திருவாங்கூர் சமஸ்தானம் (21) ‘‘மனிதத் துயரங்களும், மாறாத வடுக்களும்!’’ – மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி

7 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நாராயண குரு கடவுளைத் தொழுவதிலோ, ஜாதிய அடிமை முறையை ஒழிப்பதில் மட்டும் தீவிர கவனம் செலுத்தியதோடு மட்டும் நிற்கவில்லை. மூடநம்பிக்கைகளை ஒழிப்பதிலும் அதிக கவனம் செலுத்தினார். மூட நம்பிக்கைகளை ஒழித்துக் கட்ட வேண்டுமென்றால், ‘கல்வி’ முக்கியத் தேவை என்று பரப்புரை ஆற்றினார். அர்த்தமற்ற வீணான சடங்குகளைக் கடுமையாகச் சாடினார். திருமணங்களை ஆடம்பரமாக நடத்தாமல், எளிமையாக நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். திருமணத்தின்பொழுது மாலை மாற்றிக் கொண்டு, தாலி அணிவித்தால் போதுமானது. மற்ற சடங்குகள் தேவையற்றவை என்றார். கணவன் ஒழுக்கமற்றவனாகவும், கொடுமைக்காரனாகவும் இருந்தால், திருமண உறவை முறித்துக் கொண்டு விவாகரத்து செய்து விடலாம் என்பது அவர் கருத்தாக இருந்தது.

“கணவன் இறந்த பின்னோ, விவாகரத்து செய்த பின்னோ தாலியை அகற்றிவிட வேண்டும்” என்றார். “அவன் அடையாளம் ஏதும் அந்தப் பெண்ணிடம் இருக்கவே கூடாது” என்றார். “ஒரு ஆண் பல பெண்களோடு உறவு கொள்வதோ, ஒரு பெண் பல ஆண்களோடு உறவு கொள்ளும் ‘சம்பந்தம்’ திருமண முறை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்” என்றார். “குடும்பச் சொத்தை அனைவரும் சமமாக பங்கிட்டுக் கொள்ள வேண்டும். அதில் ஆண், பெண் என்ற பேதம் கூடாது – பெண்களுக்கும் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும்” என்றார்.

கட்டுரை, ஞாயிறு மலர்

“இதுதான் குடும்ப வாழ்க்கை என்பதற்குச் சரியான அர்த்தமாகும். இதை ஒவ்வொரு குடும்பமும் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால், அது குடும்பமே இல்லை” என்றார். “பெண்களுக்குக் கட்டாயம் கல்வியையும், பொருளாதார சுதந்திரத்தையும் கொடுத்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும்” என்றார். “இவை அவர்களுக்குக் கிடைத்து விட்டால் சமூகத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட இழிவுகள் துடைக்கப்பட்டுவிடும்” என்றார்.

திருவாங்கூர் நாட்டில், பெண்கள் (அந்தர்ஜனம் உட்பட) சமூக சட்டங்களால் மிகவும் கேவலமாக நடத்தப்பட்ட ஒரு காலக்கட்டத்தில் பெண்ணுரிமைகளைப் பற்றி புரட்சிகரமான கருத்துகளை முன்னெடுத்து, அந்தக் கருத்துகளைத் துணிவாகப் பரப்பியவர் நாராயண குரு அவர்கள்தான்!

யோகம் மூன்று என்ற சொன்னதோடு மட்டுமல்லாது, அவற்றை செயலிலும் காட்டினார். முதல் யோகமான ‘கல்வி’. கல்வியில் இன்று கேரள நாட்டிலேயே முதன்மை மாநிலமாக விளங்க ஆரம்ப விதையைப் போட்டவர் நாராயண குரு அவர்கள்தான். ஈழவ மக்கள் இன்று கல்வியில் சிறந்து விளங்க அடிப்படையான காரணகர்த்தா அவர்தான். அவருடைய சீடர்கள் அவர் அறிவுரையை ஏற்று பல கல்விக் கூடங்களை நிறுவினர். இன்று அவையெல்லாம் பெருமளவில் வளர்ந்து, கல்லூரிகளாகவும், பல்கலைக்கழகங்களாகவும் பரிமளித்து கல்வி அறப்பணியை வழங்கி வருகின்றன.

அதேபோல் யோகம் 2, யோகம் 3 கூறுவது போல் உழைப்பு, உற்பத்தி. பொருளீட்டல் ஆகியவற்றின் வளர்ச்சி கேரளாவில் குறிப்பிடும் அளவு இன்று வளர்ந்துள்ளது என்றால் அதற்கும் நாராயணகுரு அவர்கள்தான் காரணம். இன்று தென்னை மரங்கள் அதிகம் இருக்கும் கேரளாவில் கயிறு தயாரிக்கும் தொழில், ஓடுகள் தயாரிக்கும் தொழில், கடற்கரை மேற்குக் கேரளா முழுவதும் மீன் தொழில்கள் ஆகியவை வளர்ச்சியடைந்து, மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு நாராயண குருவின் ஆரம்ப கால தூண்டுதலே காரணம். அவர் சொன்ன யோகங்களால் கேரளா முன்னேறியது.

இம்மாமனிதர் இந்த அளவிற்கு விழிப்புணர்வை, நம்பூதிரிப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில், அதிகாரத்தில் இருந்த நாட்டில் அடிமை மக்களிடம் விதைத்து, வெற்றி பெற்றார் என்றால், அவர் எவ்வளவு தொல்லைகளை சந்தித்திருக்க வேண்டும். அறிவு வளர்ச்சியில்லாமல், அடிமைகளாகவே ஆண்டாண்டுகளாக இருந்த மக்களை, அவர் களுக்கு இருந்த தடைகள் என்ற சங்கிலிகளை அகற்றி, அவர்களை மானமும், அறிவும் உடையவர்களாக மாற்றி, தனி மனிதராக ஒரு பெரும் புரட்சியையே செய்தவர் நாராயண குரு அவர்கள். ஜாதிய கொடுமை களைக் களைவதே அவர் முதல் நோக்கம். அந்த ஜாதியை அடிப்படையாக வைத்து ஜாதிய சட்டங்களைப் போட்டு மக்களிடம் காணாமை, தீண்டாமை, கல்லாமை புகுத்தி கொட்டமடித்த ஆதிக்கவாதிகளின் ஆட்டத்தை அடக்கியவர் அவர்.

‘வைக்கம் போராட்டம்’ பற்றி திருவாங்கூர் அரசி சேதுலட்சுமி பாயை சந்திக்க திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு 12.3.1925இல் காந்தியார் வந்தார். அரசியை சந்தித்த பின் காந்தியார், கேரளாவின் வர்கலாவில் உள்ள சிவகிரி ஆசிரமத்திற்கு வந்தார். அவரோடு தந்தை பெரியார், ராஜகோபாலாச்சாரி, மகாதேவன் தேசாய், மன்னத்து பத்மநாபன் ஆகியோர் சென்றனர். நாராயண குரு அவர்களை வரவேற்றார். அந்த சந்திப்பு காந்தியாரின் தியாக வாழ்க்கையின் போக்கையே மாற்றியது.

அதுவரை பார்ப்பனர்களால் சூழப்பட்டிருந்த காந்தியார் அவர்கள் பேச்சை நம்பி ஒரு முழு ஸநாதனவாதியாகவே இருந்தார். நாராயணகுரு அவர்களோடு நடந்த உரையாடலால் பார்ப்பனர்களின் ஆதிக்க வெறியையும், பெரும்பான்மை மக்கள் மீது, மதம், கடவுள் பெயரால் நிகழ்த்தும் கொடுமைகளையும் காந்தியார் உணர்ந்தார்.

காந்தியார் பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்டவர்கள் பக்கம் தன் பார்வையைத் திருப்பிய வரலாற்றை இந்த சந்திப்பு ஏற்படுத்தியது. முழுமையான ஸநாதன வாதியாக இருந்த அவரை அடியோடு மாற்றியது இந்த நிகழ்வு வைக்கம் தெருக்களிலும், திருவாங்கூர் நாட்டில் இருக்கும் மற்ற ஊர்களின் கோயில் தெருக்களில் கீழ் ஜாதியினர் ஜாதிய அடிப்படையில் தடுக்கப்படுவதையும், தீண்டாமை, காணாமை, கல்லாமை போன்ற கொடுமைகளைப் பற்றியும் காந்தியார் உணர இந்தப் பயணம் உதவியது. ‘தீண்டாமை ஒழிப்பு’ என்ற ஆயுதத்தை காந்தியார் கையில் எடுக்கவும், தீவிரமாக அதில் ஈடுபடவும் நாராயண குரு, தந்தை பெரியார் சந்திப்புகள் ஒரு முக்கியக் காரணம்.

மத மாற்றத்தைப் பற்றி நாராயண குருவிடம், காந்தியார் வினவியபோது, “வேற்று மதத்துக்காரன் நம்மை தொட்டுத் தழுவுகிறான். நம் மதக்காரனோ தீண்டாமை என்றும், காணாமை என்றெல்லாம் கூறி நம்மை அந்நியனாக நடத்துகிறான்” என்றெல்லாம் விளக்கினார். முழு ஸநாதனவாதியாகவும், பார்ப்பனர் அடிமையாகவும் இருந்த காந்தியாரை அடியோடு மாற்றினார் நாராயண குரு. (காந்தியார் கொலை செய்யப்பட்டபோது தந்தை பெரியார், “இருந்த காந்தி வேறு, இறந்த காந்தி வேறு” என்று குறிப்பிட்டது முக்கியத்துவம் வாய்ந்தது.

நாராயண குருவின் பிரதம சீடர் டாக்டர் பல்பு. அவர் இயற்பெயர் பத்மநாபன். கீழ்ஜாதியான ஈழவ சமூகத்தை சேர்ந்தவர். நல்ல பெயர்களை வைத்துக் கொள்ள ஜாதிய சட்டத் தடை இருந்ததால் “பல்பு” (Palpu) என்று அவர் பெயரை பெற்றோர் மாற்றினர். நன்றாகப் படித்த அவர் ‘மருத்துவராக ஆக வேண்டும்’ என்ற ஆசைப்பட்டார். ஆனால், ஈழவ சமூகத்தினரான அவரை திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் சேர்க்க மறுத்து விட்டனர். சென்னையில் (Madras Presidency) இருந்த (ஆங்கிலேயர் ஆட்சி) மெட்ராஸ் மெடிகல் காலேஜில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த அவருக்கு ஒரு கட்டத்தில் திருவாங்கூர் அரசர் மூலம் திருநாள் மகாராஜாவே பொருளுதவி செய்து படிக்க வைத்தார்.

(Ref: Being Middle class in India – A way of Life Oxan Page 233)

சென்னையில் DMES படிப்பு முடித்து, திருவாங்கூர் திரும்பிய அவர் மருத்துவப் பணியாற்ற விழைந்து திவான் மாதவராவ் அவர்களை பல்பு அணுகினார். அந்தப் பார்ப்பனர், “நீ ஈழவன், மருத்துவத் தொழில் எல்லாம் செய்ய முடியாது” என்று சொன்னதோடு நில்லாமல், “நான்கு தென்னங்கன்றுகளைக் கொடுக்கிறேன். அதை வைத்துப் பிழைத்துக்கொள்” என்று ஜாதித் திமிரோடு கூறினார்.

(Ref: En.M.Wikipedia.org)

டாக்டர் பல்பு சில ஆங்கிலேய அதிகாரிகள் உதவியால் இங்கிலாந்திற்கு மேல் படிப்புப் படிக்கச் சென்றார். F.R.I.D.H. என்ற உயர்ந்த படிப்பு முடித்து நாடு திரும்பிய அவர் மைசூர் சமஸ்தானத்தில் பணியில் சேர்ந்தார். அந்த மாநில மருத்துவத் துறையில் மிகப் பெரிய பொறுப்புக்கு வந்தார். அப்பொழுது பெங்களூரில் ‘பிளேக்’ என்ற கொடுந்தொற்று வந்தது. அதை மிகவும் திறமையாகக் கையாண்டு, முழுமையாக நோயைக் கட்டுப்படுத்தினார். ஜாதியை முன்வைத்து பெயர் கூட வைக்க முடியாத நிலையில் இருந்தவர், அரசுப் பணியைக் கூட ஜாதியினால் இழந்தவர், ஒரு திறமை வாய்ந்த அதிகாரியாக மக்களின் நோய் தீர்த்து, மகிழ்ச்சியில் ஆழ்த்தும் நிலைக்கு அவர் வளர காரணம், அவருக்கு வாய்ப்பு கிடைத்ததால்தான்.

அதை நன்கு உணர்ந்திருந்த அவர் பத்திரிகைகளில் ஈழவ மக்களின் துயரங்களைப் பற்றியெல்லாம் அடிக்கடி எழுதினார். 1896இல் ஈழவ மக்களைத் திரட்டி, 13,176 பேரிடம் கையெழுத்துப் பெற்று, ஈழவ மக்களுக்குக் கல்வி வாய்ப்பு மறுக்கப்படுவதைப் பற்றி அரசின் கவனத்திற்குக் கொண்டு போனார். ஆனால், அது பயனளிக்கவில்லை. அதனால், காந்தியாருக்கும், லார்ட் கர்சனுக்கும் கடிதம் எழுதினார். இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு, நாடாளுமன்றத்திலும் இந்தப் பிரச்சினையைப் பேச வைத்தார். ஈழவ மக்கள் தொகையும், அவர்களின் கல்வியின்மைப் பற்றியும், அரசுப் பள்ளிகளில் ஜாதியின் காரணமாக அனுமதி மறுக்கப்படுவதையும், குலத் தொழிலான ‘கள்’ இறக்குவதை மட்டுமே செய்ய வேண்டும் என்ற சமூக வற்புறுத்தலையும் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

திவான் சங்கர சுப்பையாவிடம் இந்த விவரங்கள் அடங்கிய மனுக்களை டாக்டர் பல்பு கொடுத்தார். சுமார் 20 சதவீத மக்கள் கல்வியில் பின்தங்கியுள்ளதைத் தெளிவாக அந்த மனுக்கள் விவரித்தன. திவான் சங்கர சுப்பு ஒரு பார்ப்பனர், ஈழவ மக்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் உரிமை கொடுப்பதாக உறுதியளித்த அவர், தன் வாக்கைக் காப்பாற்றவில்லை. அதனால், வெகுண்ட டாக்டர் பல்பு  “சிறீநாராயண குரு தர்ம பரிபாலனம்” (SNDP) என்ற அமைப்பை நிறுவி, அதன் மூலம் பல கல்விக் கூடங்களைத் திறந்து ஈழவ மக்கள் கல்விக்கு வழி வகுத்தார். அதனால், “ஈழவ மக்களின் அரசியல் தந்தை” (Political Father of Ezhavas”) என்று போற்றப்பட்டார்.

(Ref: www.wikivisualy.com, www.deccanherald.com.pulpu, wikipedia.org.)

(தொடருவேன்…)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *