நாட்டின் நாலாப் பக்கமும் திரும்பிப் பார்க்கும் வகையில் நான்கு அணிகள் நடத்திடும் மாநில மாநாடு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

 முனைவர் க. அன்பழகன்

திராவிடர் கழகத்தின் மகளிரணி, திராவிட மகளிர் பாசறை – இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் ஆகிய நான்கு ஆற்றல் படைத்த அணிகளின் மாநில மாநாடு தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாய் – தந்தை பெரியாரின் இலட்சிய இயக்கத்தின் இதயமாய் நாடெங்கும் கொள்கைக் குருதியைப் பாய்ச்சிடும் சுயமரியாதை இயக்கத்தின், திராவிடர் கழகத்தின் தளமான தஞ்சை மாநகரில் வருகிற 21.2.2026 சனிக்கிழமை அன்று ஒரு நாள் மாநாடாக நடைபெற உள்ளது.

தமிழ்நாடு மகளிருக்கு வேறு எவருக்கும் இல்லா தனிச் சிறப்பு உலகச் சிறப்பு – அறிவாசான் தந்தை பெரியாருக்கு ‘பெரியார்’ எனும் படத்தை 13.11.1938 அன்று சென்னையில் வழங்கிய சிறப்பாகும்.

மகளிர் உரிமை, மகளிர் விடுதலை, ஆணுக்கு நிகரான சம உரிமை அனைத்தும் வேண்டும் என்று ஆர்ப்பரித்து, போராட்டங்கள் பல கண்டு… ஏன், இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும், அரசியலமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டத்திலும், கருப்பையிலும் – கரத்திலும் குழந்தையை ஏந்தி காராக்கிரகத்தில் அடைபட்ட உலகம் காண போர்க் குணம் எம் மகளிர் அணிக்கே உரிமை படைத்ததாகும்.

அமெரிக்க நாட்டுப் பெண்களுக்கு முன்பே தேர்தலில் வாக்களித்த வரலாறு தமிழ்நாட்டுப் பெண்களுக்கு மட்டுமே உண்டு. அந்த நீதியை வழங்கிய திராவிட இயக்கத்தின் தொடக்ககால அரசியல் கட்சிதான் நீதிக்கட்சி. அதுதான் மகளிர்க்கு நீதி வழங்கிய ஆட்சி.

மகளிர் கல்வி, வேலை வாய்ப்பு, விதவைத் திருமணம், ஜாதி மறுப்புத் திருமணம், மகளிர் சொத்துரிமை என பட்டியல் நீண்டு கொண்டே போகும். திராவிடர் கழகத்தின் கொள்கைகள் – அதற்குக் களம் கண்ட, காணும் கழகத்தின் மகளிரணியினர் உலகெங்கும் பல்வேறு நாடுகளின் பெண்களை வியக்க வைக்கும், பெரியார் கொள்கை பிரசவித்த வீராங்கனைகள்! அவ்வணியோடு திராவிட மகளிர் பாசறையும் இணைந்து மகளிர் உரிமைக்கு  ஓங்கிக் குரல் கொடுக்கும்  மாநாடு பிப்.21 காலையில் தஞ்சையில் நடைபெறவுள்ளது.

அன்று காலையிலும் – மாலையிலும் பகுத்தறிவு – இன எழுச்சி இன்னிசை நிகழ்ச்சிகள் அரங்கத்திற்குள்ளும் – திறந்தவெளியிலும் கொள்கை இசை முழக்கம் உண்டு.

அன்று மாலையில் இன எழுச்சிப் பேரணி இலட்சிய முழக்கத்துடன்  மிடுக்கான இராணுவ அணி வகுப்பு போல இன எழுச்சிப் பேரணி திறந்த வெளி மாநாட்டு மேடையை வந்துடையும்.

அன்று மாலை 6 மணிக்கு திராவிடர் கழக இளைஞரணி திராவிட மாணவர் கழக மாநில மாநாடு.

‘‘எனக்கு இளைஞர்கள்தான் தேவை. நான் இளைஞர்களைத்தான் நம்பியிருக்கிறேன். இளைஞர்களே! சுயநலம் மறந்து போராட வாருங்கள்  – இழிவை ஒழிக்க சாகத்துணிவு கொள்ளுங்கள்!’’ என்றுரைத்த பெரியாரின் ஆணையை முழங்க பெரியார் தந்த தலைவர் தமிழர் தலைவர், மானமிகு ஆசிரியர்   அவர்களால் கூர் தீட்டப்பட்ட தீரமிகு இளைஞர் பட்டாளம் – கிளம்பிற்றுகாண்! தமிழ்ச் சிங்கக் கூட்டம் அது கிழித்தெறியத் தேடுது காண் பகைக்கூட்டத்தை’’ என்றாரே புரட்சிக் கவிஞர் – அதேவேகத்தோடு ஆர்ப்பரிக்கிறது. தமிழர் தலைவரின் ஆணையேற்று மாநில மாநாட்டை இடக்கு செய்யும் வடக்கர் குலை நடுங்கிடச் செய்திட  – தஞ்சை டெல்டாவில் கருங்கடலை காட்டிட கடும் உழைப்பில் நடைபெறவுள்ளது.

திராவிடர் கழகத்தின் இளைஞரணியோடு திராவிட மாணவர் கழகத்தின் மாநில மாநாடும் இணைந்து நடைபெறவுள்ளது.

திராவிட மாணவர் கழகத்திற்கு இயக்கத்தின் தனி முத்திரையும் – பெருஞ்சிறப்பும் உண்டு. ஆம், திராவிடர் கழகம் என்று தந்தை பெரியார் பெயர் வைப்பதற்கு முன்பே உதித்ததுதான் திராவிட மாணவர் கழகம்.

ஓர் அமைப்பு தோன்றிய பின்புதான் போராட்டக் களம் காணும். ஆனால், மாணவர் கழகமோ, போராட்டக் களத்தில் பிறந்திட்ட – புறநானூற்றுக்கு இல்லா வீரத்தழும்புகளுக்குச் சொந்தக்கார  இயக்கம். திராவிட மாணவர் கழகத்தின்  மாநாடு, தமிழ்நாட்டு மாணவர்களின் உரிமை காக்கக் களமாடும் அணியின் மாநில மாநாடு!

ஆக, மேலே கண்ட நான்கு அணிகளின் மாநில மாநாட்டின் தீர்மானங்கள் விரைவில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடி, தொடரும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சட்டங்களுக்கான கருத்துருக்களைத் தாங்கிய தீர்மானங்கள் என்றால் மிகையில்லை.

மிக முக்கியமான கால கட்டத்தில் அவசரமாக ஒரு மாநில மாநாட்டினை நாட்டின் அரசியல் தட்ப வெப்பச் சூழல் அறிந்து, வருமுன் உரைக்கும் – காக்கும் நுண்மான் நுழைபுலம் மிக்க – ஈரோட்டுக் கண் கொண்டு பார்க்கும் இனத் தலைவர் அறிவித்திருக்கிறார்.

நான்கு வர்ணக் கோட்பாட்டைச் சட்டமாக்க இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. தொடர்ந்து முயற்சிக்கிறது. நாட்டை ஸநாதன கோட்டையாக்க அயராது திட்டங்களைத் தீட்டுகிறது.

நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தல் வெறும் அரசியல் தேர்தல் என்றில்லாது, அதை ‘இரண்டு தத்துவங்களுக்கு இடையே நடைபெறும் தேர்தல்’ என்ற வகையில் பார்க்கிறது. அதற்காகத் தகிடுதத்தங்கள் – தாறுமாறான செயல்கள் – சட்ட மீறல்கள் என அத்தனையும் செய்திட பா.ஜ.க. உறுதி கொண்டு செயல்படுகிறது.

‘நடக்க இருக்கும் தேர்தல் மூலம் தமிழ்நாட்டில் காலூன்றிட வேண்டும். திராவிட இயக்க அரசியல் கட்சிகளும் இன்று  ஆளும் மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் செய்யும் திராவிட  இனத்தின் ஆட்சியை வீழ்த்த வேண்டும்’ என்று தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கத் தயாராகி விட்டது.

சித்தாந்த அடிப்படையில் பார்க்கும் தமிழர் தலைவரின் பார்வை, வெறும் அரசியல் பார்வை அல்ல. அது அய்யா பெரியாரின் கொள்கைக் கண் கொண்டு பார்க்கும் பார்வை. எனவேதான் ‘திராவிட மாடல்’ ஆட்சிஏன் தொடர வேண்டும் என

‘‘இதுதான் – ஆர்.எஸ்.எஸ். – ‘பா.ஜ.க. ஆட்சி’

இதுதான் – திராவிடம் – ‘திராவிட மாடல் ஆட்சி’

சில மாதங்களுக்கு முன்பு பிரச்சாரப் பயணம் மேற்கொண்டார்.

தேர்தலில் களம் காண்போர் இடையே இன்னும் அணிகள் முடிவாகவில்லை. ஆனால், நாம் பா.ஜ.க. ஒன்றியத்தில் ஆட்சி அமைத்த நாளிலிருந்தே திராவிடர் இன மக்களுக்கு அதன் ஆபத்தைக் கூறி வந்துள்ளோம்.

‘இந்தியா ஒரே நாடு’ என்று மோடி கூறியவுடன் மாண்புமிகு, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ‘இந்திய ஒன்றியம்’ என்றார். ‘ஒன்றியம் என்ற சொல்லே ‘ஒரே மொழி, ஒரே நாடு’ என்ற மோடியின் கனவில் கல்லைப் போட்டது.

ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கொடி என்றார் மோடி. தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அவர்கள், ‘‘மோடி அவர்களே அதோடு இன்னொன் றையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதுதான் ‘ஒரே ஜாதி!

சொல்லத் தெம்பிருக்கிறதா உங்களுக்கு?’ என்று கேள்வி எழுப்பினார். சப்த நாடியும் மோடிக்கு ஜன்னி கொண்டு அடங்கி விட்டது.

திராவிடர் கழகத்தின் மாநில மாநாடு சமூகநீதிக்கு எதிரான திட்டங்களை எதிர்த்தழித்திட, கல்வியைப் பார்ப்பனரல்லாதார்க்கு கிடைக்காமல் செய்யத் துடிக்கும் ‘நீட்’ போன்ற தொடரும் பல தேர்வுகளின் வாலை ஒட்ட வெட்டிட, மாநிலங்களின் உரிமையை மீட்டிட, ஆளுநரின் போட்டி ஆட்சி நடத்தும் போக்கிக்கு முற்றுப்புள்ளிவைத்திட, ஹிந்தியைத் திணித்து சமஸ்கிருதத்தைச் சட்டாம்பிள்ளை ஆக்கி திராவிடர் இனத்தின் பண்பாட்டைச் சிதைக்கச் செய்யும் சதியை வென்றிட, தொல்லியல் துறை தோண்டி எடுத்த தொன்மைகளை நிலைநாட்டிட, இதற்கெல்லாம் பெருவாய்ப்பாய், இந்திய ஒன்றியத்தில் மாநில உரிமை காட்டும்  காப்பரணாய் ஏற்கத்தக்க திராவிடமாடல் ஆட்சியைக் காத்து தொடரச் செய்ய – அரசியல் களத்தில் இன எதிரியை சித்தாந்த ரீதியாகவும் – ஆட்சி ரீதியாகவும் இராஜ தந்திர அறிவோடும் வெற்றிகளைக் குவித்திடும் மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு அரணாய் நின்று களத்தில் இனப் பகையை எதிர் கொள்ள தந்தை பெரியார் தந்த தலைவர் – தமிழர் தலைவர் ஆணைப்படி தஞ்சையில்  நெஞ்சை அள்ளும் மாநாடு இது!

மாநாட்டில் தமிழ்நாட்டின் அமைச்சர் பெரு மக்கள் மேனாள் இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்துரை நல்க இருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா எம்.பி., கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளார்.

கழக மாநில மாநாட்டில் தமிழர் தலைவர், கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் அவர்கள் நிறைவுரை ஆற்றிட உள்ளார்கள்.

மாநாட்டுப் பணிகள் மும்முரமாய் நடக்கின்றன. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் (கழக மாவட்டங்கள் உள்பட) பேருந்துகளில் கழகத் தோழர்கள் வருகை தருவதற்கான ஏற்பாட்டுப் பணிகளைப் பொறுப்பாளர்கள் திட்டமிடுகிறார்கள்.

கழகத் தோழர்கள் என்றும் போல் குடும்பம் குடும்பமாக வருவதற்கு உரிய ஏற்பாடுகள் மாநாட்டுக் குழுவினரால் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

நடைபெறும் திராவிடர் கழகத்தின் மாநில மாநாடு மனுதர்ம ஒன்றிய ஆட்சியை வீழ்த்திட நடக்கும் சித்தாந்த மாநாடாகும்.

தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ ஆட்சி தொடர.. மீண்டும் தொடர… மீண்டும் மீண்டும் தொடர… என்றும் தொடர்ந்திட… அடித்தளமிடும் இனம் காக்கும் மாநாடு!

தமிழர் தலைவர் – அசுர குலத் தலைவர் – மானமிகு ஆசிரியர் அழைக்கிறார். தஞ்சையில் கழகத்தின் கொடியேந்தி தலைவரைச் சந்திப்போம் – புதிய சரித்திரம் படைப்போம்!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *