பாட்னா, பிப்.18- பாட்னாவில் ‘நீட்’ தேர்வுக்கு தயாரான மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘நீட்’ தேர்வர்களின் தற்கொலை மரணத்தை நாம் இயல்பாக்கி விட்டோம்; பாட்னா சம்பவம் மிகவும் வருத்தத்துக்குரியது” என்று நடிகை டாப்ஸி கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் நடிப்பில் உருவாகி உள்ள ‘அஸ்ஸி’ திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெள்ளித்திரையில் வெளியாக உள்ளது. அனுபவ் சின்ஹா இயக்கி உள்ளார். இதில், கனி ஸ்குருதி, ரேவதி, மனோஜ் பஹ்வா, குமுத் மிஸ்ரா ஆகியோர் நடித்துள்ளனர். இதில் ஊழல் நிறைந்த அமைப்பு மற்றும் ஆணாதிக்கத்துக்கு எதிராகப் போராடும் வழக்குரைஞராக டாப்ஸி நடித்துள்ளார். பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்கும் நீதிமன்ற விவகாரத்தை மய்யக்கருவாக கொண்ட படம் இது என தகவல்.
இந்த சூழலில் பீகார் தலைநகர் பாட்னாவில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு டாப்ஸி பேட்டி அளித்தார். அப்போது நீட் தேர்வுக்கு தயாரான மாணவி ஒருவரின் மரணம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. “இங்கு மட்டுமல்ல – இது மாதிரியான சம்பவங்கள் நாடு முழுவதும் அரங்கேறி வருகிறது. இது எனக்கு மிகுந்த வருத்தம் தருகிறது. இந்த மரணங்களின் எண்ணிக்கை கூடுதலாக கூட இருக்கலாம்.
இப்போது நாம் இதுபோன்ற தற்கொலை மரணங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை நிறுத்திவிட்டோம். அதை நாம் இயல்பாக்கி விட்டோம்; இது மிகவும் வருத்தத்துக்குரியது. ” என்று அவர் தெரிவித்தார். பாட்னாவில் நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவி ஒருவரின் மரணம் சர்ச்சையாகி உள்ள நிலையில் டாப்ஸி இதை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்தும் அவர் இதில் பேசி இருந்தார்.
இடைக்கால பட்ஜெட்
அ.தி.மு.க. விமர்சனத்துக்கு தமிழ்நாடு அரசு பதிலடி
சென்னை, பிப்.18- தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டை மாபெரும் காது குத்தும் விழா என்று அதிமுக விமர்சனம் செய்திருந்தது. அதிமுகவின் இந்த விமர்சனத்திற்கு, புதிய திட்டங்களுக்கு அறிவிப்பு வெளியிடுவது மரபல்ல என்று தமிழ்நாடு அரசு பதிலடி கொடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த அதிமுகவினர், இடைக்கால பட்ஜெட்டை நூதன முறையில் விமர்சனம் செய்திருந்தனர். அதாவது பட்ஜெட் என்ற பெயரில் ‘மாபெரும் காது குத்தும் விழா’ நடைபெற உள்ளது என பத்திரிகை அச்சடித்து அதிமுகவினர் வழங்கினர். அதில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னின்று காது குத்துவார். கடந்த 4.5 ஆண்டுகளைப் போல் இந்த ஆண்டும் வெகுவிமரிசையாக காது குத்தும் விழா. விழாவில் கூவம் சுத்திகரிப்பிற்கு நிதி, சிங்காரச் சென்னை திட்டத்திற்கு நிதி என்று விதவிதமாக காது குத்தப்படும். பின்குறிப்பு: சொத்துவரி, வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் என பல முறைகளில் மொய் வைக்கலாம்” என்றும் அந்த பத்திரிகையில் அச்சிடப்பட்டிருந்தது.
இதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வேளாண்மை, உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டன. பொதுவாக, இடைக்கால நிதிநிலை அறிக்கை என்பது அரசின் சாதனைகளை தெரிவிக்கும் அறிக்கையாக இருக்கும். மேலும், பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் இடைக்கால நிதிக்கு ஒப்புதல் கோரும் அறிக்கையாகவும் இருக்கும்.இதுதான் இதுநாள் வரையில் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபாகும். எனவே, இடைக்கால நிதிநிலை அறிக்கையில், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடுவது மரபு இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட் குறித்து அதிமுகவினர் விமர்சனம் செய்து இருப்பதும், அதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் உடனடியாக பதிலடி கொடுத்தது பேசும் பொருளாகியுள்ளது.
ஒன்றிய பிஜேபி அரசை எதிர்த்து
பிப்.,25 முதல் லாரிகள் வேலைநிறுத்தம்
பிப்.,25 முதல் லாரிகள் வேலைநிறுத்தம்
நாமக்கல், பிப்.18- கனரக வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் புதுப்பித்தல் கட்டணத்தை ரத்து செய்யும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
கனரக வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் புதுப்பிப்பதற்கான கட்டணத்தை ஒன்றிய அரசு 10 மடங்கு உயர்த்தி உள்ளது. 10 முதல் 15 ஆண்டுகள் வாகனங்களுக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் கூடுதல் வரி எனவும்,15 முதல் 20 ஆண்டுகள் வாகனங்களுக்கு 2,500 ரூபாயில் இருந்து 12,500 ரூபாய் ஆகவும்20 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களுக்கு 3,500 ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.இதற்கு லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றனர். இதற்கு எதிராகப் போராடுவது குறித்து ஆலோசித்து வந்தனர்.
இந்நிலையில், கனரக வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்கும் கட்டணத்தை ரத்து செய்யும் வரை பிப்.,25 நள்ளிரவு முதல் தமிழ்நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் அறிவித்து உள்ளனர்.
