*மனிதநேய கொள்கையைத் தந்தார் தந்தை பெரியார்! 4 அரசியலில் அடிக்கட்டுமானத்தை உண்டாக்கினார் அறிஞர் அண்ணா!

5 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

* அதன்மீது கட்டடங்களை எழுப்பினார் முத்தமிழறிஞர் கலைஞர்!
அதையும் மிஞ்சும் படி ஆள்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
‘திராவிட மாடல்’ அரசுகளின் தலைமுறைகளைத் தாண்டிய கொள்கை வளர்ச்சிப் பயணத்தை சுட்டிக்காட்டி இராமநாதபுரத்தில் கழகத் தலைவர் பெருமித உரை! 

இராமநாதபுரம்.பிப்.21 மனிதநேய கொள்கையைத் தந்தார் தந்தை பெரியார்! அரசியலில் அடிக்கட்டுமானத்தை உண்டாக்கினார் அறிஞர் அண்ணா! அதன்மீது கட்டடங்களை எழுப்பினார் முத்தமிழறிஞர் கலைஞர்! அதையும் மிஞ்சும் படி ஆள்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றார் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இராமநாதபுரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், “இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி” எனும் தலைப்பில் நடைபெற்று வரும் பரப்புரைக் கூட்டத்தின் தொடர்ச்சியாக, கடந்த 12.2.2026 அன்று அரண்மனை அருகில் மாலை 6 மணியளவில், சிறப்பு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் கே.எம்.சிகாமணி தலைமையேற்று உரையாற்ற, மாவட்டச் செயலாளர் மு.முருகேசன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் காஞ்சிரான்குடி கார்மேகம், சோ.வ.அண்ணா ரவி, பொதுக்குழு உறுப்பினர் கயல் கணேசன், தி.மு.க. மாநில இலக்கிய அணித் தலைவர் மேனாள் அமைச்சர் அன்வர் ராஜா, தி.மு.க. மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் எம்.எஸ்.கே.பவானி ராஜேந்திரன், நகர் மன்றத் தலைவர் ஆர்.கே.கார்மேகம், வி.சி.க.பொறுப்பாளர் அற்புதராஜ், ம.தி.மு.க.மாவட்டச் செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

கழகத் தலைவர் ஆசிரியர் உரை

நிறைவாக கழகத் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார். அவர் தமது உரையில், இன்னும் சில நாட்களில் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவிக்க இருக்கும் சூழலில், நமது கொள்கை எதிரிகள் யார்? கொள்கை நண்பர்கள் யார் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று தொடக்கத்தில் குறிப்பிட்டார். அடுத்து, “அதிக நேரம் பேச முடியாத சூழலில், நாங்கள் கொண்டு வந்திருக்கும் புத்தகங்களை வாங்கி மக்கள் பயன்படுத்த வேண்டும்” தொடர்ந்து, “புத்தகங்களை விற்பனை செய்வது ஆதாயத்திற்கு அல்ல. நாங்கள் பேசுகின்ற கருத்துகளுக்கு ஆதாரம் வேண்டுமல்லவா? அதற்குத்தான் இந்த புத்தகங்கள்” என்றார். மேலும் தொடர்ந்த அவர், ஒரு முக்கியமான கருத்தை எடுத்து வைத்தார். அதாவது, ஒவ்வொரு கட்சியும் தன்னளவில் அது சுதந்திரம் பெற்றது தான் என்பதைச் சொல்லிவிட்டு, “இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி, மற்ற கட்சிகளைப் போல் சுதந்திரம் பெற்ற கட்சியின் ஆட்சி அல்ல. அதை இயக்குவது ஆர்.எஸ்.எஸ். எனும் மதவாத அமைப்பு” என்று சொல்லி, மக்கள் பா.ஜ.க. எனும் கட்சிக்கு ஓட்டு போடுவதாக எண்ணிக்கொண்டு ஆர்.எஸ்.எஸ்.சுக்குதான் ஓட்டளிக்கிறார்கள் என்பதைப் புரிய வைத்தார். இதில் ஆர்.எஸ்.எஸ். தேர்தல் அரசியலில் ஈடுபடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு ஆபத்தான போக்கு என்றால், இன்னமும் கொள்கையைச் சொல்லாத இன்னொரு வகை கட்சிகள் இருக்கின்றன என்பதையும் நினைவுபடுத்தினார்.

‘‘சமூக நீதி – சமத்துவம்
இரண்டும் சேர்ந்ததுதான் திராவிடம்!”

தொடர்ந்து, “திராவிடர் இயக்கம் அப்படியல்ல” என்று குறிப்பிட்டு, 1952இல் தொடங்கி இன்று வரையிலான அதன் சாதனைகளை, “தந்தை பெரியார் மனிதநேயத் தத்துவத்தைத் தந்தார்; அறிஞர் அண்ணா அரசியலில் அதற்கொரு அடிக்கட்டுமானத்தை அமைத்தார்; கலைஞர் அதன் மீது கட்டடங்களை எழுப்பினார்; இன்றைய முதலமைச்சர் அதையும் மிஞ்சும் வண்ணம் ஆண்டுகொண்டிருக்கிறார்” என்று தலைமுறைகளைத் தாண்டியும் திராவிடர் இயக்கம் மக்கள் நலப்பணியில் ஈடுபட்டிருப்பதை குறிப்பிட்டார். அடுத்து, ‘திராவிட மாடல்’ அரசுக்கு ஒரு புது விளக்கத்தைத் தந்தார். அதாவது, தந்தை பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாள் என்றும், அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாள் என்றும் நமது முதலமைச்சர் ஆணையிட்டதைக் குறிப்பிட்டு, ‘‘சமூக நீதி – சமத்துவம் இரண்டும் சேர்ந்ததுதான் திராவிடம்” என்றார். ”அதன்படி தான் திராவிட மாடல் ஆட்சி நடைபோடுகிறது” என்று திராவிடர் இயக்கத்தின் கொள்கை வழிப் போக்கை சுட்டிக்காட்டினார்.

“எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும், மக்களின் ஆதரவுடன் மறுபடியும் ‘திராவிட மாடல்’ அரசுதான் வெற்றி பெறப்போகிறது!

அடுத்து அதற்கு நேர் எதிரான ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கை வழிப்போக்கை எடுத்துரைத்தார். அந்த கொள்கை வழிப் போக்கும் ஜாதியைப் பாதுகாப்பதாக உள்ளதை எடுத்துரைத்தார். ‘‘நமக்கு ஜாதி ஒழிந்த சமூகமே குறிக்கோள்” என்பதையும் சேர்த்துச் சொன்னார். ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கை எப்படிப்பட்டது என்பதை சொன்னதோடு நில்லாமல், அதற்கான ஆதாரத்தை, ‘அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்’ எழுதிய, “இந்து மதம் எங்கே போகிறது?’’ என்ற புத்தகத்தை வாசித்துக் காட்டி, “இந்தப் பின்னணியில் தான், பா.ஜ.க. அரசு இந்திய அரசிலமைப்புச் சட்டத்தை காலில் போட்டு மிதிக்கிறது” என்று கடுமையாக விமர்சித்து, தான் சொன்ன கருத்துக்கு மேலும் வலிமை சேர்த்தார். தொடர்ந்த அவர், “ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. வின் ஆட்சியைத் தடுக்கத்தான் ‘திராவிட மாடல்’ ஆட்சி தேவை” என்றார். ‘‘இந்த ஆரிய – திராவிடப் போராட்டப் பின்னணியில்தான், தி.மு.க. அரசு மறுபடியும் வந்துவிடக் கூடாது என்று பல்வேறு சூழ்ச்சி வலைகளைப் பின்னுகின்றனர்” என்றும் குற்றம் சாட்டினார். தொடர்ந்து, ‘மனுதர்மம்’ – ‘இந்திய அரசியல் சட்டம்’ ஆகிய இரண்டு புத்தகங்களைக் காட்டி ‘‘இந்த இரண்டுக்கும்  இடையில் தான் இப்போது போராட்டம்” என்றார் திட்டவட்டமாக. மேலும் அவர், “எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும், மக்களின் ஆதரவுடன் மறுபடியும் ‘திராவிட மாடல்’ அரசுதான் வெற்றி பெறப்போகிறது” என்று கூறி, பலத்த கைதட்டல்களுக்கிடையே தமது உரையை நிறைவு செய்தார்.  நிறைவாக மாவட்ட திராவிட மாணவர் கழகத் தோழர் அண்ணா பெரியார் செல்வன் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை முறைப்படி நிறைவு செய்தார்.

பங்கேற்றோர்

நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில மீனவரணி துணைச் செயலாளர் ஆர். ரவிச்சந்திர இராமவன்னி, மேனாள் நகர் மன்ற துணைத் தலைவர் ஜெகநாதன், சி.பி.எம். மாவட்டச் செயலாளர் குருவேல், மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள், இராமநாதபுரம் வடக்கு நகரச் செயலாளர் ஆர்.கே.கார்மேகம், மண்டபம் ஒன்றிய கழகத் தலைவர் ச.தேவசகாயம், பரமக்குடி நகர கழகத் தலைவர் முத்துராமன் மற்றும் பல்வேறு கட்சிகளின் தோழர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கழகத் தலைவர் தோழர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, அடுத்த நிகழ்வான மானாமதுரை நோக்கி பயணத்தைத் தொடங்கினார்.

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *