் & தலைமை செயல் அதிகாரி ஆசிஸ் பாண்டே துவக்கி வைக்கிறார். மேலும், நாடாளுமன்றக் குழுத் தலைவர் (ஓபிசி) கணேஷ் சிங், நாடாளுமன்ற பி.சி. சங்கத்தின் தேசியத் தலைவர் ஆர்.கிருஷ்ணைய்யா மற்றும் வங்கியின் மூத்த நிர்வாகிகள் உரையாற்றுகிறார்கள்.
சங்கத் தலைவர் கோ.கருணாநிதி மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார். –பொதுச் செயலாளர் எஸ்.நடராஜன் வரவேற்புரையாற்றுகிறார். மகாராட்டிர மாநில பொதுச் செயலாளர் யோகேஷ் பட்டீல் நன்றியுரையாற்றுகிறார்.
6ஆவது மாநாடு & ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் ஏற்கப்படவுள்ள தீர்மானங்கள்:
ஒன்றிய அரசுக்கு வைக்கப்படும் கோரிக்கைகள்
- டி.எப்.எஸ். (DFS) ஆணை (07.04.2025) திரும்பப் பெறுதல்: அரசின் குருப் ஏ பதவிகளுடன் முதல்நிலை-I அதிகாரி பதவியை ஒப்புமைப்படுத்தி, பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றும் ஓபிசி ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் 07.04.2025 நாளிட்ட டி.எப்.எஸ். ஆணையை திரும்பப் பெற வேண்டும்.
- ஓபிசி-களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு: ஓபிசி ஊழியர்களின் சமச்சீர் தொழில் முன்னேற்றத்தை உறுதி செய்ய பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
- தனியார்மயத்திற்கு எதிர்ப்பு: வங்கிகள், எல்.அய்.சி., ரயில்வே உள்ளிட்ட பொது துறை நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளின் தனியார்மயத்தை திரும்பப் பெற வேண்டும்.
- கிரீமிலேயர் கொள்கை சீர்திருத்தம்: ஓபிசி-களுக்கு கிரீமிலேயர் கருத்தை நீக்க வேண்டும். அது நடைமுறைக்கு வரும் வரை:
உரிய அதிகாரிகளால் வழங்கப்படும் ஓபிசி சான்றிதழ்கள் குறைந்தது மூன்று ஆண்டுகள் செல்லுபடியாக இருக்க வேண்டும்.
2017 முதல் நிலுவையில் உள்ள வருமான உச்சவரம்பு (ரூ. 8 லட்சம்) முறையாக திருத்தப்பட வேண்டும்.
- கொள்கை விவாதங்களில் பங்கேற்பு: ஓபிசி ஊழியர்களை பாதிக்கும் விவகாரங்களில் வங்கி நிர்வாகத்துடன் நடைபெறும் ஆலோசனைகளில், (பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற) சங்கத்தின் தேர்தல் செய்யப்பட்ட நிர்வாகிகளின் பங்கேற்பை அங்கீகரித்து ஏற்படுத்த வேண்டும்.
வங்கி நிர்வாகத்துக்கு வைக்கப்படும் கோரிக்கைகள்
- மண்டல அளவிலான காலாண்டு கூட்டங்கள்: 22.04.2025 டி.எப்.எஸ். (DFS) ஆணையை மேற்கோள் காட்டி நிறுத்தப்பட்ட மண்டல அளவிலான காலாண்டு கூட்டங்களை மீண்டும் நடத்த வேண்டும்.
- டி.எப்.எஸ். (DFS) வழிகாட்டுதல்கள் (26.11.2024) அமலாக்கம்: அதிகாரிகளுக்கான மாற்றுக் கொள்கை (Transfer Policy) தொடர்பான 26.11.2024 டி.எப்.எஸ். வழிகாட்டுதல்களை, பெண்கள் ஊழியர்களுக்கான விதிகளுடன் சேர்த்து அமல்படுத்த வேண்டும்.
- பதவி உயர்வுக்கு முன் பயிற்சி (OTP): ஓபிசி ஊழியர்களுக்காக 10 நாள் முன்பயிற்சி (Pre-Promotion Training (OTP)) திட்டங்களை நடத்த வேண்டும்.
- மாற்றுக் கொள்கை சலுகைகள்: மற்ற சங்கங்களின் நிர்வாகிகளுக்கு வழங்கப்படும் மாற்றுக் கொள்கை சலுகைகள், அகில இந்திய மற்றும் மாநில அளவிலான ஓபிசி நலச் சங்க நிர்வாகிகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.
