புதுடில்லி, பிப்.14 மணிப்பூரில் கடந்த 2023-ஆம் ஆண்டு குகி- மெய்தி ஆகிய இரண்டு சமூகத்தினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்தது. 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
ஆயிரக்கணக்கான வீடுகள் தீ வைத்து கொழுத்தப்பட்டன. மக்கள் சொந்த வீடுகளை இழந்து அண்டை மாநிலங்களுக்கும், முகாம்களுக்கும் தப்பி ஓடினர். இந்த வன்முறை தொடர்பாக 11 வழக்குகளை சிபிஅய் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் நேற்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான நீதிபதி ஜாய்மால்யா பாக்சி கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, “11 எப்.அய்.ஆர். தொடர்பாக விசாரணையின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டனர்.
மேலும், நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான கமிட்டி பரிந்துரை செய்த மறுவாழ்வு மற்றும் நலத்திட்டம் ஆகியவற்றை அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநில மற்றும் ஒன்றிய அரசை கேட்டுக்கொண்டனர்.
அத்துடன் வழக்கை வருகிற 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
‘வந்தே மாதரம்’ தொடர்பான
ஒன்றிய அரசின் உத்தரவு
வந்தே மாதரம் தொடர்பான ஒன்றிய அரசின் உத்தரவு, அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது, மத சுதந்திரத்துக்கு எதிரானது என்று அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்க மொழியில் எழுதப்பட்டுள்ள வந்தே மாதரம் பாடலில் துர்கா மற்றும் பிற கடவுள்களை வழிபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் அல்லா ஒருவரையே வழிபடுவர் என்பதால் அந்த அறிவிக்கையை ஒன்றிய அரசு திரும்பப் பெறும்படி கேட்டுக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் பொருளாதாரம்?
பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
ரூ.7 லட்சம் கோடி இழப்பு
அய்டி பங்குகளின் மதிப்பு சரிவால் இந்திய பங்குச்சந்தைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. சென்செக்ஸ் 1,048 புள்ளிகள் சரிந்து 82,626 புள்ளிகளிலும், நிஃப்டி 336 புள்ளிகள் சரிந்து 25,471 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. குறிப்பாக டாடா ஸ்டீல், டைட்டன் நிறுவன பங்குகள் பெரும் இழப்பைச் சந்தித்தன. இதனால், முதலீட்டாளர்கள் சுமார் ரூ.7 லட்சம் கோடி வரை இழந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.
