புதுடில்லி, பிப்.12 தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழை வளர்ப்பதற்காகப் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. தமிழ்நாட்டுக்கு வெளியேயும் தமிழ் பாடங்கள் நடத்த குறிப்பிட்ட தொகை வைப்பு நிதியாக அளிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் அசாம், உத்தரப் பிரதேசம், ஆந்திரா, கேரளா, ஒடிசா போன்ற மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் போதிக்கப்படுகிறது.
தமிழ்ப் பாடம்
கடந்த 1977-1978 நிதியாண்டில் தலா ரூ. 3 லட்சம் நிதியுதவியுடன் வாரணாசியின் பழமையான 3 பல்கலைக்கழகங்களில் தமிழ் பாடங்கள் போதிக்க முடிவு செய்யப்பட்டது. இவற்றில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (பிஎச்யு) மட்டுமே சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழைப் போதிக்கிறது. சம்பூர்ணானந்த் சமஸ்கிருதப் பல்கலைக் கழகம், காசி வித்யா பீடம் ஆகியவற்றுக்கு நிதி அளித்தும் பலன் இல்லை. ஆந்திராவின் குப்பம் நகரில் உள்ள திராவிடப் பல்கலைக்கழகம், திருப்பதி சிறீ வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகம் ஆகியவற்றிலும் தமிழ் பேராசிரியர்களுக் கான 4 பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இது குறித்து தமிழ் வளர்ச்சித் துறை முன்னாள் இயக்குநரும், தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவருமான கணை யாழி மா. இராசேந்திரன் கூறுகையில்:
“சென்னை பல்கலைக்கழகத்தில் இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட வட மொழிகளுக்காகத் தமிழ்நாடு அரசே செலவிடுவது போல், பிற மாநிலங்களில் தமிழ் போதிக்க அந்தந்த மாநில அரசுகளே முன்வர வேண்டும்.
மேலும், காசி தமிழ்ச் சங்கமம் 4.0-இல் வாரணாசி பள்ளிகளில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின் பேரில் குறுகிய நாட்களுக்காகத் தமிழ் மொழி கற்பிக்கப்பட்டது. கூடுதலாக ஏற்கனவே உ.பி. உள்ளிட்ட மாநில உயர் கல்வி நிலையங்களில் போதிக்கப்பட்ட தமிழுக்கான தடையைப் பிரதமர் மோடி தலையிட்டு நீக்கலாம்” என்றார்.
விடுதலை அடைந்த பிறகு நாட்டின் மத்திய பல்கலைக்கழகங்களிலும் தமிழ்ப் பாடங்கள் போதிக்க ஒன்றிய அரசு முடிவு எடுத்தது. இதன் பலனாக உ.பி., பஞ்சாப், டில்லி மற்றும் கேரளாவின் ஒன்றிய அரசின் கீழ் வரும் பல்கலைக்கழகங்களில் ‘நவீன இந்திய மொழிகள் துறை’ எனும் பெயரில் தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளுக்காகவும் துறைகள் தொடங்கப்பட்டுச் செயல்படுகின்றன.
காலி பணியிடம்
பிரயாக்ராஜின் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இன்னும் தமிழ் பேராசிரியர் பணிக்கு எவருமே அமர்த்தப் படவில்லை. ஒன்றிய அரசின் டில்லி பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் தலா 2 பேராசிரியர்கள் ஓய்வு பெற்ற பிறகு அந்த இடங்கள் நிரப்பப்படவில்லை.
இப்பிரச்சினையில் அப்பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் தமிழர்கள் மற்றும் தமிழ்ப் பேராசிரியர்கள், டில்லி பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் 3 மாதங்களுக்கு முன் அளித்த மனு மீது இது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
