ஆதி திராவிடர் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக் கலைப் பயிற்சி சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப். 16- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்குத் தாட்கோ மூலம் அழகுக்கலை பயிற்சி வழங்கப்பட உள்ளதாக, சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில், தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை மற்றும் அழகுக்கலை பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

இப்பயிற்சிக் காலம் 90 நாட்கள் ஆகும். ராணிப்பேட்டை மற்றும் கோவை மாவட்டங்களில் இப்பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியில் சேர 8ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயின்ற, 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

பயிற்சியின் போது தங்கும் வசதி மற்றும் உணவு உள்ளிட்ட செலவினங்களைத் தாட்கோவே ஏற்கும். பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களுக்கு, பயிற்சி அளித்த நிறுவனத்தின் மூலமாகவே ரூ. 18,000 முதல் ரூ. 25,000 வரை ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பைப் பெற வழிவகை செய்யப்படும். தகுதியுள்ள நபர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.

 

தனிப் படைக் காவலரைத் தாக்கிய

பிஜேபி – தேமுதிக நிர்வாகிகள் அய்ந்து பேர் கைது!

சென்னை, பிப். 16- காவலரைத் தாக்கியதாக பாஜக – தேமுதிக நிர்வாகிகள் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நுங்கம்பாக்கம் ஜெகநாதன் சாலையில் உள்ள ஒரு தனியார் மதுபான பார், நேற்று முன்தினம் (14.2.2026)இரவு 11 மணியைத் தாண்டியும் செயல்பட்டுக் கொண்டிருந்தது.

அப்போது, அங்கு ரோந்துப் பணியில் இருந்த திருவல்லிக்கேணி துணை ஆணையரின் தனிப்படை காவலர் சலீம், மதுபான பாரை உடனடியாக மூடும்படி கூறியுள்ளார். மேலும், பாரினுள் மது அருந்திக் கொண்டிருந்த 5 நபர்களையும் வெளியே வரும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், சலீமுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர்கள் சலீமைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சலீம், இதுகுறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரையும் உடனடியாகக் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், குன்றத்தூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஜெகநாதன் (51), அனகாபுத்தூரைச் சேர்ந்த தேமுதிக நிர்வாகி மகாதேவன் (56) மற்றும் தனசேகர் (52), ரவி (50), சரவணன் (50) என்பது தெரியவந்தது. கைதானவர்களிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு அலுவலகங்களின் மேற்கூரைகளில் மின் தகடுகள் பொருத்தும் பணி தீவிரம்!

சூரிய மின் உற்பத்தி விரைவில் தொடங்கும்!

சென்னை, பிப்.16- தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களின் மேற்கூரையில் சூரிய மின் தகடுகள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. மின் உற்பத்தி விரைவில் தொடங்கும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், மின் செலவைக் குறைக்கும் நோக்கிலும் தமிழ்நாட்டில் உள்ள அரசுக் கட்டடங்களில் சூரிய மின்சக்தி உற்பத்தித் திட்டத்தைத் தமிழ்நாடு மின் வாரியம் தொடங்கியது. மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள், ஆட்சியர் அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள், அரசுப் பள்ளிகள், கல்லூரிகளின் மேற்கூரையில் சூரிய மின் தகடுகள் (சோலார் பேனல்) அமைக்க முடிவு செய்து, அதற்கான பணிகளில் பசுமை எரிசக்தி கழகம் ஈடுபட்டு வருகிறது.

கடந்த ஆண்டு இதற்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்ட நிலையில், ஒப்பந்தப் பணிகள் முடிந்து, சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

“மேற்கூரை சூரிய மின்சக்தி திட்டம் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகக் கட்டடங்களின் மேற்கூரையில் சூரிய மின் தகடுகள் அமைக்க ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தை மேற்கொள்ளத் தகுதி வாய்ந்த கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து, கட்டடங்களில் சூரிய ஒளி மின் உற்பத்திக்கான பணிகளை ஒப்பந்த நிறுவனங்கள் செய்து வருகின்றன. உற்பத்தியாகும் மின்சாரத்தில், அலுவலகத்துக்கான பயன்பாடு போக, மீதமுள்ள மின்சாரத்தைத் தமிழ்நாடு மின் வாரியம் கொள்முதல் செய்யும்.

இத்திட்டத்தில் மருத்துவமனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப் படுகிறது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. பணிகளை விரைவில் முடித்து மின் உற்பத்தி தொடங்கப்படும்.” இவ்வாறு அவர்கள் கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *