முத்திரை பதித்த தஞ்சை மாநாடுகள்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சுயமரியாதை இயக்கக் காலந்தொட்டு தஞ்சாவூர் மாவட்டம் என்பது தந்தை பெரியார் என்னும் கொள்கை நன்செய் செழித்து வளர்ந்த டெல்டா பகுதியாகும்.

குடும்பம் குடும்பமாக சுயமரியாதை இயக்க திராவிடர் கழக அமைப்பில் தங்களை ஒப்படைத்துக் கொண்ட பாசறை அது!

தந்தை பெரியார் எந்தக் கட்டளையிட்டாலும் அதற்காக எந்த இழப்பையும் ஏற்க வேண்டியிருந்தாலும், சிறைச் சாலைக்குச் செல்வதாக இருந்தாலும் சற்றும் தயக்கமின்றிக் குடும்பத்துடன் குதூகலிருத்துக் கிளம்பும் கொள்கை வீரர்கள் நிறைந்த கோட்டமாகும்.

திராவிடர் கழகம் என்பது சமூகப் புரட்சிக்காகப் பிறப்பெடுத்ததாகும்! பதவி அரசியல் பக்கம் தலை வைத்துப் படுக்காத புரட்சிகரக் கொள்கை கொண்ட – வேறு எங்கும் காணப்படவே முடியாத அதிசய இயக்கமாகும்!

இந்த மாவட்டத்தில் நடந்த இயக்க மாநாடுகள் குறிப்பிடத்தக்க விழாக்கள்  – நிகழ்ச்சிகள் போல் வேறு எந்தப் பகுதியையும் குறிப்பிடவே முடியாது.

எடுத்துக்காட்டாக – குறிப்பாக – சிறப்பாக ஜாதி ஒழிப்புப் போராட்டக் களம் காண 1957 நவம்பர் 3ஆம் தேதி தஞ்சையிலே ஜாதி ஒழிப்பு (ஸ்பெஷல்) மாநாடு ஒன்றை தந்தை பெரியார் நடத்தினார். (அம்மாநாட்டில்தான் தந்தை பெரியாருக்கு எடைக்கு எடை வெள்ளி நாணயம் அளிக்கப்பட்டது).

ஜாதி ஒழிப்புக்காக, ஜாதியைப் பாதுகாக்கும் கடவுள், மதம், புராணம், இதிகாசம் இவற்றையெல்லாம் எடுத்துக்காட்டி, மக்கள் மத்தியிலே எழுச்சியை ஏற்படுத்திய தந்தை பெரியார் ‘சுதந்திர’ இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்திலும் ஜாதியைப் பாதுகாக்கும் பகுதிகள் இருப்பதைக் கண்டு வெகுண்டு, அரசமைப்புச் சட்டத்தில், ஜாதியைப் பாதுகாக்கும் ‘அந்தப் பகுதி’யைக் கொளுத்தும் போராட்டத்தை அறிவித்தார். இந்தப் போராட்டத்துக்காகவே ‘மூன்றாண்டு சிறைத் தண்டனை என்று புதிதாக சட்டம்’ கொண்டு வந்த நிலையிலும், 10 ஆயிரம் தோழர்கள் களத்தில் குதித்தனர். அரசியல் சட்டத்தைக் கொளுத்தினர்.

இன்று வரை அந்த ஜாதி ஒழிப்புப் போராட்டத்தை திராவிடர் கழகம் கையில் எடுத்துக் கொண்டுதானிருக்கிறது.

தஞ்சையில் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் பாசறை திராவிடர் கழக மாணவர் கழகம் மற்றும் இளைஞரணி மாநாடுகளும் ஜாதி ஒழிப்பை மய்யமாகக் கொண்டவைதான்.

தமிழ்நாடு, சட்டப் பேரவைத் தேர்தலை சந்திக்கக் கூடிய இந்தக் கால கட்டத்தில் இந்த நான்கு மாநாடுகளும் வெறும் அரசியல் கண்ணோட்டமின்றி, மக்களின் சிந்தனையைக் கூர் தீட்டும் மாநாடுகளாக அமைந்திருந்தன.

இருபால் இளைஞர்கள், மாணவர்கள் இத்தனை ஆயிரத்தினர், ஒரு சமூகப் புரட்சி இயக்கத்திலா? என்று பொது நிலையில் உள்ளவர்களும், ஏன் ஊடகங்களும் கொஞ்சம் உன்னிப்பாகவே சிந்திக்கும், எடை போடும் ஒரு நிலையை ஏற்படுத்தி விட்டன! எழுச்சிப் பேரணியும் தஞ்சை மக்களைப் பரவசம் அடையச் செய்தது.

அரசியல் கட்சி அன்பர்களும் அதிசயப்படும் ஒரு நிலையை ஏற்படுத்தி விட்டன. செங்கை – மறைமலை நகரில் கடந்த ஆண்டு அக்டோபர் 4 அன்று சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு நடந்தது. அம்மாநாட்டில் சிறப்பாகப் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பிரமிப்புடனும் புளகாங்கிதத்துடனும் ‘சல்யூட்’ அடித்தார்.

அடுத்த நான்கு மாத இடைவெளியில் தஞ்சையிலே 4 மாநாடுகள் நடந்தேறின.  தி.மு.க.வின் துணைப்பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான மானமிகு ஆ. இராசா, தி.மு.க. உயர்நிலைச் செயல் திட்டக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் பங்கேற்று, தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் வீரியமிக்க செயல்பாட்டையும், விவேகமிக்க தீர்மானங்களையும் பொருத்தமான இந்தக் கால கட்டத்தில் மேற்கொண்டிருப்பதைக் கண்டு பூரித்தனர். 93 வயதிலும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் ஓயா உழைப்பையும், இயக்கத்தையும் – நாட்டையும் வழி நடத்திச்  செல்லும் வழிகாட்டும் திறனையும் கண்டு வியந்து பாராட்டினர் – இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடத்தையும் எடுத்துக்காட்டினர்.

மகளிர் அணி, மகளிர் பாசறை மாநாட்டு மேடையில் மட்டுமல்ல – அரங்கத்திற்குள் அனைத்து இருக்கைகளும் பெண்களுக்கே ஆகின.  ஆண்கள் வெளியில் நிற்க வேண்டிய ஓர் அதிசயத்தை –  திருப்பத்தை அரங்கேற்றிக் காட்டினர் நமது மகளிர் அணி மற்றும் மகளிர் பாசறை தோழர்கள்!

இரண்டு நாள் மாநாட்டுத் தீர்மானங்களும் – வழிகாட்டும் – கருத்தாழம் கொண்டவை.

2026ஆம் ஆண்டில் நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசு வரலாறு காணாத வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்கான காரணக் காரியங்களை, உள் அம்சங்களைக் கொண்ட தன்னிலை விளக்கத் தீர்மானத்தை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களே முன் மொழிந்தது – பிரச்சினையின் முக்கியத்துவத்தை உணர்ந்தக் கூடியதாகும். ஆயிரக்கணக்கான கழகத்தினரும், பொது மக்களும் எழுந்து நின்று அந்தத் தீர்மானத்தை வரவேற்று வழிமொழியும் வகையில் ‘வானிடிந்து வீழ்ந்ததோ?’ என்று கருதும் அளவுக்குப் பலத்த கரவொலியை நீண்ட நேரம் எழுப்பினர்.

‘சுயமரியாதை இயக்கம் பொன் விழா’, ‘தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழா’, ‘தமிழர் தலைவருக்கு எடைக்குஎடை தங்கம் வழங்கும் விழா’ என்று தனது மகுடத்தில் மாணிக்கக் கற்களைப் பொறித்துக் கொண்ட திராவிடர் கழகம் தஞ்சை 21.2.2026 அன்று மேலும் ஓர் ஆணிமுத்தை சூட்டிக் கொண்டது.

தஞ்சை தந்த எழுச்சியோடு விடை பெற்றுச்சென்ற இயக்கத் தோழர்களும், இனவுணர்வாளர்களும் அந்தவுணர்ச்சிக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையில் வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் – சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் வலிமையான ஆட்சி அமைய அயராது பாடுபடுமாறு வலியுறுத்துகிறோம்.

எங்கெங்கும் பரப்புரை நடக்கட்டும்! நடக்கட்டும்!!

தமிழர் தலைவர் மாநாட்டில் சொன்னது போல வெற்றி விழாவை இதே மாநாட்டு மேடையில் நடத்துவோம்!

மாநாட்டின் வெற்றிக்கு அயராது பாடுபட்ட தோழர்களுக்குப் பாராட்டுகள்!

ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி! நன்றி!!

 

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *