மும்பை, பிப்.16- மகாராட்டிராவில் ஜாதிய கொடுமையால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் ஜாதிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றனர். ‘இனி யாரும் ஜாதியை பின்பற்றக்கூடாது’ என்று தெரிவித்துள்ளனர்.
ஜாதிக்கு எதிராக திரண்ட மக்கள்
ஜாதிப்பிரச்னை நாடு முழுவதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஏதாவது ஒரு வகையில் மக்கள் ஜாதிப் பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர். காதல் திருமணங்கள்தான் இதில் அதிக அளவில் ஜாதிப் பிரச்சினையை சந்திக்கின்றன.
மகாராட்டிரா மாநிலத்தில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து ஜாதிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றனர். அங்குள்ள அகில்யா நகர் மாவட்டம் ஒரு காலத்தில் ஜாதிக் கலவரத்தால் மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தது.
இந்த மாவட்டத்தில் ‘ஆணவக் கொலை’ என்ற பெயரில் பட்டியல் இன மக்கள் அதிக அளவில் கொலை செய்யப்பட்டுள்ளனர். 2013ஆம் ஆண்டு சோனாய் என்ற கிராமத்தில் மூன்று பேரும், 2014ஆம் ஆண்டு ஜாவ்கேடே என்ற இடத்தில் மூன்று பேரும் கொலை செய்யப்பட்டனர்.
அப்படிப்பட்ட மாவட்டத்தில் உள்ள சவுண்டாலா என்ற கிராமம் இப்போது ஒட்டுமொத்த ஜாதியில் இருந்து விடுதலை பெற்று இருக்கிறது.
இக்கிராமத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பஞ்சாயத்து தலைவராகி இருக்கும் சரத்ராவ் இக்கிராம பஞ்சாயத்தை கூட்டி ஜாதிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்.
சரத்ராவ்
இக்கூட்டத்தில் ஒட்டுமொத்த கிராம மக்களும் கூடி இருந்தனர். அவர்கள் மத்தியில் பேசிய சரத்ராவ், ”நமது ரத்தம் பச்சையோ அல்லது ஊதாவோ கிடையாது. அனைவருக்கும் ரத்தம் சிவப்புதான். ஒரு முறை இரண்டு ரத்தம் ஒன்றாக கலந்து விட்டால் அதனை தனியாக பிரிக்க முடியாது” என்று கூறினார்.
அதோடு கிராமத்தை ஜாதியில்லாத கிராமமாக மாற்றும் தீர்மானத்தை சரத்ராவ் கொண்டு வந்தார். இத்தீர்மானத்திற்கு அங்கு கூடியிருந்த அனைத்து ஜாதியினரும் ஆதரவாக வாக்களித்தனர். இதனால் இது ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
“இனிமேல் சவுண்டாலா கிராமத்தில், யாரும் ஜாதியைப் பின்பற்றவோ அல்லது எந்த வகையான ஜாதி நடைமுறைகளிலும் ஈடுபடவோ மாட்டார்கள். மாறாக, கிராமவாசிகள் பின்பற்றும் ஒரே மதம் மனிதநேயம் மட்டுமே” என்று அத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தீர்மானம் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை மய்யமாகக் கொண்டிருந்தது. சவுண்டாலா கிராமத்தில் ஜாதி, மதம், இனம் அல்லது பரம்பரை அடிப்படையில் எந்த பாகுபாடும் இருக்காது என்றும், அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள் என்றும் அத்தீர்மானத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
அரசு சேவைகள், நீர் ஆதாரங்கள், கோயில்கள், தகன மைதானங்கள், பள்ளிகள் மற்றும் சமூக விழாக்கள் உட்பட அனைத்து பொது இடங்கள், விழாக்களில் பாகுபாடு இல்லாமல் அனைவரும் பங்கேற்கலாம்.
இது குறித்து சரத்ராவ் கூறுகையில், “எங்களது கிராமத்திலும் ஜாதி வன்முறை சம்பவங்கள் நடந்திருக்கிறது. வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கூட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் கிராம மக்களிடையே சமூக விழிப்புணர்வு தீவிரமடைந்ததால், வழக்குகள் மிகவும் குறைந்துவிட்டன. இன்று, மக்கள் ஒருவருக்கொருவர் வீட்டிற்குச் செல்வதையும், விழாக்களில் கலந்துகொள்வதையும், கஷ்டமான நேரத்தில் ஒருவருக்கொருவர் ஆதரவாக நிற்பதையும் காணமுடிகிறது,” என்று அவர் கூறுகிறார்.
கிராமத்தில் கலப்புத்திருமணம் நடந்திருக்கிறதா என்று சரத்ராவிடம் கேட்டதற்கு, ”இது வரை அது போன்ற திருமணங்கள் நடக்கவில்லை. ஆனால் இப்போது நிறைவேற்றப்பட்டு இருக்கும் தீர்மானம் அது போன்ற திருமணங்களை மக்களிடையே ஊக்கப்படுத்தும். ஜாதிக்கு எதிராக நிறைவேற்றப்பட்டு இருக்கும் தீர்மானத்திற்கு எதிராக செயல்படுபவர்களிடம் அபராதம் விதிக்கப்படும்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
மக்கள் இங்கு தொடர்ந்து வாழ விரும்பினால், அவர்கள் விதிகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். மேலும் இந்த விதிகள் எந்த வகையிலும் நாட்டின் சட்டம் மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான கிடையாது. எனவே, அதை செயல்படுத்துவது கடினம் அல்ல”என்றார்.
ஜாதி தடையை யாராவது மீறுகிறார் களா என்பதை கண்காணிக்க கிராமத்தில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஜாதியில் இருந்து விடுபடுவது தொடர்பான தீர்மானம் மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று பஞ்சாயத்து தலைவர் சரத்ராவ் தெரிவித்தார்.
சவுண்டாலா கிராமம் சமூக விழிப்புணர்வு தீர்மானத்தை நிறைவேற்றுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு, பாலின பாகுபாட்டிற்கு எதிராகபல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
குழந்தை திருமணத்தை தடை செய்தல், கைம்பெண் பெண்களின் மறுமணத்தை அனுமதித்தல், குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணைக்கு எதிரான நடவடிக்கை, பெண்கள் உயர்கல்வியைத் தொடர்வதை உறுதி செய்தல் மற்றும் கிராமத்தில் அரசியல் மற்றும் சமூக நடவடிக்கைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல் ஆகியவை கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள் ஆகும்.
