டோங்க், பிப்.24- ராஜஸ்தானில் பிரதமர் மோடி பிப்.28 அன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில் இச்சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்ளுமாறு பொதுமக்களை அழைக்க ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் உள்ள கரேடா என்ற கிராமத்திற்கு சென்றுள்ளார் பாஜக முன்னாள் எம்.பி. சுக்பீர் சிங் ஜானபுரியா.
பிரதமர் மோடியின் வருகை குறித்து மக்களிடம் பரப்புரை செய்து கொண்டிருந்தபோது, அங்குவந்த பெண்களுக்கு போர்வைகள் வழங்கியுள்ளார். அப்போது ஒரு பெண்ணின் பெயரைக் கேட்டுள்ளார். அவர் தனது பெயரை சொன்னவுடன் அவர் முஸ்லீம் என தெரியவர அவருக்கு கொடுத்தப் போர்வையை திரும்பப் பெற்றுள்ளார். மேலும் அங்கிருந்த முஸ்லீம் பெண்களுக்கு கொடுத்த அனைத்துப் போர்வைகளும் திரும்ப பெறப்பட்டுள்ளது.
அதற்கு “பிரதமர் நரேந்திர மோடியைத் திட்டுபவர்களுக்கு போர்வை வாங்க உரிமையில்லை” என்றும் “நீங்கள் வருத்தப்பட்டாலும் எனக்குக் கவலையில்லை” என்றும் கூறியுள்ளார். இதுதொடர்பான காணொலி இணையத்தில் பரவி வருகிறது. இது ஒரு அரசுத் திட்டம் அல்ல என்றும், தனது சொந்தப் பணத்தில் செய்யப்படும் தனிப்பட்ட உதவி என்பதால் யாருக்கு வழங்க வேண்டும் என்பதைத் தானே தீர்மானிப்பேன் என்றும் கூறியுள்ளார்.
இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
பல பெண்கள் மணிக்கணக்காக காத்திருந்தும் வெறுங்கையுடன் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். ஏழை மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு போர்வைகளை வழங்கிய பிறகு அவர்களின் பெயரைக் கேட்டு, பின்னர் அவர்களின் மதத்தின் அடிப்படையில் அவற்றை திரும்பப் பெறுவது மனிதாபிமானமற்ற செயல் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுதான் உ.பி. பி.ஜே.பி. ஆட்சியின் இலட்சணம்!
உ.பி.யில் பள்ளிப் புத்தகங்கள் பழைய பேப்பர் கடையில் விற்பனை – 4 பேர் கைது!
லக்னோ,பிப்.24- உத்தரப் பிரதேசத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்க புதிதாக அச்சிடப்பட்ட புத்தகங்கள் பழைய பேப்பர் கடையில் விற்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. புதிதாக அச்சிடப்பட்ட பள்ளி பாடப் புத்தகங்களை பழைய பேப்பர் கடையில் கிலோ ரூ.4க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் இருந்து 13 ஆயிரம் பாடப் புத்தகங்களை பழைய பேப்பர் கடையில் எடைக்கு விற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு ஒரு லாரி முழுவதும் நிரப்பி அனுப்பி வைக்கப்பட்ட புத்தகங்கள் பழைய பேப்பர் கடையில் விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எடைக்கு புதிய புத்தகங்களை வாங்கிய வியாபாரி, அவற்றை உத்தராகண்டில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு விற்றதன் மூலம் மோசடி அம்பலமாகியுள்ளது. பழைய பேப்பர் கடையில் இருந்து புதிய புத்தகங்களை ஏற்றிச் சென்ற லாரியை வழிமறித்து 13 ஆயிரம் பாடநூல்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
