| வ |
ருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி தஞ்சையிலே நான்கு மிகப்பெரும் மாநாடுகள் நடக்கவிருக்கின்றன. காலையிலே திராவிடர் கழக மகளிர் அணி திராவிட மகளிர் பாசறை மாநாடுகள், மாலையிலே மிகப்பிரமாண்ட பேரணி, அதன் பிறகு மாலையிலே திராவிடர் கழக மாணவர் அணி, இளைஞர் அணி மாநாடு. இந்த மாநாடுகள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளே!
அதிலும் குறிப்பாக இன்றைக்கு ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற ஆட்சியை, மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியை எப்படியாவது மீண்டும் வரவிடாமல் செய்வதற்காக கொல்லைப்புற வழிகளிலே மத்தியில் ஆளும் ஒன்றிய பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது. இது ஆரியர்-திராவிடர் போர் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஆகவே தான் மிக முக்கியமான காலகட்டத்தில் இந்த மாநாடுகளை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். நிச்சயமாக இந்த மாநாடுகள் மிகப்பெரும் வெற்றி மாநாடுகளாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்!
தஞ்சை மாநகரம் பல திராவிடர் கழக மாநாடுகளை சந்தித்து இருக்கிறது. 3.11.1957 ஆம் ஆண்டு முதல் ஜாதி ஒழிப்பு மாநாடு தந்தை பெரியார் தலைமையில் தஞ்சாவூரிலே நடைபெற்றது. அந்த மாநாட்டில் தான் ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப்பிரிவு(25,26) அகற்ற வேண்டும் இல்லையேல் அதைக் கொளுத்துவேன் என்று அறைகூவல் விடுத்து, சட்ட எரிப்புப் போராட்டத்தை அறிவிக்கிறார். அந்தப் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்று ஆயிரக்கணக்கான தோழர்கள், குறிப்பாக அதிக அளவில் பெண்கள், அதிலும் சிலர் கர்ப்பிணிகளாக சிறை சென்றனர். அப்பேர்ப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க மாநாடுகள் நடைபெற்ற ஊர் தான் தஞ்சாவூர்.
இப்படி திராவிடர்கழகம் நடத்துகிற ஒவ்வொரு மாநாட்டிலும் மிகப்பெரிய ஆளுமைகள் பல பேர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கியிருகிறார்கள். முக்கியத் துவம் வாய்ந்த கருத்துகள் பேசு பொருளாகி இருக்கின்றன. அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதிர்காலத்தில் அரசு திட்டங் களாகவும், அரசு ஆணைகளாகவும் வெளி வந்திருக்கின்றன.
அதேபோலத்தான் இந்த மாநாடுகளும் சிறப்பு வாய்ந்தவைகளாக அமையப் போகின்றன. நாம் பேசப்போகின்ற கருத்துகளும், முன்மொழி யப் போகின்ற தீர்மானங்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக இருக்கப் போகின்றன. அது எதிர்காலத்தில் சமூகநீதியை நிலைநாட்டுவதற்கும், தேர்தலில் ‘திராவிட மாடல்’ ஆட்சி மீண்டும் மலர்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையப்போகிறது.
தந்தை பெரியார் அவர்கள் திராவிடர் கழகம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே தஞ்சாவூர் என்பது, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்த பொழுது, அது திராவிடர் கழகத்தின் கோட்டையாக இருந்தது. இன்று பிரிந்து பல மாவட்டங்களாக ஆனாலும் இன்றும் அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதை நாம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டாமா? ஆகவே கழக குடும்பங்களே, மகளிர் அணி தோழர்களேர், இளைஞரணி மாணவர் கழகத் தோழர்களே அனைவரும் குடும்பம் குடும்பமாக அணிதிரண்டு மாநாட்டிற்கு வர வேண்டும்-வருவோம்! நமது தமிழர் தலைவர் அவர்கள் இந்த 93 வயதிலும், உயிரையும் உடல் நலத்தையும் விலையாக வைத்து தமிழ்நாடு எங்கும் சுற்றுப்பயணம் செய்து பரப்புரைகளை செய்து வருகிறார்கள். இன்றைக்கு தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் அத்தனைப் பிரச்சினைகளுக்கும் உடனடியாக கண்டன அறிக்கைகளை எழுதுகிறார், போராட்டங்களை அறிவிக்கிறார், ஆர்ப்பாட்டங்களை முன்னின்று நடத்துகிறார். பொதுக் கூட்டங்கள் மாநாடுகள் நடத்தி பல ஆளுமைகளை வரவழைத்து தமிழ்நாட்டின் பிரச்சனைக்காக முதல் மாவீரராக ஓங்கி குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
மீண்டும் தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி அமைவதற்கும் மானமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் மீண்டும் முதல்வராவதற்கும், தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் சார்பிலே, நம் தமிழர் தலைவர் முன்னெடுக்கும் அனைத்து விதமான கட்டளைகளுக்கும் நாம் தயாராக இருந்து நாம் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது நமது கடமையாகும்.
இன்றைக்கு மத்தியிலே ஆளுகிற ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டிலே ஏதாவது தில்லு முல்லு செய்து கால் பதிக்க வேண்டும் என கனவு காண்கிறது. குறைந்த பட்சம் அவர்கள் சொல்லுகிற படி எல்லாம் ஆடுகிற கட்சிகளை முன்னிறுத்தி, திமுக ஆட்சியை அகற்றுவதற்கு முழு முயற்சி எடுத்து வருகிறது. ஆனால் வெகு மக்களோ அதனை முறியடிப்பார்கள்! நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மக்களை அன்றாடம் சந்தித்துக் கொண்டே தான் இருக்கிறார்.
நம் திராவிடர் கழக மாநாடுகள் என்றாலே குடும்பம் குடும்பமாக கலந்து கொள்வது தான் எப்போதுமே வழக்கம். அதேபோல இந்த மாநாட்டிற்கும் அனைவரும் அவசியம் குடும்பம் குடும்பமாக கலந்து கொள்ள வேண்டும், அதிலும் குறிப்பாக மகளிர் அணி தோழர்கள் மிக அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும். நமக்கு வேறு திருவிழாக்கள் கிடையாது. நமது மாநாடுகள் தான் நமக்கு திருவிழா. நாம் எவ்வளவுக்கெவ்வளவு அதிக அளவில் கலந்து கொள்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உற்சாகம் அடைவார்கள். அணி திரண்டு வாருங்கள் தோழர்களே. தஞ்சை நகரமே கருப்பு உடைகளால் நிரம்பி வழியட்டும். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி மலர வழிவகுக்கும் திருப்பு முனை மாநாடாகவும் அமையட்டும்!
வி.கே. ஆர். பெரியார் செல்வி
திராவிடர் கழக மகளிரணி மாநில துணைச்செயலாளர்
