பொதுவுடைமை இயக்க மூத்த தலைவர் ‘தகைசால் தமிழர்’’ ‘ஆர்.என்.கே.’ என்று அன்போடு அழைக்கப்படும் தோழர்
ஆர்.நல்லகண்ணு அவர்கள் தனது 101 ஆவது வயதில் இன்று (25.2.2026) காலமானார் என்ற செய்தி – பொது மக்கள் மத்தியிலும், பொது வாழ்வில் ஈடுபட்டவர்கள் மத்தியிலும் பெருந் துயரத்திற்குரிய ஒன்றாகும்.
தனது 18 ஆவது வயதில் பொதுவுடைமைத் தத்துவத்தால் ஈர்க்கப்பட்டு, இந்தியக் கம்யூ னிஸ்டுக் கட்சியில் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர்.
மாநில அளவில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் செயலாளராகப் பல ஆண்டுகள் (1992–2005) இருந்து கட்சியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர். அகில இந்திய அளவில் கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினராகவும் இருந்தவர்.
சுதந்திரப் போரட்டத்திலும் ஈடுபட்டவர்! பல முறை சிறைவாசம் கண்டவர்! சிறைச் சாலையில் சித்திரவதைகளை அனுபவித்த தியாகத்துக்குச் சொந்தக்காரர்!
கம்யூனிஸ்டுக் கட்சி தடை செய்யப்பட்டபோது, தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டும், கட்சிப் பணிகளை செய்து கொண்டே இருந்தார்.
விவசாயிகளுக்கான போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம், கனிம வளக் கொள்ளைக்கு எதிரான போராட்டம் என்று வாழ்நாள் போராட்டக்காராக விளங்கிய வாழ்நாள் போராளி யாவார்.
தனக்காக அளிக்கப்பட்ட நன்கொடைகளை குறிப்பாக அவரது 60 ஆண்டுப் பொது வாழ்வுக்காக கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்ட ஒரு கோடி ரூபாயையும் அப்படியே கட்சி வளர்ச்சிக்காக திருப்பி ஒப்ப டைத்த உன்னத மனிதர்! தமிழ்நாடு அரசால் ‘தகைசால் தமிழர் விருது’ அளிக்கப்பட்ட பெருமைக்குரியவர்.
காட்சிக்கு எளியவர் – பண்பாட்டின் வடிவம் – பொது வாழ்வுக்கு உதாரண மனிதர் என்று போற்றத்தகுந்த, தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த அந்த மாமனிதருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் வீர வணக்கம்! வீர வணக்கம்!!
அவர் பிரிவால் பெருந் துயரத்திற்கு ஆளாகியுள்ள குடும்பத்தினருக்கும், கட்சித் தோழர்களுக்கும், திராவிடர் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
26.2.2026
