புவனேசுவர், பிப்.26 ஒடிசா மாநிலத்தில் லஞ்சம் வாங்கும்போது கையும் களவு மாகப் பிடிபட்ட அதிகாரி வீட்டில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.4 கோடி சிக்கியது
ஒடிசா மாநிலச் சுரங்கத் துறை துணை இயக்குநராகப் பணியாற்றி வருபவர் தேவபிரதா மொகந்தி. நிலக்கரி விற்பனைக்கு உரிமம் பெற்ற ஒரு வர்த்தகரிடம் கடந்த (24.2.2026 அன்று) இவர் ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்றுள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதி காரிகள் மொகந்தியை கையும் களவுமாகப் பிடித்தனர்.உடனடியாக ஒடிசா தலைநகர் புவனேசுவரில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் பத்ராக் மாவட்டத்தில் உள்ள அவரது பெற்றோர் வீடுகளில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டு அலமாரிகளில் கட்டுக்கட் டாகப் பணம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் ரூ.4 கோடி பணத்தைச் 24.2.2026 அன்று இரவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், மொகந்தியின் அலுவலக அறை மேசை இழுப்பறையிலிருந்து ரூ.1.20 லட்சம் பறிமுதல் செய் யப்பட்டது. அத்துடன் புவனேசுவரில் உள்ள இரண்டு அடுக்குமாடி வீடு களுக்கான ஆவணங்கள் மற்றும் 130 கிராம் தங்கம் ஆகியவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றினர். ஒடிசாவில் இதுவரை பிடிபட்ட ஊழல் வழக்குகளிலேயே இதுதான் அதிகபட்சத் தொகை என்று லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். மொகந்தி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கு முன்னர், கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் நீர்ப்பாசனத் துறை உதவிப் பொறியாளர் வீட்டில் ரூ.3.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
