ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையைப் பறித்து,
அதிகாரப் பதவிகளை உயர்ஜாதியினரின் ஏகபோகமாக்கும் அநீதியை அனுமதிக்கலாமா?
தமிழ்நாடு முழுவதும் மார்ச் 3 இல் கண்டன ஆர்ப்பாட்டம் ஆர்ப்பரித்து நடக்கட்டும்!
இன்றே தொடங்குவீர் தோழர்களே, ஆயத்தப் பணிகளை!
தமிழர் தலைவர் ஆசிரியரின் கடமை நினைவூட்டும் அறிக்கை
ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையைப் பறித்து, அதிகாரப் பதவிகளை உயர்ஜாதியினரின் ஏகபோகமாக்கும் அநீதியை அனுமதிக்கலாமா? தமிழ்நாடு முழுவதும் மார்ச் 3 இல் கண்டன ஆர்ப்பாட்டம் ஆர்ப்பரித்து நடக்கட்டும்! இன்றே தொடங்குவீர் தோழர்களே, ஆயத்தப் பணிகளை! ஓய்வில்லை நமக்கு – அடுத்த களம் காண ஆயத்தமாவீர் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கடமையை நினைவூட்டி அறிக்கை விடுத்துள்ளார்.
- ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையைப் பறித்து,
- அதிகாரப் பதவிகளை உயர்ஜாதியினரின் ஏகபோகமாக்கும் அநீதியை அனுமதிக்கலாமா?
- தமிழ்நாடு முழுவதும் மார்ச் 3 இல் கண்டன ஆர்ப்பாட்டம் ஆர்ப்பரித்து நடக்கட்டும்!
- இன்றே தொடங்குவீர் தோழர்களே, ஆயத்தப் பணிகளை!
- தமிழர் தலைவர் ஆசிரியரின் கடமை நினைவூட்டும் அறிக்கை
- வியக்கத்தக்க வகையில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள்!
- தியாக மறவர் கூட்டம் திக்கெட்டுமிருந்து திரண்டது
- அவர்கள் வசம் ‘ராஜ்யம்’ வராது; ‘பூஜ்யமே மிஞ்சும்’
- களைப்பின்றி கடமையாற்றுவீர்!
- மார்ச் 3: கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆயத்தமாகுங்கள்!
- ஓய்வில்லை நமக்கு – களம் காண கடமையாற்றுவீர்!
அவரது அறிக்கை வருமாறு:
வியக்கத்தக்க வகையில்
தஞ்சையில் இருபெரும் மாநாடுகள்!
தஞ்சையில் இருபெரும் மாநாடுகள்!
வெகு குறுகிய காலத்தில் அறிவிக்கப்பட்டு, கடந்த 21.2.2026 இல் கழகப் பாசறைப் பாடி வீடான தஞ்சைத் தரணியில், காலையில் திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை அணிகளும், மாலையில், திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழக அணியினரும் இணைந்து நடத்திய இருபெரும் மாநில மாநாடுகளில், தஞ்சையே வியக்கத்தக்க வகையில், மகளிரும், இளைஞர்களும், தோழர்களும் பல்லாயிரக்கணக்கில் கூடினர்.
வருகின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் (2026) சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள கூட்டணி மகத்தான வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைக்க, எப்படி களத்தில் நிற்கும் இராணுவ வீரரர்களுக்கு, வெற்றியைத் தவிர வேறு சிந்தனையே வராதோ – அந்தக் கடமை உணர்ச்சியுடன் சூளுரைத்து உறுதியேற்ற காட்சியின் மாட்சி – ஓர் உன்னத சரித்திரம்!
தியாக மறவர் கூட்டம்
திக்கெட்டுமிருந்து திரண்டது
திக்கெட்டுமிருந்து திரண்டது
திராவிடக் கொள்கையை காக்கப் புறப்பட்ட தீரர்கள் அணிவகுப்பாக அது அமைந்தது, புத்துணர்ச்சியையும், மீண்டும் ஒரு புத்தாக்கத்தையும் தந்து, ‘கிளம்பிற்றுக்காண் சிங்கக் கூட்டம்’’ என்று ஆயத்தப்படுத்திக் கொண்ட, இப்படி ஒரு கூட்டத்ைத எளிதில் எவரும் காண முடியாது என்னும் அளவுக்கு மானம்பாரா, நன்றியை எதிர்பாரா, திராவிட தியாக மறவர் கூட்டம் திக்கெட்டுமிருந்து திரண்டது.
தி.மு.க.வினை, அதன் உறுதி குலையா கொள்கைக் கூட்டணியை கலைக்க முடியாத ஏமாற்றத்தில், முன்பு மேற்கொண்ட மூன்று பெரும் சூலாயுதங்கள் முனை மழுங்கிவிட்டன என்பதால், இப்போது நீதிமன்றங்களையும் தங்களது துணைக் கருவிகளாக ஆக்கிக்கொண்டு, புதிய அஸ்திரங்களை வீசி, தி.மு.க. கூட்டணியை, அதன் உரிமைக் குரலை நெரித்துவிடலாம் என்று, ஒன்றியத்தை ஆளும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் புதுப்புது முயற்சிகளை, அச்சுறுத்தல் – அவதூறுகளை ஆயுதங்களாக்கி வருகின்றனர்.
பிரதமரும், உள்துறை அமைச்சரும் பலமுறை தமிழ்நாட்டிற்கு வந்து, ‘பழைய பாடலையே’ திரும்பத் திரும்பப் பாடிவிட்டுப் போக முயற்சிக்கக் கூடும்.
அவர்கள் வசம் ‘ராஜ்யம்’ வராது;
‘பூஜ்யமே மிஞ்சும்’
‘பூஜ்யமே மிஞ்சும்’
ஆனால், அவர்கள் வசம் ‘ராஜ்யம்’ வராது; ‘பூஜ்யமே மிஞ்சும்’ என்பதைத் தமிழ்நாட்டு வாக்காளர்கள் – குறிப்பாக மகளிர் முந்தைய தேர்தல்களில், தி.மு.க. கூட்டணி வெற்றிமூலம் தெளிவுபடுத்தியதுபோலவே, நிச்சயம் செய்வர் என்பது வெளிப்படை.
எதிரணியில் தமிழ்நாட்டுத் தேர்தலுக்கு யார் உண்மைத் தலைவர், அதில் சேர்ந்தவர்களே கூட ‘உழக்கில் கிழக்கு, மேற்கு’ பேசிக் கொண்டுள்ள பரிதாப நிலை அங்கே!
போட்டியிடும் வேட்பாளர்களுக்குத் தொகுதி நிலவரக் கவலை என்றால், இவ்வெற்றிதான், வருங்காலத் தமிழ்நாட்டை, சுயமரியாதையோடும், பகுத்தறிவோடும், உரிமைகளை வென்று, உறவுகளைப் பலப்படுத்திடும் என்பதால், ஆழ்ந்த கவலையுற்று, இறுதி முடிவு வரை – கண்ணுங்கருத்துமாக, பொறுப்பு டன் செயல்படவேண்டியது தாய்க்கழகமான, முதலமைச்சரின் ‘சல்யூட்’டைப் பெற்ற இந்தக் கருஞ்சட்டை இராணுவத்திற்கு உண்டல்லவா?
‘தேர்தல் பணிக்கு நமக்கு அழைப்பு விடுத்தார்களா? நம்மை மதித்தார்களா? அழைத்தார்களா?’ என்ற சிந்தனைக்கே இடம் தரக்கூடாது; ஏனென்றால், இது ‘‘நம் வீட்டுத் திருமணம்’’ போன்ற உயர்தனிக் கடமை, தாய்க்குள்ள வற்றாத பாசம், மறாவதீர்!
களைப்பின்றி கடமையாற்றுவீர்!
எனவே, தோழர்களே, தோழர்களே,
நமது பிரச்சாரத்தினை – நமது சிறுசிறு வெளியீடுகளை வாங்கி, திண்ணைப் பிரச்சாரம் தொடங்கி, தெருமுனை, ஊர் முனை வரை அயராமல் – காற்று எப்படி வீசுகிறதோ, மழை எப்படி இயல்பாகப் பொழிகிறதோ – அதுபோல, களைப்பின்றி கடமையாற்றுவீர்!
மாநாட்டிற்குக் குடும்பம் குடும்பாய், பெரியார் பிஞ்சுகளோடு வந்தீர்கள். பாதுகாப்பாய் சென்றுள்ளீர்கள், மகிழ்ச்சி!
ஏற்பாடு செய்து, அயராமல் உழைத்த தஞ்சை மாவட்டத் திராவிடர் கழக உழைப்புத் தேனீக்களுக்கு எமது எல்லையற்ற மகிழ்ச்சி கலந்த நன்றிகள்!
நமது இயக்க நடைமுறையை நீங்கள் நன்கு அறிந்தவர்கள் அல்லவா?
ஒன்று முடியும்; மற்றொன்று தொடங்கும் – இடைவெளியின்றி!
மார்ச் 3: கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆயத்தமாகுங்கள்!
மாநாடு முடிந்தது, ஒரு போராட்ட அறிவிப்போடு! மார்ச் 3 ஆம் தேதி, கழக மாவட்டங்கள் அனைத்திலும் சமூகநீதியைத் திருடிக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஒன்றிய ஆட்சியின் சட்ட விரோதமாக, சமூகநீதி ஒதுக்கீடுகளை உயர்ஜாதியினரின் ஏகபோகமாக்கி, நமது ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையைப் பறிக்கும் அநீதியை எதிர்த்து நடத்தவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தை, மிகவும் எழுச்சியுடன் ஒவ்வொரு களத்திலும் சிறப்பாக – கட்டுப்பாடாக நடத்திட உடனடியாக ஆயத்தமாகுங்கள்!
தேர்தல் காலத்தில் மற்ற அரசியல் கட்சிகள் அதில் திளைத்திருந்தாலும், நாம் இதிலும், நம் மாறாப் பார்வையைச் செலுத்தி, அறப்போர் மூலம், நமது உயிர்க் கொள்கையான சமூகநீதியை மீட்டுருவாக்குவோம்! ஒத்தக் கருத்துள்ளோரை ஒருங்கிணைப்பீர்! ஆயத்தப் பணிகளை இன்றே தொடங்குவீர்!
ஓய்வில்லை நமக்கு –
களம் காண கடமையாற்றுவீர்!
களம் காண கடமையாற்றுவீர்!
அணியமாவீர்!
ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து ஊர்களிலும் ஆயுத்தமாவீர்!
‘இயக்கம்’ என்றால், சதா இயங்கிக் கொண்டே இருப்பதுதான் – இருதயம் போலவே!
ஓய்வில்லை நமக்கு – களம் காணக் கடமையாற்றுவீர்!
வெற்றி நமதே!
நன்றி, நன்றி!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
23.2.2026
