சர்க்கரைக் கோளாறும், ஈறு சம்பந்தமான கோளாறும் ஒன்றுடன் ஒன்று நேரடியாக தொடர்பு உடையவை என பல ஆய்வுகள் கூறுகின்றன.
கட்டுப்பாடற்ற சர்க்கரை கோளாறால் ரத்தத்தில் அதிகமான சர்க்கரை இருக்கும். இதனால், ஈறுகளுக்கு வரும் ரத்தத்தில் உள்ள அதிகமான சர்க்கரை காரணமாக, அதிக அளவில் பாக்டீரியாக்கள் தங்கி, ஈறுகளில் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதே போல அதிகப்படியான ஈறு தொற்று, ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கவும் செய்யும்.
சர்க்கரை கோளாறு உள்ளவர்களுக்கு, எச்சில் சுரப்பது குறைவதால், வாயில் வறட்சி ஏற்படலாம். வாயில் எரிச்சல், புண் ஏற்படலாம்; ஈறுகள் வீங்கி தொற்று ஏற்பட்டு ரத்தக்கசிவு ஏற்படலாம். ஈறுகளில் ஏற்படும் தொற்று, பற்களை சுற்றியுள்ள எலும்பு மற்றும் வெளிப்புறத் திசுக்களில் தொற்றை ஏற்படுத்த, ஈறுகளில் கொப்பளங்களாக மாறலாம்.
கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை கோளாறு உள்ளவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். எச்சிலில் உள்ள அதிகப்படியான சர்க்கரை யில் பூஞ்சைகள் நன்றாக உயிர் வாழும். இதனால் எளிதாக பூஞ்சை தொற்று ஏற்பட்டு, வாயில் ஆங் காங்கே வெள்ளை நிறத் திட்டுகள் காணப்படும். வாயில் காயம் ஏற்பட்டால், குணமாக அதிக நாட்கள் ஆகலாம். சாப்பிடும் உணவுகளின் சுவை மாறு படலாம். புகை பழக்கம் உள்ளவர்களுக்கு இப்பிரச் சினைகள் பல மடங்கு அதிகமாக இருக்கும்.
எந்த அளவிற்கு சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்கிறோமோ, அந்த அளவிற்கு ஈறு அல்லது பிற வாய் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படாது.
தினமும் இரு வேளை மென்மையான பிரஷைக் கொண்டு பற்களைத் துலக்க வேண்டும். ஈறு பிரச்னை ஆரம்ப நிலையில் இருந்தால், ‘பிளாசிங்’ முறையை, பல் மருத்துவர் ஆலோசனையுடன் தினமும் உபயோ கிக்க வேண்டும். வெதுவெதுப்பான உப்பு தண்ணீரில் வாயை இரவு நேரங்களில் கொப்பளிக்கலாம்.
ஆண்டிற்கு இரு முறை பல் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்யும் போது, சர்க்கரை கோளாறு உள்ள விஷயத்தையும், சமீபத்தில் எடுக்கப் பட்ட சர்க்கரையின் அளவையும் தவறாமல் தெரியப் படுத்த வேண்டும்.
ஈறு தொடர்பான பிரச்னைகளை ஈறு சிகிச்சை நிபுணரிடம் ஆலோசிக்க வேண்டும். நம் பற்களை உறுதியாக வைத்திருப்பது ஈறுகள் தான். ஆகையால், ஈறு பிரச்னைகளை கவனிக்காமல் விட்டு விட்டால், இயற்கையான பற்களை இழக்க நேரிடும்.