சென்னை, பிப். 17- ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள ‘விக்சித் பாரத் ஜி ராம் ஜி’ (Viksit Bharat Ji Ram Ji) ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரியும், அதன் அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்குரைஞர் சிவஞானசம்பந்தன் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
பங்களிப்பு மாற்றம்:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒன்றிய அரசு 90 சதவீதம் நிதி வழங்கி வந்த நிலையில், புதிய திட்டத்தில் அதை 60 சதவீதமாகக் குறைத்துள்ளது. மாநில அரசுகளின் பங்களிப்பை 10 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இமாச்சலப் பிரதேசத்திற்கு 100 சதவீத நிதியை ஒன்றிய அரசே வழங்குகிறது. யூனியன் பிரதேசங்களுக்கும் சட்ட வரையறை இன்றி முழு நிதி வழங்கப்படுகிறது. இது மற்ற மாநிலங்களுக்கு இழைக்கப்படும் பாரபட்சம் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டிற்கு ஒதுக்கப்பட்ட ரூ.1,51,282 கோடி என்பது போதுமானதல்ல. 125 நாட்கள் வேலை வழங்க வேண்டிய நிலையில், இந்த நிதி 50 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்.
இத்திட்டத்தின் மூலம் ஏற்கெனவே கிராம சபாக்களுக்கு வழங்கப்பட்டிருந்த உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. இது பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கும், அரசியலமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானது.
மனுதாரரின் கோரிக்கை
“மக்களின் அடிப்படை உரிமையுடன் இணைந்த இத்தகைய திட்டங்களை திரும்பப் பெறவோ அல்லது முடக்கவோ முடியாது. எனவே, கடந்த டிசம்பர் 21ஆம் தேதி வெளியான இத்திட்டத்திற்கான அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் மற்றும் இத்திட்டத்தை அமல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
