கொலை வழக்கில் ஜெயிலுக்குப் போன சங்கராச்சாரியார்கள் பகுத்தறிவாளர்களா?
கருத்துக் களத்தில் சந்திக்கத் தயார்தானா?
பகுத்தறிவாளர்களை அயோக்கியர்கள் என்று ஒரு நீதிபதி சொன்னதற்கு, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அளித்துள்ள அடுக்கடுக்கான பதிலடி அறிக்கை
நேற்று (25.2.2026) ஆவடி பொதுக்கூட்டம் முடிந்தவுடன் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளில் ஒன்று –
பகுத்தறிவாளர்கள் அயோக்கியர்கள் என்று ஒரு நீதிபதி கூறியுள்ளாரே!
கேள்வி: ‘‘பகுத்தறிவாளர்கள்தான் உண்மையான அயோக்கியர்கள்!’’, ‘‘குருவை வணங்குகிறவர்களை அயோக்கியன், முட்டாள், காட்டுமிராண்டி எனச் சொல்லும் பகுத்தறிவாளர்கள்தான் உண்மையான அயோக்கியர்கள், முட்டாள்கள், காட்டுமிராண்டிகள்’’ என்று கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசியுள்ளாரே, அதுபற்றி உங்கள் பதில் என்ன?
பதில்: பகுத்தறிவாளர்கள் எதையும் காரண காரியத்தோடு சொல்பவர்கள்.
கண்மூடித்தனமான மூடநம்பிக்கைகள், ஜாதி இறுமாப்பு, ஆணவம் இவற்றை நியாயப்படுத்துவது ஹிந்து மதத்தில் கடவுள் நம்பிக்கை என்பதால், கடவுள் நம்பிக்கையின் வேர் முட்டாள்தனம்;
அதைப் பரப்பி, உயர் ஜாதியினர் ஆதிக்கம் செலுத்துவது யோக்கியமற்ற அயோக்கியத்தனம்;
கடவுள் என்ற பெயரால் எதை எதையோ வணங்கு வதன் மூலம், மனிதனின் ஆதி காட்டுமிராண்டித்தன பருவ கால அறிவு என்பதை அறிவியல் பூர்வமாக விளக்கவே தந்தை பெரியார், மக்களைப் பண்படுத்த அந்தக் கருத்துகளைக் கூறினார். அதற்கு இப்படி ஒரு பதில் அளிப்பது, உரிய சமாதானமாகவோ, அறிவுள்ள வாதம் அடங்கியதாகவோ இருக்க முடியாது என்பதை அறிவு வயப்படாமல், ஆத்திரம், ஆணவம் கொப்பளிக்க பதிலளித்தவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள ஒருவர்.
பகுத்தறிவாளர்களை இப்படித் தாக்குவது ஆரியத்திற்குப் புதிதல்ல.
கட்டை விரலை தானமாகக் கேட்ட துரோணாச்சாரியாரின் யோக்கியதை என்ன?
‘சார்வாகர்கள்’ என்ற சொல்லுக்கு ‘இனிமையானவர்கள்’ என்ற பொருள் உண்டு. அதனை தலைகீழாக்கி, அவர்களை இழிவுபடுத்தியது வைதிகமும், அதன் ஆரியக் கூட்டமும்!
சுராபானம், சோமபானம் குடித்த ஆரியர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்ட, ‘அசுரர்கள்’ என்று அழைத்துக் கொண்டவர்களை இழிவும், கொடு மையும் மிகுந்தவர்கள் என்று ஆக்கியதுபோல, இப்படி தனது அறிவைச் சூன்யமாகக் கொண்டு, ஆவேசப்பட்டிருக்கிறாரே! உயர்நீதிமன்றப் பதவியில் உள்ள ஒருவர் – அப்பதவியின் மாண்பை, மரியாதையை இப்படி குறைக்கலாமா? என்பதே நமது வருத்தம்!
அவரை நோக்கி சில கேள்விகள்:
- குரு பெருமையைக் கூறும் ஆரிய குருமாரில் அதிகம் சுட்டப்படுபவர் மகாபாரதத்தின் துரோணாச்சாரிதானே!
அவரது யோக்கியதை என்ன? எப்படி அநியாயமாக நடந்துகொண்டார்? தன்னை ‘குரு’வாகக் கொண்ட ஏகலைவனின் கட்டை விரலைக் காணிக்கையாகப் (குருதட்சணை) பெற்றார் என்பதை மண்டல் அறிக்கையே கூறுகிறது. அந்த மண்டல் அறிக்கையில், துரோணாச்சாரியின் துர்புத்தி – ஆரிய வருணத்தின் கொடும் புத்திபற்றி குறிப்பிடப்பட்டுள்ளதே, அத்தகைய குருமார்கள் வழியில் 21 ஆம் நூற்றாண்டிலும் ஒருவர் நீதிபதியாக இருக்கலாமா?
பல குருமார்களின் ‘யோக்கியம்’ எப்படிப்
பட்டது?
காஞ்சி மட சங்கராச்சாரியார்பற்றி பிரபல பெண் எழுத்தாளர் அனுராதா ரமணன் கூறிய சம்பவம்பற்றி இவருக்கு நாம் இப்போது நினைவூட்ட வேண்டுமா?
கிரிமினல் வழக்கில் ஜெயிலுக்குப் போன சங்கராச்சாரியார்கள்!
காஞ்சி மடத்து சங்கராச்சாரியார்கள் ஏன் கிரிமினல் வழக்கில் – அதுவும் கோயிலுக்குள் நடந்த சங்கரராமன் கொலை வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டு, பிறகு ‘பெயில்’ பெற்று, பின்னர் பிறழ் சாட்சிகளாலும், மேல்முறையீடு செய்யாததாலும் வெளியே வந்த நிலை மறந்து போய்விட்டதா?
வசந்தகுமார் – கருநாடகா அரசு வழக்கில், உச்சநீதி மன்றமே – ‘‘The Days of Dronacharya and Eklavya are over’’ என்று கருத்துக் கூறியிருக்கிறதே துரோணாச்சாரியான குரு தலையில் குட்டு வாங்கினாரே?
உ.பி.யில், துவாரகா பீட சங்கராச்சாரிமீது பாலியல் குற்றச்சாட்டில் அவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இப்படி குருவின் யோக்கியதைகளை எழுத எவ்வளவோ உள்ளது.
பிறந்த தேதியை திருத்திக் கொடுத்து, தனது பதவிக் காலத்தை நீட்டித்த கடவுள் நம்பிக்கை நிறைந்த தலைமை நீதிபதிக்கு, ‘யோக்கியர்’ என்று நற்சான்று பத்திரம் வழங்குவாரோ, இந்த நீதிபதி!
பகுத்தறிவுவாதம் என்பது அறிவியல் (விஞ்ஞானம்)! அது அறிவு சார்ந்தது, வெறும் நம்பிக்கை என்று கூறிடுவது அறிவுக்கு ஒவ்வாதது.
சில உதாரணங்களை – மேலும் தேவையென்றால் எடுத்துக்காட்டி, கருத்துக் களத்தில் நாம் அவரை மட்டுமல்ல, எவரையும் சந்திக்கத் தயார்!
நாவடக்கம் நல்லது!
மேலும் விளக்கம் வேண்டுமா? தந்தை பெரியார் எழுதிய ஒரு சிறு கட்டுரை –
‘‘நான் சொன்னால், உனக்கேன் கோபம் வரவேண்டும்?’’ என்ற நூலைப் படித்து, பதில் எழுதுங்கள், முடிந்தால்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
26.2.2026
