இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான யந்திரா இந்தியா லிமிடெட் (YIL) மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். இந்திய ராணுவத்திற்கு தேவைப்படும் வெடி பொருட்கள், பீரங்கி செய்ய தேவையான தளவாட பொருட்கள், அதிநவீன ஆயுதங்கள் ஆகியவற்றை இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் தமிழகத்திலும் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு ஆயுத தொழிற்சாலைகளில் 2026ஆம் ஆண்டிற்கான தொழிற்பயிற்சி (அப்ரண்டைசிப்) வழங்கப்படவுள்ளது.
காலியிடங்கள் விவரம்: இந்த புதிய அறிவிப்பின்படி இந்தியா முழுவதும் உள்ள மொத்தம் 3,979 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த காலியிடங்களில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு 1136 இடங்களும் , ஐடிஐ தொழில் படிப்பை முடித்தவர்களுக்கு 2843 இடங்களும் உள்ளன. தமிழ்நாட்டில் திருச்சி மற்றும் சென்னை ஆவடியில் உள்ள ஆயில் தொழிற்சாலைகளில் 236 காலியிடங்கள் உள்ளன. தமிழகத்தில் இருந்து கொண்டே மத்திய அரசு நிறுவனத்தில் பயிற்சி பெறும் வாய்ப்பு எதிர்காலத்திற்கு பெரிதும் முன்னேற்றமளிக்க கூடியதாக இருக்கும்.
வயது வரம்புகள்: இந்த பயிற்சிக்காக விண்ணப்பம் செய்ய இருப்பவர்கள் 03.03.2026 அன்று குறைந்தபட்சம் 14 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபட்சமாக 35 வயது வரை இருக்கலாம்.
கல்வித் தகுதி: அய்டிஅய் பிரிவு விண்ணப்பதாரர்கள் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், என்சிவிடி அல்லது எஸ்சிவிடி மூலம் அங்கீகாரம் பெற்ற தொழிற்பயிற்சி நிறுவனத்தில் 50% மதிப்பெண்களுடன் அய்டிஅய் தொழிற்கல்வியை முடித்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு சேர்ந்த விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பத்தாம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் தனித்தனியாக 40 % மதிப்பெண்களை குறைந்தபட்சமாக பெற்றிருப்பது அவசியம்.
தேர்வு செய்யப்படும் முறை: அய்டிஅய் மற்றும் 10ஆம் வகுப்பு விண்ணப்பதாரர்களுக்கு தனியாக எந்த ஒரு எழுத்து தேர்வும் நடத்தப்படாது. இவர்கள் அவர்களின் படிப்புகளில் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு மருத்துவப் பரிசோதனைகள் ஆகிய சோதனைகள் மூலம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்படுவார்கள். இந்த பயிற்சியில் சேர்வதற்கு உடற்தகுதி கட்டாயமாகும். இறுதியாக பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் , மாதந்தோறும் உதவித்தொகை ஒன்றையும் பெறுவார்கள்.
உதவித்தொகை விவரம்: 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.8,200, அய்டிஅய் முடித்தவர்களுக்கு மாதம் ரூ.9,600 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க: ஒன்றிய அரசின் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள விணப்பதாரர்கள் ஒன்றிய அரசின் https://www.apprenticeshipindia.gov.in போர்ட்டலில் முதலில் தங்களது விவரங்களை பதிவு செய்திருக்க வேண்டும். அதில் உள்ள பதிவு எண்ணை பயன்படுத்தி யந்திரா இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.recruit-gov.com/ மூலம் ஆன்லைனில் இன்றே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 03.03.2026
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.200 மற்றும் பெண்கள், எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.100 மட்டுமே கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்திற்கு ஆயுதங்கள் தயாரிக்கும் மத்திய அரசு நிறுவனத்தில் பயிற்சி பெறும் அனுபவம் , எதிர்காலத்தில் பெரிய நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு முக்கிய துருப்பு சீட்டாக இருக்கும்.
