சென்னை, பிப்.23- பிளஸ்-2 படித்து முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள், 3 ஆண்டு இளங்கலை ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புக்கு விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் பிளஸ்-2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள், தேசிய தேர்வு முகமையால் (என்டிஏ) நடத்தப்படும் தேசிய ஹோட்டல் மேனேஜ்மென்ட் கவுன்சில் (NCHMCT JEE) நுழைவுத் தேர்வு மூலமாக, தரமணியில் இயங்கி வரும் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு நியூட்ரிஷன் நிறுவனத்தில் 3 ஆண்டு முழுநேர இளங்கலை அறிவியல் (பி.எஸ்சி) பட்டப்படிப்பில் சேர்ந்து பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நுழைவுத் தேர்வு நாள்
ஏப்ரல் 25ஆம் தேதி (இணையதளம் வாயிலாக நடைபெறும்). விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 25ஆம் தேதி. கல்வித் தகுதி: பிளஸ்-2 வகுப்பில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். வருமான வரம்பு: குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ள மாணவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். தேர்வு தொடர்பான கூடுதல் விவரங்களை http://exams.nta.nic.in/nchm-jee/ என்ற இணையதளத்தில் அறியலாம்.
இப்படிப்பிற்கான செலவை தாட்கோ ஏற்கும். படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு நட்சத்திர விடுதிகள், உயர்தர உணவகங்கள், விமானத் துறை, கப்பல் துறை மற்றும் சுற்றுலா நிறுவனங்களில் பணிபுரிய வழிவகை செய்யப்படும். ஆரம்ப கால ஊதியமாக ரூ. 25,000 முதல் ரூ. 35,000 வரை பெறலாம்.
