‘திரிசூலங்கள்!’

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சுயமரியாதை இயக்கத்திற்கு ஒரு மாற்றுப் பெயர் சூட்ட வேண்டுமென்றால் ‘அறிவு விடுதலை இயக்கம்’ என்பது பொருத்தமாக இருக்கும் என்றார் சுயமரியாதைச் சூரியனாம் தந்தை பெரியார்.

ஆமாம் – மனிதனுக்கு ஆறாவது அறிவான பகுத்தறிவு இருந்தும், அதனை எல்லா இடத்திலும் பயன்படுத்த முடியாத அளவுக்கு – பல தடைகளும், போதைகளும் தடுத்து நிறுத்துகின்றன – பாதை தவறி இழுத்துச் செல்பவைகளாக இருக்கின்றன.

இதனை வெகு நுட்பமாக ‘நுண்மான் நுழைபுலமறிந்த’ (407ஆவது திருக்குறளில் பயன்படுத்தப்பட்ட அருஞ்சொல்) தந்தை பெரியார் – பகுத்தறிவைப் பயன்படுத்த முடியாமல் தடுக்கும் தடைகளையும், போதைகளையும் அகற்றும் அரும் பெரும் தொண்டை மேற்கொண்டார்.

அந்தத் தடைகளாக கடவுளும், மதமும், வேதம் உள்ளிட்ட மத நூல்களும் இருந்த காரணத்தால், இவற்றில் ஊறியிருந்த  மக்களால் தந்தை பெரியாரின் சிந்தனைப் போக்கை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

வன்முறையை மூலதனமாகக் கொண்ட தடை மலை களையும் பக்தி என்னும் பாழும் கடலையும் தாண்டும் பணியாகவே அது இருந்தது.

‘இவ்வளவு எதிர்ப்புகளையும் ஏன் வீணாக சம்பாதிக்க வேண்டும்? இதனை விட்டு விட்டு, தந்தையார் நடத்திய மண்டிக் கடைத்தொழிலை மேற்கொள்ளலாமே! பணம் வந்து கொட்டுமே!’ என்று நினைத்து ஒதுங்கிடவில்லை தந்தை பெரியார்.

‘‘ஒரு கை பார்க்கிறேன்!’’ என்று களத்தில் நின்றார். பிரச்சாரம்! பிரச்சாரம்!!, பிரச்சாரம்!!! – இந்த சக்தி முன் எது நிற்கிறது என்று பார்க்கலாம் என்று தோள் தட்டி எழுந்தார். இன்னும் சொல்லப் போனால் தனி மனித இராணுவமாக வெடித்தெழுந்தார். சிந்திக்க மறுத்தவர்கள் மெல்ல மெல்ல சிந்திக்கத் தொடங்கினர்; ஆம் அந்த வெற்றிகரமான முதல் புள்ளிதான் தந்தை பெரியாரின் பகுத்தறிவுத் தத்துவச் சுடர் பிரகாசிக்கத் தொடங்கிய தருணமாகும்.

பிரச்சாரம் இரண்டு வகைகளில் ஒன்று மேடைப் பேச்சு; இன்னொன்று வெளியீடுகள்.

2.5.1925இல் ‘குடிஅரசு’ தொடங்கப்பட்டு, 1949 வரை வெற்றி நடை போட்டது. அதன் பிறகு 91ஆம் ஆண்டில் வெற்றி நடை, வீர நடை போட்டுக் கொண்டிருக்கும் ‘விடுதலை’ வரை அனைத்தும் பகுத்தறிவுப் பீரங்கி முழக்கங்களாகின.

இவை வெறும் காகிதங்கள் அல்ல  – போர் ஆயுதங்கள் என்பதை கண்டோம்! கண்டோம்!!

தமிழ்நாடு இந்தியத் துணைக் கண்டத்திலேயே தனித் தன்மையாக ஒளி வீசுவது எப்படி என்று கேட்பவர்கள் இந்த யுக்தியைப் புத்தியோடு புரிந்து கொள்ள வேண்டும்.

தந்தை பெரியார் ஆரம்பித்துக் கொடுத்த அந்த வெளியீட்டுத் துறை, தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் காலத் தில் அடையாறு ஆலமரமாக, ஆயிரம் ஆயிரம் விழுதுகளையும் வேர்களையும் கொண்டு எந்தப் புயலையும் ‘‘போய்ட்டுவா!’’ என்று புறமுதுகிட்டு ஓடச் செய்து கொண்டு இருக்கிறது.

ஒவ்வொரு பொதுக் கூட்டத்திலும் ‘நூல் வெளியீடு’ என்பது வழமையாகி விட்டது. திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையில் ‘‘நூல்’’களின் ஆதிக்கத்தை அடி வேரோடு வீழ்ந்த தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்க, திராவிடர் கழக ‘நூல்கள்’ (புத்தகங்கள்) போர் ஆயுதங்களாகி விட்டன.

அந்த வரிசையில் தான் தஞ்சையில் நடைபெற்ற (21.2.2026) மாநாடுகளில்கூட மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன! எதையும் திடீர் என்று ஒரு சொல்லைத் தூக்கிப் போடுவதில் நமது தலைவர் ஆசிரியருக்கு நிகர் அவரேதான்! அந்த மூன்று நூல்களை ‘‘திரிசூலங்கள்’’ என்றாரே பார்க்கலாம்…! உச்சி முடியை இழுத்துக் குலுக்குவது போலிருந்தது.

ஆர்.எஸ்.எஸின் குடும்பத்தைச் சார்ந்த விஸ்வ ஹிந்து பரிஷத் என்கிற அமைப்பு, மக்கள் மத்தியில் ஹிந்துத்துவா மத வெறியைப் புகுத்த வன்முறை ஆயுதங்களான திரிசூலங்களை வழங்கி வருகின்றது.

ஒரு சூலத்தின் முனை இஸ்லாமியர்களையும், இன்னொரு முனை கிறித்தவர்களையும், மூன்றாவது முனை மதச்சார்பின்மை  பேசும் பகுத்தறிவாளர்களையும் பதம் பார்க்கும் என்று பச்சையாக திறந்த வெளியில் மேடைப் போட்டுப் பிரச்சாரம் செய்து, மக்களிடத்திலே அந்த வன்முறை ஆயுதங்களை வழங்கிக் கொண்டு இருக்கும் நிலையில் –

பகுத்தறிவு சுயமரியாதை இயக்கமான திராவிடர் கழகம் தஞ்சை மாநாட்டிலே வழங்கிய அந்தத் திரிசூலங்கள் மதவாத  வன்முறைத் திரிசூலங்களை முனை மழுங்கச் செய்யும் பேராற்றலைக் கொண்ட அறவழிப்பட்ட அறிவாயுதங்களாகும்!

(1) ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற தந்தை பெரியாரின் 50ஆவது பதிப்பு நூல் – இந்த நூலில் இடம் பெற்ற ஒரு கட்டுரைக்கு வயது நூறு ஆகும்.

உலக மொழிகளில் எல்லாம் மொழி பெயர்க்கப்பட்ட பெருமை இந்நூலுக்கு உண்டு.

(2) இரண்டாவது நூல், ‘பெண்கள் முன்னேற்றத்திற்குத் தந்தை பெரியார் செய்தது என்ன?’ (ஆசிரியர் மானமிகு கி. வீரமணி) என்பதாகும். நூறு கருத்துக் கருவூலங்களை உள்ளடக்கமாகக் கொண்டது.

(3)  மூன்றாவது நூல், தந்தை பெரியாரின் மாணவரான அறிஞர் அண்ணாவின், மாநில சுயாட்சியை வலியுறுத்தும், அவரின் கடைசிப் படைப்பான ‘அறிஞர் அண்ணாவின் உயில் (கடைசி) கடிதம்’ ஆகும்.

தஞ்சை மாநாட்டுச் சிறப்புகளிலிருந்து இந்தத் ‘திரிசூலங்கள்’ புறப்பட்டு இருக்கின்றன. இம்மூன்று நூல்களின் நன்கொடை வெறும் 50 ரூபாய் தான்.

அதிக எண்ணிக்கையில் இந்த நூல்களைப் பரப்புவீர்! பரப்புவீர்! பகுத்தறிவு வெளிச்சம் மட்டுமே அறியாமை இருளை யும், ஆதிக்க நெடியையும் விரட்டி அடிக்கும் – அடிக்கும்!

எல்லா இடங்களிலும் உரிமை முரசுகளைக் கொட்டும்!  கொட்டும்!! சங்கநாதமாக ஒலிக்கும்! ஒலிக்கும்!!

என்ன தோழர்களே சரிதானே! இந்தத் திரிசூலங்கள்தான் கவர்ச்சிகளையும் களையும் – மதங்களையும் மண்மூடச் செய்யும்!

கிளம்பட்டும் திரிசூலம்! ஓடிப் போகட்டும் பாசிசம்!

வாழ்க பெரியார்! வெல்க திராவிடம்!!

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *