திருச்சசி, பிப்.23 திருவரங்கம் கோயில் நிலங்களை ஆக்கிரமித்து, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ‘சொகுசு’ வாழ்க்கை வாழ்ந்து வரும் பார்ப்பனர்களில் 41 பேர், அதை எங்கள் பெயருக்கே பட்டா வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்திற்குப் போனார்கள்.
கடந்த, 19 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில், ‘‘திருவரங்கம் கோவில் நிலத்தில் குடியிருப்போரின் அடிமனைகள், அரங்க னுக்கே சொந்தமானது. அதில் வசிப்போர் அடி மனைக்குச் சொந்தம் கொண்டாடமுடியாது.அந்த அடிமனைகளில் வீடு கட்டியோர், 3 மாதங்களில் வீடுகளை காலி செய்து, மீண்டும் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கவேண்டும். இந்த இடங்களுக்குக் கடந்த காலங்களில் வழங்கிய பட்டாக்களை யும் ரத்து செய்ய வேண்டும்’’ என்று திருச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் உத்தர விட்டுள்ளார்.
திருவரங்கம் ரங்கநாதர் கோயிலைச் சுற்றியுள்ள உத்திரவீதி, சித்திரை வீதி, அடவழைஞ்சான் வீதி ஆகியவை மட்டுமே இந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. அது போக கோயிலைச் சுற்றி, கோயிலுக்குச் சொந்தமான 329 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலங்களை, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பார்ப்பனர்கள் ஆக்கிரமித்து வந்துள்ளனர். 2007 ஆம் ஆண்டு இது தொடர்பாக நடவடிக்கை எடுத்த அப்போதைய திருவரங்கம் கோயிலின் இணை ஆணையர் திருமதி.கவிதா அவர்கள், பார்ப்பனர்களின் தூண்டுதலின் பெயரில் இடமாற்றம் செய்யப்பட்டார். பின்னர் இப்பிரச்சினையை ‘விடுதலை’ நாளேடு வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. அப்போதைய முதலமைச்சர் கலைஞர் தலையிட்டு, இணை ஆணையர் கவிதாவை திருவரங்கம் கோயிலில் மீண்டும் நியமித்தார்.
அப்போது தொடுக்கப்பட்ட வழக்கில்தான், முதல் கட்டமாக இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. இதேபோல, மற்றொரு வழக்கில், உச்சநீதிமன்றம் வரை சிலர் மேல்முறையீடு செய்துள்ளதாக நிலத்தை ஆக்கிரமித்த பார்ப்பனர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதில், பார்ப்பனர்கள் மாட மாளிகைகளாகவும், சொகுசு பங்களாக்களாகவும் கட்டி, தலைமுறை தலைமுறையாக அனுபவித்து வருகிறார்கள். போதாக்குறையாக இதை சுற்றுலாப் பயணிகளுக்கும் வாடகைக்கு விட்டு லாபம் பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
