குடியேற்றம், பிப்.15–- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 12.02.2026 அன்று, குடியேற்றம், குரு ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் “போதையில்லா சமுதாயம் உருவாக்குவோம்” கருத்தரங்கம், வேலூர் மாவட்ட மனநல திட்டம், அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த கருத்தரங்கத்திற்கு வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் பி.தனபால் தலைமையேற்றார்.
கல்லூரியின் முதல்வர் வி.திருமலை அனைவரையும் வரவேற்றார்.
நகர கழக தலைவர் சி.சாந்தகுமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.வேலூர் மாவட்ட கழக தலைவர் வி.இ.சிவக்குமார்,திராவிடர் கழக மகளிர் அணி மாநில துணைச் செயலாளர் ந. தேன்மொழி,மாவட்ட காப்பாளர் வி.சடகோபன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இர.அன்பரசன் ஆற்றிய நோக்க உரையில், “மாணவ, மாணவிகள் பாலின சமத்துவத்தை புரிந்துக் கொள்ள வேண்டும். எந்த கருத்தையும் அறிவியல் துணையோடு அணுகி மெய்ப்பொருள் காண வேண்டும். தந்தை பெரியார் அவர்கள் எழுதிய பெண் ஏன் அடிமையானாள்? புத்தகத்தை மாணவர்கள் பயின்று பெண்ணடிமை இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும்” என்றுகூறினார்.இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட வேலூர் மாவட்ட மனநல மருத்துவர், அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை மருத்துவர் ப.சிவாஜி ராவ் ஆற்றிய சிறப்புரையில் மனித சமூகத்தைச் சீர்கெடுப்பதில் போதைப்பொருள் உபயோகம் முதலிடம் வகிக்கிறது. போதைப்பொருள் பயன்பாடு மனித அறிவை மழுங்கச் செய்து சிந்திக்கும் திறனை அழித்து குடும்பம், சமூகத்தை தவறான பாதையில் இழுத்துச் சென்று விடும்.போதைப் பொருள் பயன் படுத்துபவர்களில் மூன்றில் ஒருவர் பெண் என்பது வேதனைக்குரிய அதிர்ச்சித் தகவல். போதைக்கு அடிமையாவோரில் 85 விழுக்காடு படித்தவர்கள். அதில் 75 விழுக்காடு இளைஞர்கள் ஆவர்.மது, சிகரெட் ஆகியவை முதலில் வழிகெடுத்து பிறகு அதையும் தாண்டி கஞ்சா, கொகைன், பிரவுன் சுகர், ஹெராயின், அபின், புகையிலை, ஒயிட்னர் ஆகியவைகள் மனிதனை அழிக்கும்.ஆகவே மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகும் சூழலைத் தவிர்த்து ஆரோக்கியமான உடல் மற்றும் சமூகத்தை உருவாக்க துணை நிற்க வேண்டும் என்று குறிப்பிட்டார். கருத்தரங்கில் இரு பால் கல்லூரி ஆசிரியர்கள், மருத்துவ உதவியாளர்கள்
மற்றும் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன் பெற்றனர்.முடிவில் இயந்திரவியல் துறைத் தலைவர் வி.வீரமணி நன்றி உரையாற்றினார்.
