தனியார் யூடியூப் நிறுவனம் ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்று, செய்தியாளர்களைச் சந்தித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு.டி.டி.வி.தினகரன் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில், ‘‘திராவிடம், நாத்திகம் போன்ற கொள்கைகளையெல்லாம் அவரவர் மனதில் வைத்துக் கொள்ளும் அளவுக்குத் தான் இருக்கிறது. அய்யா வீரமணி வீட்டிலேயே அவங்கல்லாம் மேல் மருவத்தூருக்கு எல்லாம் போவாங்க. அவங்க வீட்டில் பெண்கள் எல்லாம்! இதெல்லாம் பேசலாம் வெளியில்! உண்மை, எதார்த்தம் வேறு!” என்பதாகப் பேசியிருக்கிறார்.
இது முற்றிலும் உண்மைக்கு மாறான தகவல். வீணான வதந்தி. தமிழ்நாட்டின் மூத்த தலைவரான திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களையும், அவருடைய குடும்பத்தினரின் கொள்கை உறுதியையும், சுயமரியாதை இயக்கத்தின் இரண்டாம் தலைமுறையாகத் தெளிந்த பகுத்தறிவாளராகவும், நாத்திகராகவும், மூத்த பெரியாரிஸ்டாகவும் வாழும் திருமிகு. வீ.மோகனா அம்மையாரைக் குறித்தும் இப்படி ஒரு கட்சியின் தலைமைப் பதவியில் இருப்பவர் பேசுவது அழகல்ல; முறையானதல்ல. இது ஒன்றும் அரசியல் விளையாட்டல்ல – வாய்க்கு வந்தவற்றையெல்லாம் பேசுவது நாகரிகமானதும் அல்ல!
பகுத்தறிவுக் கொள்கையில் நெருப்பாக இருக்கக்கூடியவர்களைப்பற்றி அவதூறு பேசுவது எந்த வகையைச் சேர்ந்தது?
தான் கூறியது உண்மை என்று அவர் கருது வாரேயானால், அதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அவருடையது – அதுதான் நாணயமாகும்!
இதே போல கடந்த 2012-ஆம் ஆண்டு ஒரு பேட்டியில், தமிழர் தலைவர் ஆசிரியரின் தம்பியும், ஆசிரியரின் மனைவியும் தன்னை வந்து சந்தித்ததாகப் பொய்யான தகவல் ஒன்றைக் கூற, அப்போதே எழும்பூர் நீதிமன்றத்தில், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மீதும், அந்தப் பேட்டியை வெளியிட்ட பத்திரிகை மீதும் அவதூறு வழக்குத் தொடர்ந்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் என்பது வரலாறு.
உண்மைக்கு மாறான தகவலைப் பொதுவெளியில் எந்தச் சான்றும் இல்லாமல் பேசியுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு.டி.டி.வி.தினகரன், தவறான செய்திக்குத் தானே மறுப்பு தெரிவிக்க வேண்டும். இந்தக் காணொளியை ஒளிபரப்பிய ஊடகம் உடனடியாக அந்தக் காணொளியை நீக்கி, தவறான செய்தியை ஒளிபரப்பியமைக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்பதே உரிய உடனடியான தீர்வு ஆகும்.
அடுத்த கட்டங்களைத் தவிர்க்க, உரியவர்கள் உரிய வகையில் நடந்துகொள்வார்கள் என்று கருதுகிறோம்.
– கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர்,
திராவிடர் கழகம்
